வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு எதிராக நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்பிக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. கூட்டம் தொடங்கியதுமே தமிழ்நாடு, மேற்கு வங்கம் உட்பட தேர்தலை எதிர்கொள்ளும் மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி எம்பிக்கள் மக்களவையில் வலியுறுத்தினர்.
ஆனால் அவை தலைவர் மறுப்பு தெரிவித்ததால் எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டனர்.
இதனால் நேற்று ஒரு நாள் முழுவதும் அவை நடவடிக்கைகள் முடங்கின. இந்த அமளிக்கு மத்தியில் மணிப்பூர் ஜிஎஸ்டி மசோதா மட்டும் தாக்கல் செய்யப்பட்டு குரல் வாக்கெடுப்பு மூலம் ஒப்புதல் பெறப்பட்டது.
தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்று (டிசம்பர் 2) காலை அவை கூடியது. இன்றும் எஸ்ஐஆர் குறித்து விவாதிக்க வேண்டும் என்று எதிர் கட்சியினர் வலியுறுத்தினர்.
இதற்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டதால் அவையின் மையப்பகுதியில் கூடிய எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கோஷங்களை எழுப்பி அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவை 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
12 மணிக்கு அவை கூடிய போது மீண்டும் அமளியில் ஈடுபட்டதால் 2 மணி வரை மக்களவை ஒத்திவைக்கப்பட்டது.
இதற்கிடையே இன்று காலை நாடாளுமன்ற வளாகத்தில் எஸ்ஐஆர் பணிகளுக்கு எதிராக இந்திய கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, தமிழக எம்பிக்கள் டி.ஆர்.பாலு, கனிமொழி உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே செய்தியாளர்களிடம் கூறுகையில், ஜனநாயகம் பாதுகாக்கப்பட மற்றும் அநீதிக்கு எதிரான எங்களுடைய போராட்டம் தொடரும் என்று தெரிவித்தார்.
