மேற்கு வங்க மாநிலத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) 11 உயிர்களை குடித்துள்ள நிலையில், மாநில மக்கள் அனைவரும் தேர்தல் ஆணையம் தரும் படிவங்களை நிரப்ப வேண்டாம் என அம்மாநில முதல்வர் மமதா பானர்ஜி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தங்களது வாக்குரிமையைப் பறிக்கப் போகிறது என்ற அச்சத்தால் மேற்கு வங்க மாநிலத்தில் 11 பேர் தற்கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி உள்ளது.
இதனைத் தொடர்ந்து மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் அரசு, தேர்தல் ஆணையத்தின் இந்த SIR நடவடிக்கையை மிக கடுமையாக எதிர்த்து வருகிறது. அம்மாநில முதல்வர் மமதா பானர்ஜி தலைமையில் கொல்கத்தாவில் SIR-க்கு எதிராக பிரம்மாண்ட பேரணியும் நடத்தப்பட்டது.
இந்த சூழலில், கொல்கத்தாவில் தமது வீட்டில் தேர்தல் அலுவலர்கள் கொடுத்த SIR படிவத்தை தாம் பூர்த்தி செய்து கொடுத்ததாக வெளியான தகவல்களை மமதா பானர்ஜி திட்டவட்டமாக மறுத்துள்ளார். மேலும் 11 பேர் பலியாக காரணமான தேர்தல் ஆணையத்தின் SIR படிவங்களை மாநில மக்கள் யாரும் நிரப்பி தர வேண்டாம் எனவும் மமதா பானர்ஜி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
