சித்ரகார் என்பவர் இயக்கத்தில் 1966 ஆம் ஆண்டு வெளிவந்த உத்தர் புருஷ் என்ற வங்காளப் படத்தின் அடிப்படைக் கதை மிகவும் பிடித்துப் போக, அதைத் தமிழில் தயாரிக்க உரிமம் பெற்றது ஏவிஎம் நிறுவனம். அதைத் தமிழுக்கு ஏற்ற மாதிரி மாற்றும் வேலையை ஜாவர் சீத்தாராமனிடம் ஏவிஎம் கொடுக்க , அவர் எழுதிய திரைக்கதை ரொம்ப பிரமாதமாக வந்து விட்டது
ஊருக்குள் உயர்ந்த மனிதராக இருக்கும் செல்வந்தர் ஒருவரை காதலித்து , கர்ப்பமாகி, கொல்லப்பட்ட ஒரு பெண்ணின் மகன் தன் தந்தையின் வீட்டிலேயே வேலைக்காரனாக இருக்க, உண்மை உணர்ந்த ஒரு டாக்டர் அதை செல்வந்தரிடம் சொன்னாரா இல்லையா? நடந்தது என்ன என்பதே படத்தின் ஒன் லைன் .
சிவாஜியை விட்டால் அந்த செல்வந்தர் கேரக்டருக்கு ஆள் இல்லை என்று முடிவு செய்து சிவாஜியிடம் முழுக்கதையையும் சொன்னார்கள். வழக்கம் போலவே ஆர்வத்துடன் கதை கேட்ட சிவாஜி , ”அந்த டாக்டர் கேரக்டரில் யார் நடிக்கிறார்?” என்று கேட்டார்.
ஏவிஎம் சரவணன் . ” எஸ்.ஏ.அசோகனை போடலாம் என்று இருக்கிறேன் ” என்றார் , காரணம் அசோகனும் ஏவிஎம் சரவணனும் நல்ல நண்பர்கள் .
சற்று நேரம் யோசித்த சிவாஜி , “அந்த டாக்டர் கேரக்டர் நான் பண்றேன்.. ஹீரோவா அசோகன் போட்டுக்குங்க” என்று சொல்ல ஆடிப் போனார் ஏவிஎம் சரவணன் . தொடர்ந்து சிவாஜி “அந்த டாக்டர் கேரக்டருக்கு என்ன சம்பளம் நீங்க நினைச்சு இருக்கீங்களோ, அது போதும்” என்றார்
” இல்ல சார் . ஹீரோவா நீங்க பண்ணாதான் நல்லா இருக்கும். டாக்டர் கேரக்டர் நாலே சீன்தான் ” என்று சரவணன் சொல்ல, சிவாஜி ” பரவால்ல . அந்த டாக்டர் கேரக்டர்தான். எனக்கு பிடிச்சு இருக்கு ” என்று சொல்கிறார் .
சரவணன் மீண்டும் மற்ற கதாபாத்திரங்கள், டெக்னீசியன்கள் லிஸ்ட், அவர்களுக்கான சம்பளம் . அசோகனை ஹீரோவாகப் போட்டால் பிசினஸ் எவ்வளவு குறையும் என்பதை எல்லாம் சொன்ன பிறகு, அரை மனதோடு ஹீரோவாக நடிக்க சம்மதித்தார் சிவாஜி.
அசோகனே அசந்து போய் , ” என்ன இப்படி சொல்லி இருக்காரு . இதுல ஏதும் வில்லங்கம் இருக்குமோ ?” என்று ஏவிஎம் சரவணனிடம் கேட்க ,”சேச்சே… அப்படி எல்லாம் இல்லை . இத்தனை படங்கள் ஹீரோவாக நடித்த பிறகும் அவர் நேசிப்பது கேரக்டர்களைத்தான்” என்று நெகிழ்ந்திருகிறார் ஏவிஎம் சரவணன்.
அதோடு நிறுத்தவில்லை சிவாஜி .
ஷூட்டிங் ஸ்பாட்டில் அந்த டாக்டர் கேரக்டரில் எப்படி நடிக்க வேண்டும் எந்த காட்சியில் எப்படி வசனம் பேச வேண்டும் என்று அசோகனுக்கு முழுக்க முழுக்க சொல்லிக் கொடுத்திருக்கிறார். அசோகன் நடித்த ஒவ்வொரு ஷாட்டிலும் உடன் இருந்து கவனித்தாராம் சிவாஜி .
இதில் ஆச்சர்யம் என்ன என்றால் உயர்ந்த மனிதன் சிவாஜியின் 125 படம். ஒருவேளை அந்த டாக்டர் கேரக்டரிலேயே சிவாஜி நடித்து இருந்தால் …
நூறாவது படமான நவராத்திரியில் ஒன்பது வேடங்களில் நடித்து உலக சாதனை செய்த சிவாஜி , தனது 125 படத்தில் நான்கே காட்சிகளில் வந்திருப்பார் .
இது ஒன்றும் சிவாஜிக்கு புதியதில்லை
பராசக்தி படம் பாதியில் நிறுத்தப்பட்டு சிவாஜிக்கு பதில் கே.ஆர்.ராமசாமியைப் போடலாம் என்று முடிவெடுக்கப் பட்டபோது வருந்திக் கண்ணீர் விட்டவர் சிவாஜி .
பராசக்தி படம் சிவாஜி நடிப்பில் வந்து மாபெரும் வெற்றி பெற்ற நிலையில் கே.ஆர்.ராமசாமியை சந்தித்து , ” அண்ணே .. உங்க படத்தில் ஒரு கேரக்டர்ல நடிக்கணும்” என்றதும், அதிர்ந்து போய் விட்டார் கே.ஆர்.ராமசாமி
“கணேசா… நீ இப்ப மிகப் பெரிய ஹீரோப்பா. என் படத்துல நீ கேரக்டர் பண்றதா . போப்பா ” என்று சொல்லி இருக்கிறார் கே.ஆர்.ராமசாமி
“இல்லண்ணே.. ஒருவேளை பராசக்தி படத்தில் நீங்களே ஹீரோவா நடிச்சு இருந்தா, அந்த படத்துல எனக்கு எதாவது ஒரு சின்ன கேரக்டர்தானே கொடுத்து இருப்பாங்க. அதையும் நான் பண்ணனும் ” என்று சொல்லி அப்படியே நடித்தார் .
அந்தப் படம் துளி விஷம் . அதில் கே.ஆர்.ராமசாமி ஹீரோ .
இதில் ஆச்சரியம் என்னவென்றால் பராசக்தி என்ற முதல் படத்திலேயே ஹீரோவாக அறிமுகமாகி ஒரே இரவில் ஸ்டாராக மாறிய சிவாஜிக்கு, துளி விஷம் பதினாலாவது படம் ஆம் பதிமூன்று படங்கள் ஹீரோவாக நடித்த பிறகு சிவாஜி நடித்த படம் துளிவிஷம்.
நம்ம சிவாஜி என்ற உணர்வை தள்ளி வைத்து விட்டு பொதுப் படையாக பார்த்தாலும், சிவாஜிக்கு இருந்தது போன்ற ஒரு நடிப்பு ஆளுமை உலக அளவில் எந்த ஒரு ஹீரோவிடமும் இருந்ததில்லை.
