வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் சார்பில் விளக்கமளிக்கப்பட்டு வருகிறது.
பீகாரை தொடர்ந்து 12 மாநிலங்களில் SIR எனப்படும் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தத்தை இந்திய தேர்தல் ஆணையம் மேற்கொள்ளவுள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு, மேற்கு வங்கம், புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களின் தேர்தல் ஆணையர்களிடம் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஆலோசனை செய்தார்.
அதைத்தொடர்ந்து வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து விரிவான விளக்கத்தையும் மாநிலங்களுக்கு அனுப்பி வைத்தது இந்திய தேர்தல் ஆணையம்.
இதுதொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் காணொலி காட்சி மூலம் நேற்று ஆலோசனை நடத்தினார்.
இந்தசூழலில் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் தங்களது மாவட்டத்தில் இருக்கும் அனைத்துக் கட்சி நிர்வாகிகளை அழைத்து வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து இந்திய தேர்தல் ஆணையம் அனுப்பிய விவரங்களுடன் விளக்கமளித்திருக்கின்றனர்.
இந்திய தேர்தல் ஆணையம் அனுப்பிய அந்த அறிக்கையில்,
வாக்காளர் தகுதி
இந்திய குடிமகன் ஆக இருக்க வேண்டும்.
குறைந்தது 18 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும்.
சம்பந்தப்பட்ட தொகுதியில் வழக்கமாக வசிப்பவராக இருக்க வேண்டும்.
எந்த சட்டத்தின் படியும் தகுதி நீக்கம் செய்யப்பட்டவராக இருக்கக்கூடாது.
SIR ஏன் அவசியம்?
சட்டத்தின் படி,ஒவ்வொரு தேர்தலுக்கும் முன் அல்லது தேவைப்படும் போது வாக்காளர் பட்டியல்கள் திருத்தப்பட வேண்டும்.
அரசியல் கட்சிகள், வாக்காளர் பட்டியல்களின் தரம் குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகின்றன.
ஏற்கனவே 1951 -2004 வரை மொத்தம் 8 முறை சிறப்பு தீவிர திருத்தமானது மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கடைசியாக 2002–2004 காலகட்டத்தில், அதாவது 21 ஆண்டுகளுக்கு முன்பு சிறப்பு தீவிர திருத்தமானது நடைபெற்றது.
இதற்கிடையில் வாக்காளர் பட்டியல்களில் பல்வேறு மாற்றங்கள் கீழ்கண்ட காரணங்களால் ஏற்பட்டுள்ளன, அவை:
•தொடர்ச்சியான இடமாற்றம்.இதனால் ஒரே வாக்காளர் பல இடங்களில் பதிவு
  செய்யப்பட்டிருப்பது
•இறந்த வாக்காளர்கள் நீக்கப்படாதது
•வெளிநாட்டவர்களின் தவறான சேர்ப்பு
SIR முக்கிய செயற்பாட்டாளர்கள்
ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் சுமார் 1,200 வாக்காளர்கள் இருப்பார்கள்.
ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் வாக்குச்சாவடி நிலை அலுவலர் (BLO) நியமிக்கப்படுவார்.
ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கும் ஒரு வாக்காளர் பதிவு அலுவலர் (ERO)இருப்பார்.
வாக்காளர் பதிவு அலுவலர் உட்கோட்ட நிர்வாக நடுவர் நிலை அதிகாரி (SDM) ஆவார்; அவர் சட்டமுறைகளின்படி சட்டபூர்வமாக கீழ்கண்ட பணிகளை மேற்கொள்வார்:
ஒவ்வொரு வட்டத்திற்கும் ஒரு உதவி வாக்காளர் பதிவு அலுவலர் இருப்பார்.
மாவட்ட தேர்தல் அதிகாரி/ மாவட்ட நிர்வாக நடுவர் வாக்காளர் பதிவு அலுவலர்கள் வழங்கிய முடிவுக்கு எதிரான முதல் மேல்முறையீட்டை விசாரிப்பார்.தலைமைத் தேர்தல் அதிகாரி, மாவட்ட தேர்தல் அதிகாரி/ மாவட்ட நிர்வாக நடுவர் வழங்கிய முடிவுக்கு எதிரான இரண்டாம் மேல்முறையீட்டை விசாரிப்பார்.
செயல்முறைகள்
வாக்காளர் பதிவு அலுவலர்கள் / உதவி வாக்காளர் பதிவு அலுவலர்களின் பணி
அக்டோபர் 27, 2025 தேதியன்று வாக்காளராக பதிவுசெய்யப்பட்டுள்ள ஒவ்வொரு வாக்காளருக்கும் தனித்துவமான கணக்கெடுப்பு படிவங்கள் அச்சிடுதல்.
இந்த கணக்கெடுப்பு படிவங்கள் தற்போதைய வாக்காளர் பட்டியலில் உள்ள தேவையான விவரங்களை கொண்டிருக்கும்.
வாக்குச்சாவடி நிலை அலுவலர்களின் பணி:
ஒவ்வொரு தற்போதைய வாக்காளருக்கும் கணக்கெடுப்பு படிவங்களை வழங்குதல்.
வாக்காளர் அல்லது அவர்களின் உறவினரின் பெயரை 2002–2004 ஆம் ஆண்டில் நடைபெற்ற கடைசி சிறப்பு தீவிர திருத்தப் பட்டியலில் உள்ள பெயருடன் இணைத்து சரிபார்க்க உதவுவது.
இந்த பணிக்காக வாக்குச்சாவடி நிலை அலுவலர்களும் வாக்காளர்களும் முந்தைய சிறப்பு தீவிர திருத்த தரவினை பெறுவதற்கு இந்திய தேர்தல் ஆணைய தரவுத்தளத்தினை (https://voters.eci.gov.in/) அணுகலாம்.
வாக்குச்சாவடி நிலை அலுவலர்களின் பணி
கணக்கெடுப்பின் போது புதிதாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க கோருபவர்களுக்கு படிவம் 6 மற்றும் அதற்கான உறுதி மொழி படிவத்தினை வழங்குவர்.
வாக்காளர் கணக்கெடுப்பு படிவத்தினை நிரப்ப உதவுவர், மேலும் அப்படிவத்தினைச் சேகரித்து வாக்காளர் பதிவு அலுவலர்/உதவி வாக்காளர் பதிவு அலுவலர்க்கு சமர்ப்பிப்பர்.
ஒவ்வொரு வாக்காளரின் வீட்டிற்கும் குறைந்தது மூன்று முறை சென்று சரிபார்ப்பர்.
இறந்தவர்கள், நிரந்தரமாக இடம்பெயர்ந்தவர்கள் மற்றும் ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் பதிவு செய்தவர்கள் ஆகியோரைக் கண்டறிவர்.
வாக்காளர்கள் குறிப்பாக, நகர்புற வாக்காளர்கள் அல்லது தற்காலிக இடம் பெயர்ந்தவர்கள் இணையதளம் மூலமாகவும் கணக்கெடுப்பு படிவத்தை நிரப்பலாம்.
கணக்கெடுப்பு படிவம் தவிர, எந்தவொரு பிற ஆவணங்களும் கணக்கெடுப்பு காலத்தில் சேகரிக்கப்பட தேவையில்லை.
வாக்காளர் பதிவு அலுவலர்கள் / உதவி வாக்காளர் பதிவு அலுவலர்களின் பணி :
கணக்கெடுப்பு படிவங்கள் பெறப்பட்ட அனைத்து வாக்காளர்களின் பெயர்களையும் வரைவு வாக்காளர் பட்டியலில் சேர்ப்பது.
கடந்த சிறப்பு தீவிர திருத்தப் பட்டியலில் பெயர் பொருந்தாத / இணைக்கப்படாத வாக்காளர்களுக்கு அறிவிப்புகள் வழங்குவது.
அவ்வாறு அறிவிப்பு வழங்கிய இனங்களுக்கு தகுதியின் அடிப்படையில் விசாரித்து, அவர்களின் பெயரை இறுதி வாக்காளர் பட்டியலில் சேர்ப்பது அல்லது நீக்கம் செய்வது குறித்து முடிவு செய்வது.
வாக்காளர் பதிவு அலுவலர்கள் / உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள் உறுதிப்படுத்த வேண்டியது:
எந்த தகுதியான குடிமகனும் தவறவிடப்படக்கூடாது.
எந்தத் தகுதி அற்ற நபரும் சேர்க்கப்படக்கூடாது.
வாக்காளர் பதிவு அலுவலர் வழங்கிய முடிவுக்கு எதிரான முதல் மேல்முறையீட்டை மாவட்ட தேர்தல் அதிகாரி/ மாவட்ட நிர்வாக நடுவர் விசாரிப்பார்.
மாவட்ட தேர்தல் அதிகாரி/ மாவட்ட நிர்வாக நடுவர் வழங்கிய முடிவுக்கு எதிரான இரண்டாம் மேல்முறையீட்டை தலைமை தேர்தல் அதிகாரி விசாரிப்பார்.
கணக்கெடுப்பு முன் கட்டம் (Pre-Enumeration Phase)
வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள், வாக்காளர் பதிவு அலுவலர்கள் மற்றும் மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு பயிற்சி வழங்கப்படும்.
வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வாக்காளர் விவரங்களை முந்தைய சிறப்பு தீவிர திருத்த பட்டியலில் உள்ள விவரங்களுடன் பொருத்தம் / இணைப்பு செய்வர்.
ECINET மூலம் முந்தைய SIR உடன் கணினி வழி பொருத்தம் / இணைப்பு (Computer Matching/Linking) செய்யப்படும்.
அரசியல் கட்சிகளின் பங்கேற்றல்
தலைமை தேர்தல் அதிகாரி, மாவட்ட தேர்தல் அதிகாரி மற்றும் வாக்காளர் பதிவு அலுவலர்கள் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளையும் சந்தித்து, சிறப்பு தீவிர திருத்த செயல்முறையை விரிவாக விளக்குவார்கள்.
அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் நியமிக்கும் வாக்குச்சாவடி நிலை முகவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்.
வாக்குச்சாவடி நிலை முகவர்கள் வாக்காளர்களிடமிருந்து முறையாக நிரப்பப்பட்ட கணக்கெடுப்பு படிவங்களை தினமும் சேகரித்து, ஒருநாளைக்கு அதிகபட்சம் 50 படிவங்கள் வரை சான்றளித்து வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு சமர்ப்பிக்கலாம்.
கணக்கெடுப்பு கட்டம் (Enumeration Phase)
கணக்கெடுப்பு படிவங்களை அச்சிடுதல், விநியோகித்தல், வாக்காளர் விவரங்களை பொருத்தம்/இணைப்பு செய்தல் மற்றும் பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை சேகரித்தல்.
ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் அதிகபட்சம் 1,200 வாக்காளர்கள் மட்டுமே இருப்பதை உறுதி செய்வதற்காக வாக்குச்சாவடிகளை மறுசீரமைத்தல்.
வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு (Publication of Draft Electoral Rolls)
கணக்கெடுப்பு படிவங்கள் பெறப்பட்ட அனைத்து வாக்காளர்களின் பெயர்களும் வரைவு வாக்காளர் பட்டியலில் (Draft Rolls) சேர்க்கப்படும்.
இல்லாதவர்கள் / இடம் பெயர்ந்தவர்கள்/ இறந்தவர்கள் / இருமுறை பதிவு செய்யப்பட்டவர்கள் ஆகியோரின் பெயர்கள் வரைவு பட்டியலில் இடம்பெறாது; அந்த விவரங்கள் தலைமைத் தேர்தல் அதிகாரி இணையதளத்தில் மற்றும் அரசு அலுவலகங்களில் வெளியிடப்படும்.
வரைவு வாக்காளர் பட்டியல் அறிவிப்பை (Form-5) வெளியிடும் போது வாக்காளர் பதிவிற்கு, அடுத்த தகுதி ஏற்படுத்தும் நாட்களான ஏப்ரல் 01, ஜூலை 01 மற்றும் அக்டோபர் 01 , 2026-க்கு முன்கூட்டிய விண்ணப்பங்களையும் வாக்காளர் பதிவு அலுவலர் பெறலாம்.
அறிவிப்புகள் வழங்குதல் மற்றும் முடிவெடுத்தல் (Issuance of Notices and Decision)
கடந்த சிறப்பு தீவிர திருத்த பட்டியலில் பெயர் பொருந்தாத அல்லது இணைக்கப்படாத வாக்காளர்களுக்கு அறிவிப்புகள் வழங்கப்படும்.
அவர்கள் வாக்காளர் தகுதியை உறுதிப்படுத்த அளிக்கும் சான்றுகள் மற்றும் ஆவணங்கள் ஆய்வு செய்யப்படும்.
கடந்த சிறப்பு தீவிர திருத்ததிற்கு முன் அவர்கள் எங்கு இருந்தார்கள் என்பதைக் கண்டறிய விசாரணை நடத்தப்படும்.
உரிமைக்கோரல்கள் மற்றும் மறுப்புரைகள் (Claims & Objections)
வாக்காளர் பதிவு அலுவலர்கள்/ உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள் வாக்காளர்கள் அல்லது அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் வாக்குச்சாவடி நிலை முகவர்கள் அளிக்கும் உரிமைகோரல் மற்றும் மறுப்புரைகளை பெற்று அவைகளின் மீது முடிவெடுப்பர்.
இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு (Publication of Final Electoral Rolls)
வாக்காளர் பதிவு அலுவலரின் முடிவின் மீதான முதல் மேல்முறையீட்டை மாவட்ட தேர்தல் அதிகாரி / மாவட்ட நிர்வாக நடுவர் தீர்மானிப்பார், மாவட்டத் தேர்தல் அதிகாரியின் முடிவின் மீதான இரண்டாம் மேல்முறையீட்டை தலைமைத் தேர்தல் அதிகாரி தீர்மானிப்பார்.
வாக்குச்சாவடிகள் மறுசீரமைப்பு
எந்த வாக்குச்சாவடியிலும் 1,200 வாக்காளர்களுக்கு மேல் இருக்கக் கூடாது.
அடுக்கு மாடி குடியிருப்புகள், குடியிருப்பு நலச் சங்கங்கள் உள்ளிட்ட இடங்களில் புதிய வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட வேண்டும்.
புதிய வாக்குச்சாவடிகள் குறித்து மாவட்ட தேர்தல் அதிகாரிகள் அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை நடத்த வேண்டும்.
ஒரே குடும்பத்தில் உள்ள அனைத்து உறுப்பினர்களும் ஒரே வாக்குச்சாவடியில் சேர்க்கப்படுவதை உறுதிசெய்ய சிறப்பு கவனம் செலுத்தப்பட வேண்டும்.
முக்கிய அட்டவணை
படிவங்கள் அச்சிடுதல் / பயிற்சி: அக்டோபர் 28 முதல் நவம்பர் 03, 2025
வீடு தோறும் எண்ணிக்கை கட்டம் : நவம்பர் 4 முதல் டிசம்பர் 4, 2025 வரை
வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு : டிசம்பர் 9, 2025
உரிமைகோரல்கள் மற்றும் மறுப்புரைகள் பெறும் காலம் : டிசம்பர் 9, 2025 முதல் ஜனவரி 8, 2026 வரை
அறிவிப்பு கட்டம் (விசாரணை மற்றும் சரிபார்ப்பு) : டிசம்பர் 9, 2025 முதல் ஜனவரி 31, 2026 வரைஇறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு : பிப்ரவரி 7, 2026
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை தலைமைச் செயலகத்தில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தலைமையில் அனைத்து கட்சி ஆலோசனைக் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
