தமிழகத்தில் நாளை முதல் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (SIR) பணிகளை புறக்கணிக்க உள்ளதாக வருவாய்த்துறை சங்கம் அறிவித்துள்ளது.
தமிழ்நாடு, உள்ளிட்ட 9 மாநிலங்கள், மற்றும் 3 யூனியன் பிரதேசங்களில் கடந்த 4ம் தேதி தொடங்கி வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தமான SIR பணிகள் நடைபெற்று வருகிறது. இதைத்தொடர்ந்து வீடு வீடாக கணக்கிட்டு விண்ணப்பங்களை வழங்கி அவற்றை பூர்த்தி செய்து திரும்ப பெறும் பணிகளில் வாக்குசாவடி நிலை அலுவலர்கள் ஈடுபட்டுத்தப்பட்டுள்ளனர்.
தமிழ்நாட்டில் மட்டும் மொத்தம் 6,41,14,587 வாக்காளர்கள் உள்ளனர். இதில் நேற்று ( நவம்பர் 16) மாலை 3 மணி வரை 6,00,54,300 படிவங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. மொத்தம் 68,467 வாக்குச் சாவடி நிலை அலுவலர்களும் 2,37,390 வாக்குச்சாவடி முகவர்களும் இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் அதிக எண்ணிக்கையிலான வாக்குச்சாவடி முகவர்களை நியமிக்குமாறு அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் வருவாய் துறையில் பணியாற்றும் ஊழியர்களின் சங்கங்களின் கூட்டமைப்பு தமிழகத்தில் நடந்துவரும் வாக்காளர் பட்டியலின் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) தொடர்பான அனைத்துப் பணிகளையும் நவம்பர் 18 முதல் புறக்கணிக்கப் போவதாக அறிவித்துள்ளது.
நிதி ஒதுக்கீடு, உரிய திட்டமிடல் மற்றும் பயிற்சி அளிக்காமல் SIR பணிகளை மேற்கொள்ள ஊழியர்களை நிர்பந்திப்பதால் பணிச்சுமை ஏற்படுவதாக குற்றம் சாட்டி உள்ளனர்.
இதனால் போதிய கால அவகாசம் வழங்க வேண்டும். கூடுதல் பணிகளை கருத்தில் கொண்டு ஒரு மாத ஊதியத்தை மதிப்பூதியமாக வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
இதனால் செவ்வாய்க்கிழமை (நவம்பர் 18) முதல், வட்டாட்சியர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள், ஆய்வாளர்கள் உட்பட வருவாய் துறை ஊழியர்கள் அனைவரும் SIR தொடர்பான படிவங்களைச் சேகரிப்பது, அவற்றை இணையத்தில் பதிவேற்றுவது மற்றும் மறுஆய்வுக் கூட்டங்களில் பங்கேற்பது போன்ற அனைத்துப் பணிகளையும் முற்றிலும் புறக்கணிக்கப் போவதாக அறிவித்துள்ளனர்.
இதனால் தமிகத்தில் வாக்காளர்களுக்கு கொடுத்த விண்ணப்பங்களை திரும்ப பெற்று பதிவேற்றம் செய்யும் பணிகளில் தாமதம் ஏற்படும் நிலை உருவாகி உள்ளது.
ஏற்கனவே கேரளாவில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணியில் ஈடுபட்டிருந்த வாக்குச்சாவடி நிலை அலுவலர் (BLO) அனீஷ் ஜார்ஜ் கடும் மன உளைச்சல் காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் நாளை முதல் SIR பணிகளை புறக்கணிப்பதாக வருவாய் துறை சங்கம் அறிவித்துள்ளது கவனம் ஈர்த்துள்ளது.
