ராஜன் குறை
இந்திய தேர்தல்கள் எப்போதும் எல்லையற்ற விவாதங்களைத் தோற்றுவிக்கக் கூடியவை. வெற்றி, தோல்விகளை தீர்மானிப்பது ஒற்றைக் காரணமாக ஒருபோதும் இருக்காது என்பதால் ஆங்கிலத்தில் மல்டி-காசல் ஃபிரேம்வொர்க் (multi-causal framework) என்ற பன்மைக் காரணங்களின் தொகுப்பின் மூலமாகத்தான் வாக்குகள் எப்படி போடப்படுகின்றன என்பதை விவாதிக்க முடியும். ஒரு தொகுதியின் வேட்பாளருக்கு உள்ள பங்கு என்ன, கட்சிக்கு உள்ள பங்கு என்ன, தலைவருக்கு உள்ள பங்கு என்ன, ஆட்சிக்கு எதிரான அதிருப்தி, ஆட்சியில் மக்கள் பெற்ற பலன்கள், பல்வேறு சமூக அடையாளங்கள், அந்த சமூகங்களின் நலன்கள் அல்லது கற்பிதங்களின் பங்கு என்ன என்று எல்லையற்று பெருகும் விவாதங்கள் இந்திய மக்களாட்சியின் மானுடவியல் செழுமையினை வெளிப்படுத்துபவை.
சென்ற வாரம் நடந்து முடிந்த பீஹார் தேர்தலும் மிகவும் கடுமையான அரசியல் போட்டியை களத்தில் சந்தித்தது. தேஜஸ்வி யாதவ், ராகுல் காந்தி ஆகியோருக்கு பெரும் மக்கள் திரள் வரவேற்பு இருந்தது. முடிவுகள் இப்படித்தான் இருக்கும் என்று அறுதியிட்டு கூறுவது கடினமாகவே இருந்தது. இத்தகைய சூழ்நிலையில் ஆளும் தேசிய ஜன நாயகக் கூட்டணி, பாஜக, ஐக்கிய ஜனதா தளம். சிராக் பஸ்வானின் லோக் ஜனசக்திக் கட்சி ஆகியவை பெரும்பாலான தொகுதிகளை கைப்பற்றியிருப்பது நிச்சயம் விரிவான விவாதத்திற்கு உரியதுதான். குறைந்த வாக்கு வித்தியாசத்தில் பல தொகுதிகளின் முடிவுகள் தீர்மானமாவது என்பதும் புதிதல்ல. அதே போல மொத்த வாக்குகளை அதிகம் வாங்கிய கட்சி, குறைந்த தொகுதிகளைப் பெறுவதும் இந்திய தேர்தல் அமைப்பில் சாத்தியம்தான்.
பீஹார் தேர்தல் முடிவுகளின் பிரச்சினை என்னவென்றால் அப்படியான அரசியல் ஆய்வுகளுக்கோ, விவாதங்களுக்கோ அர்த்தமின்றி போவதுதான். இந்திய தேர்தல் ஆணையம் தேர்தல் நடத்தப்படும் முறையின் மீது கடுமையான ஐயங்கள் உருவாகக் காரணம் ஆகிவிட்டது. வாக்காளர் பட்டியல் என்பதே ஏராளமான குளறுபடிகள் நிறைந்ததாகக் காணப்படுகிறது. எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மிக விரிவாக பல ஆய்வுகள் மூலம் எப்படி வாக்காளர் பட்டியலில் முறைகேடுகள் நடந்துள்ளன, அவை எப்படி தேர்தல் முடிவுகளை பாதிக்கின்றன என்பது குறித்து குற்றச்சாட்டுகளை பொது மன்றத்தில் வைத்து வருகிறார். அவர் கூறும் தரவுகளை ஊடகங்கள் சரிபார்த்து உறுதிப்படுத்துகின்றன.
தேர்தல் ஆணையத்தால் அந்த ஐயங்களைக் களைய முடியவில்லை. அதற்குப் பதிலாக தீவிர சிறப்புத் திருத்தம் (Special Intense Revision – SIR) என்ற நடவடிக்கை மூலம் பீஹாரில் ஏராளமான வாக்காளர்களின் பெயர்களை நீக்கியுள்ளது. இப்போது தமிழ்நாடு, வங்கம், கேரளம் உள்ளிட்ட பல மாநிலங்களிலும் அதே நடவடிக்கையை துவங்கியுள்ளது. இந்த நடவடிக்கையில் வாக்காளர்களை மிகத் தவறான முகாந்திரங்களைக் காட்டி நீக்கிவிடுவார்கள் என்ற அச்சம் பரவலாகி வருகிறது. இது குறித்து விரிவாகப் பின்னர் பார்ப்போம். பீஹாரில் இவ்விதம் நாற்பது இலட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளார்கள் என்று கூறப்படுகிறது. அவர்களில் இறந்தவர்கள் என்று கூறப்பட்டவர்கள் பலர் இறக்கவில்லை என்பது உச்சநீதிமன்றத்திலேயே நிரூபிக்கப் பட்டது. தேர்தல் ஆணையம் அவை அறியாமல் நேர்ந்த சிறு பிழைகள். அவற்றை முன்வைத்து மொத்த தீவிர சிறப்புத் திருத்தமும் சரியல்ல என்று கூறமுடியாது என்று சாதிக்கிறது.

மற்றொரு பிரச்சினையும் எழுந்துள்ளது. பீஹாரின் மொத்த வாக்களர்கள் எண்ணிக்கையில் மூன்று இலட்சம் பேர் தேர்தல் அறிவிக்கப்பட்ட பின் சேர்க்கப்பட்டுள்ளார்கள். தேர்தல் ஆணையம் அவர்கள் விடுபட்டவர்கள்; வாக்களிப்பதற்கு பத்து நாட்கள் முன்வரை அவர்கள் விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டு சேர்க்கப்பட்டார்கள் என்கிறது. இவர்கள் உண்மையான வாக்காளர்களா என்று எதிர்கட்சிகள் பரிசோதிக்க அவகாசமே இருக்கவில்லை என்பது தெளிவு. ஏற்கனவே காங்கிரஸ் கொடுத்த ஆதாரங்களில் ஒரே வீட்டில் முன்னூறு பேர் வசிப்பது, ஒரே பிரேசில் நாட்டு பெண்ணின் புகைப்பட த்துடன் இருபது வாக்காளர்கள் இருப்பது, போன்ற தகவல்களெல்லாம் வாக்காளர் பட்டியல் குறித்து பலத்த ஐயங்களை உருவாக்கியுள்ளன.
மூன்று அம்சங்கள் மிகவும் பிரச்சினைக்குரியதாக பார்க்கப்படுகின்றது. ஒன்று, வாக்காளர் பட்டியல் தயாரிப்பில் வெளிப்படைத் தன்மையின்மையும். அதற்குக் காரணமான தேர்தல் ஆணையத்தின் எதேச்சதிகாரப் போக்கும். இரண்டு, தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னும் ஒன்றரை கோடி பெண்களுக்கு பீஹார் அரசால் வழங்கப்பட்ட உதவித்தொகை பத்தாயிரம் ரூபாய். மூன்று, மின்னணு வாக்கு இயந்திரங்களை கையாள்வதில் தொடர்ந்து ஏற்படும் சிக்கல்கள். இவை ஒவ்வொன்றாகப் பரிசீலிப்போம்.
வாக்காளர் பட்டியலை கணிணித் தரவுகளாக பொது மன்றத்தில் வைப்பதே தீர்வு
ஒரு வாக்காளர் அவர் பெயர் பட்டியலில் இடம் பெற்றுள்ளதா என்று தெரிந்துகொள்ள என்ன செய்யலாம்? தேர்தல் ஆணையத்தின் வலைத்தளத்திற்குச் சென்று அவருடைய வாக்காளர் அட்டை எண்ணை உள்ளீடு செய்தால் வாக்குச்சாவடி விவரம், பாகம் எண், எல்லாம் வருகிறது. அப்படியானால் அனைத்து தகவல்களும் தேடக்கூடிய தரவுகளாக இருக்கிறது என்றுதான் பொருள்.

அப்படி தேடக்கூடிய தரவுகளை கணிணி கோப்புகளாகவே பொதுவெளியில் வைத்தால் ஏந்த குற்றச்சாட்டிற்கும் இடம் இருக்காது அல்லவா? அப்படியே பிழையாக பதிவுகள் இருந்தாலும் புகார்கள் வந்தால் உடனே சரி செய்துவிடலாம் அல்லவா? பிரேசில் சிகையலங்கார நிபுணரின் புகைப்பட த்துடன் இருபது வாக்காளர்கள், ஒரே புகைப்படத்துடன் நூறு வாக்காளர்கள், பூஜ்யம் என்ற எண்ணுள்ள வீட்டில் பல நூறு வாக்காளர்கள். ஒரே வீட்டில் முன்னூறு வாக்காளர்கள் என பல குளறுபடிகளை உடனே சரி செய்துவிடலாமே?
தேர்தல் ஆணையம் அப்படி அதனிடமுள்ள தகவல்களை தேடக்கூடிய மின்னணு தரவுகளாக, கணிணி கோப்புகளாக பகிர மறுக்கிறது. அதனால் காங்கிரஸ் கட்சி தனியாக அலுவலகம் அமைத்து, தரவுகளை பதிவேற்றம் செய்து பலவகையில் தொகுத்துப் பார்த்து கடுமையான குளறுபடிகளை, முரண்பாடுகளை அம்பலப்படுத்துகிறது. ஹரியானாவில் 25 இலட்சம் போலி வாக்காளர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளதாக க் கூறுகிறது.
பீஹாரில் SIR மூலம் நீக்கப்பட்ட நாற்பது இலட்சம் வாக்காளர்கள் சரியாகத்தான் நீக்கப்பட்டார்களா என்பதை சரிபார்க்க பல மாதங்கள் ஆகும். நிச்சயம் அதன் இறுதியில் ராகுல் காந்தி மீண்டும் பத்திரிகையாளர்கள் சந்திப்பு வைப்பார். வாக்குத் திருட்டு, பீஹார் ஆட்சித் திருட்டு என்று குற்றம் சாட்டுவார். பத்திரிகைகள் தலையங்கம் எழுதும். தேர்தல் ஆணையம் உறுதிமொழி பத்திரம் தாக்கல் செய்யச் சொல்லும். ஆனால் பொதுவெளியில் வைத்த குற்றச்சாட்டுகளுக்கு முறையான பதில்களைச் சொல்லாது.
வாக்களர் பட்டியல் என்பது ராணுவ ரகசியம் அல்ல. அது மக்களாட்சியின் இறையாண்மையின் உரிமையாளர்களாகிய வாக்காளர் பற்றிய தகவல். அதை அவர்களுக்கே வெளிப்பட த்தன்மையுடன் வழங்க மறுப்பதற்கு தேர்தல் ஆணையத்திற்கு என்ன உரிமை இருக்கிறது என்பதே கேள்வி. இப்போது அவர்கள் வாக்காளர் பட்டியலை தரவிரக்கம் செய்துகொள்ள வழி வைத்துள்ளார்கள். ஆனால் அந்த கோப்புகள் அனைத்து தரவுகளையும் விருப்ப ப்படி தொகுத்து தேடிக்கொள்ளக்கூடிய இயங்குநிலை மின்னணு தரவுக் கோப்புகள் (dynamic searchable database) இல்லை.
நாம் ஏற்கனவே கூறியபடி, அப்படி இயங்குநிலை மின்னணு தரவுக் கோப்புகளாக வாக்காளர் பட்டியல் தேர்தல் ஆணையத்திடம் இருக்கிறது. ஆனால் அதனை பொதுவெளியில் பகிர மறுக்கிறது. அப்படிச் செய்தால் அனைத்து கட்சிகளும், தன்னார்வலர்களும் பல்வேறு ஆய்வுகளைச் செய்து குளறுபடிகளை கண்டுபிடித்து விடுவார்கள். தேர்தல் ஆணையம் அந்த குளறுபடிகளை பாதுகாக்க விரும்புவது ஏன் என்ற கேள்வி வருகிறது. அது தேர்தலில் ஆளும் கட்சிக்கு ஆதரவான போலி வாக்குகளை உருவாக்கத்தான் என்ற ஐயம் வலுவடைகிறது.
இந்த ஐயத்தை பொது மக்கள் மட்டும் சொல்லவில்லை. இந்தியாவின் முக்கிய பொதுமன்ற சிந்தனையாளர்கள் கூறுகிறார்கள். உதாரணமாக பொருளாதார வல்லுனர் பரகலா பிரபாகர் கூறுகிறார். இவர் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் கணவராக அறியப்பட்டவர். பல முக்கிய நாளிதழ்கள், பத்திரிகைகள் தலையங்கம் தீட்டியுள்ளன. மக்களும் பரவலாக ஐயத்தை பகிர்ந்துகொள்கிறார்கள். இந்த நிலை தொடர்ந்தால் அவர்கள் மக்களாட்சியில் நம்பிக்கை இழந்து விடுவார்கள். அது அமைதியான அன்றாட நல்வாழ்விற்கும். பொருளாதார வளர்ச்சிக்கும் உகந்ததல்ல.

தமிழ்நாட்டில் நிகழும் தீவிர சிறப்புத் திருத்தக் கொடுங்கோன்மை
தமிழ்நாட்டில் துவங்கியுள்ள தீவிர சிறப்புத் திருத்தத்திலும் பல முரண்பாடுகள் தோன்றியுள்ளன. மக்கள் பெரும் குழப்பமடைந்துள்ளார்கள். ஒருவரது பெயர் வாக்காளர் பட்டியலில் உள்ளது. அவர் புகைப்படத்துடன் கூடிய படிவத்தைத்தான் BLO எனப்படும் வாக்குச்சாவடி முகவர்கள் தருகிறார்கள். வீட்டுக்கு வந்து தருகிறார்கள்; அல்லது பொது இட த்திற்கு வந்து பெற்றுக் கொள்ளச் சொல்கிறார்கள்.
அந்த படிவத்தில் தன்னுடைய அடையாளத்தை ஒருவர் உறுதி செய்து, உயிரோடு இருப்பதை உறுதி செய்து திருப்பித் தருவதில் சிக்கல் இல்லை. எங்கே சிக்கல் வருகிறது என்றால் 2002-ஆம் ஆண்டு நிகழ்ந்த சிறப்புத் திருத்த த்தில் வாக்காளர் பெயரோ, உறவினர்/பெற்றோரின் பெயரோ இருந்ததா என்று கேட்பது. அதற்கான ஆதாரங்களைக் கேட்பது. அப்படித் தரவில்லையென்றால் வாக்காளர் பட்டியிலிலிருந்து பெயர் நீக்கப்படும் என்று பல பி.எல்.ஓ-க்கள் எச்சரிக்கிறார்கள். சிலர், பரவாயில்லை, தெரிந்ததை எழுதிக் கொடுங்கள் என்கிறார்கள்.

எண்பது வயதுப் பெண்ணின் தாத்தாவின் பெயரைக் கேட்கிறார்கள். ஏன் கேட்கிறீர்கள் என்றால் மேலிட உத்திரவு, உங்கள் முன்னோர்கள் வெளிநாட்டிலிருந்து வந்தவர்களா என்று பார்க்க வேண்டும் என்று கூறுகிறார்கள். ஒவ்வொரு பி.எல்.ஓ-வும் அவரவர் விருப்ப ப் படி தகவல்களைக் கேட்கிறார்கள். இந்தியாவிலேயே பிறந்து எண்பது ஆண்டுகள் வசித்திருந்தாலும் இந்தியக் குடிநபராக முடியாதா? வம்சாவழியாக வாழ்ந்தால்தான் குடிநபரா? எத்தனை தலைமுறை வாழ வேண்டும்? இதையெல்லாம் பி.எல்.ஓக்கள்தான் தீர்மானிப்பார்களா? எதனால் இது போன்ற தகவல்களைக் கேட்கிறார்கள்? யார் அவர்களை இயக்குகிறார்கள்?
ஏற்கனவே வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள, இந்த நாட்டின் குடிநபர் என்பதற்கான சான்றுகள் முழுமையாக உள்ள ஒரு நபர், எதற்காக இருபது ஆண்டுகளுக்கு முன் எங்கேயிருந்தேன் என்றோ, அல்லது பெற்றோர் எங்கே இருந்தார்கள் என்றோ தகவல்கள் தர வேண்டும்? அதற்கும் வாக்குரிமைக்கும் என்ன தொடர்பு? இருபது ஆண்டுகளுக்கு முன் வாக்களிக்கவில்லை, பெற்றோரும் வாக்களிக்கவில்லை என்றால், வாக்காளர் அட்டை வாங்கவில்லை என்றால் இப்போது வாக்களிக்க உரிமை இல்லையா? அதைச்சொல்ல யாருக்கு அதிகாரம் இருக்கிறது?
முற்றிலும் எந்த வித தர்க்கமும், அறமும் இன்றி வாக்காளர்கள் மிரட்டப்படுகிறார்கள். மன வேதனை அடைந்துள்ளார்கள். அவர்கள் வாக்குரிமை பறிக்கப்படும் என அஞ்சுகிறார்கள். இது போலத்தான் பீஹாரில் நிகழ்ந்திருக்கும் என யூகிக்க முடிகிறது. எத்தனையோ இலட்சம் வாக்காளர்கள் இதுபோன்ற அர்த்தமற்ற தகவல்களைத் தர முடியாத தால் வாக்குகளை இழந்திருக்கலாம் என்று தோன்றுகிறது. இப்படி இலட்சக்கணக்கான தகுதியுள்ள வாக்காளர்களை நீக்கிவிட்டு ஒரு தேர்தல் நடந்தால் அதன் முடிவுகளை எப்படி வழக்கம்போல விவாதிக்க முடியும்?

தேர்தல் வெற்றிக்காகவே மகளிருக்கு வழங்கப்பட்ட பணம்
பீஹார் தேர்தல் அட்டவணை அக்டோபர் மாதம் 6-ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. அதற்கு இரு வாரங்களுக்கு முன் செப்டம்பர் 24-ஆம் தேதி ஒரு புரட்சிகர அறிவிப்பை பிரதமர் மோடி பீஹார் அரசின் சார்பாக வெளியிட்டார். அது கிட்ட த்தட்ட ஒன்றரை கோடி பெண்களுக்கு பத்தாயிரம் ரூபாய் உதவித் தொகை வழங்கப்படும் என்பதுதான். அதை வைத்து அவர்கள் தொழில் தொடங்க திட்டமிட வேண்டும் என்று, சரியாகச் செய்தால் பின்னர் இரண்டு இலட்ச ரூபாய் வழங்கப்படும் என்றும் அந்த திட்டம் கூறுகிறது.
மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் யார் புரிந்தாலும் அது வரவேற்கத்தக்கதே. ஆனால் பிரதமர் மோடிதான் இதனை ரேவடி கல்ச்சர் என்று கடுமையாகச் சாடினார். இப்போது அவரே இந்த திட்ட த்தை அறிவித்து நேரடியாக ஏழைப்பெண்களின் கணக்கில் பத்தாயிரம் ரூபாய் வரவு வைக்கிறார். அதுவும் தேர்தல் அறிவிப்பிற்கு இரு வாரங்கள் முன்பு அறிவிக்கிறார். ஆட்சிக்கு எதிராக கடும் அதிருப்தி இருப்பதை சரிசெய்வதற்காகவே இந்த திட்டம் அவசரமாக அறிவிக்கப்பட்ட து என்று கூறுவதில் தவறில்லை.
அந்த திட்டம் நடைமுறைக்கு வந்து பணம் பட்டுவாடா செய்யப்பட்ட போது தேர்தல் அறிவிக்கப் பட்டுவிட்டது. தமிழ்நாட்டில் வண்ணத் தொலைக்காட்சி பெட்டிகள் வழங்கும் திட்டம் நடைமுறையில் இருந்தபோது, தேர்தல் அறிவிக்கப்பட்ட பின் தொலைக்காட்சி பெட்டிகளை கொடுக்க க் கூடாது என்று தடை செய்த து தேர்தல் ஆணையம். ஆனால் இன்று பீஹாரில் தேர்தல் அறிவிக்கப் பட்ட பின்புதான் பத்தாயிரம் ரூபாய் பரவலாக க் கொண்டு சேர்க்கப்பட்டது. தேர்தல் முடிந்தபின் கொடுங்கள் என்று தடுத்திருக்க வேண்டாமா ஆணையம்? ஆனால் நடைமுறையில் இருக்கும் திட்டம் என்பதால் கொடுக்கத் தடையில்லை என்று கூறிவிட்டது. தேர்தல் அறிவிக்கப்பட்ட பின் அந்த பணம் கைக்கு வந்தால் ஆளும் கட்சிக்கு வாக்களிப்பதற்குக் கொடுக்கப்பட்ட தொகையாகத்தானே பெண்கள் அதனைக் கருதுவார்கள்?
மின்னணு வாக்குப்பெட்டி மர்மங்கள்
மின்னணு வாக்குப்பெட்டி என்பது தொடர்ந்து ஐயங்களின் மூலாதாரமாக விளங்கி வருகிறது. அவை வைக்கப்பட்டுள்ள வளாகத்தினுள் சில வாகன ங்கள் மர்ம மான முறையில் செல்கின்றன. அங்குள்ள சிசிடிவி காமிராக்கள் திடீரென இயங்குவதில்லை. இப்படியெல்லாம் பரபரப்பான காட்சிகள் அரங்கேறுகின்றன.
இதே பழைய வாக்குசீட்டுகள் என்றால் அதனைக் குறித்து பெரிய கவலை கொள்ள வேண்டும். ஆயிரக்கணக்கான வாக்குகளை யாரும் சுலபத்தில் மாற்ற முடியாது. வாக்குச் சீட்டுகளை சுலபமாக ஒருமுறைக்கு இருமுறை எண்ணிப் பார்க்கலாம்.
பிரபல வழக்கறிஞர் சாந்தி பூஷண் உள்ளிட்டவர்கள் தொடர்ந்து மின்னணு வாக்கு இயந்திரத்தை கைவிட வேண்டும், வாக்குச் சீட்டு முறைக்குத் திரும்ப வேண்டும் என்று கூறுகிறார்கள். ஐயத்திற்கு அப்பாற்பட்ட தேர்தலே முக்கியம் என்று நினைக்கும் யாரும், வாக்குச் சீட்டு முறையை ஆதரிக்கவே செய்வார்கள்.
கட்டுரையாளர் குறிப்பு:

ராஜன் குறை கிருஷ்ணன் – பேராசிரியர், அம்பேத்கர் பல்கலைக்கழகம், புதுதில்லி. இவரைத் தொடர்புகொள்ள: rajankurai@gmail.com
