SIR- தேர்தல் ஆணையத்துக்கு ஆதரவாக 272 சீனியர் சிட்டிசன்ஸ்- ராகுல் காந்தி மீது பாய்ச்சல்!

Published On:

| By Mathi

Rahul Gandhi ECI

இந்திய தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தமான SIR சரியான நடவடிக்கைதான்; இதனை கடுமையாக தேர்தல் ஆணையம் செயல்படுத்த வேண்டும்; தேர்தல் ஆணையத்தை விமர்சிப்பது என்பது தேர்தல் தோல்விகளால் ஏற்படும் விரக்தியின் வெளிப்பாடு என நாட்டின் மூத்த குடிமக்கள் 272 பேர் குற்றம் சாட்டி பகிரங்க கடிதம் வெளியிட்டுள்ளனர்.

இந்திய தேர்தல் ஆணையத்தை கடுமையாக விமர்சித்து வரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, 272 மூத்த குடிமக்கள் இந்த கடிதத்தை அனுப்பி உள்ளனர்.

ADVERTISEMENT

கடிதம் எழுதியது யார் யார்?

  • உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதிகள் ஏ.கே. கோயல், ஹேமந்த் குப்தா உட்பட 16 ஓய்வு பெற்ற நீதிபதிகள்
  • RAW, NIA முன்னாள் தலைவர்கள் உட்பட123 ஓய்வு பெற்ற அரசு அதிகாரிகள்
  • வெளிநாட்டுக்க்கான முன்னாள் இந்திய தூதர்கள்
  • 133 ஓய்வுபெற்ற பாதுகாப்புப் படை அதிகாரிகள்

மொத்தம் 272 மூத்த குடிமக்கள்.

ADVERTISEMENT

ராகுல் காந்திக்கு எழுதப்பட்ட கடிதத்தில் என்ன இருக்கிறது?

  • இந்திய அரசியல் சாசனம் மீது நடத்தப்படும் தாக்குதல் என்ற தலைப்பில் இக்கடிதம் எழுதப்பட்டுள்ளது.
  • இந்திய ஜனநாயகம் வன்முறையால் அல்ல; ஜனநாயகத்தின் அடிப்படை நிறுவனங்கள் நச்சு பேச்சுகள் மூலம் தாக்குதலுக்குள்ளாக்கப்படுகிறது.
  • அரசியல் தலைவர்கள் மாற்று கொள்கைகளை உளப்பூர்வமாக வழங்கவில்லை; அதற்கு பதிலாக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை அரசியல் ஆதாயங்களுக்காக முன்வைக்கின்றனர்.
  • தேசத்தின் பாதுகாப்பு படையினரை அவமதித்து அவர்களது வீரத்தை- சாதனைகளை கேள்விக்குள்ளாக்கினர்
  • நீதித்துறையின் நேர்மை, நாடாளுமன்றத்தின் அரசியல் சாசன கடமைகளை கேள்விக்குள்ளாக்கினர்.
  • தற்போது, இந்திய தேர்தல் ஆணையம் மீது திட்டமிட்டே- சதி நோக்கத்துடன் தாக்குதல் நடத்தப்படுகிறது
  • ராகுல் காந்தி, இந்திய தேர்தல் ஆணையம் மீது மீண்டும் மீண்டும் தாக்குதல் நடத்துகிறார்; இந்திய தேர்தல் ஆணையமே வாக்கு திருட்டில் ஈடுபட்டுள்ளது- 100% ஆதாரம் இருக்கிறது என்று சொல்வதுடன் கீழ்த்தரமான சொற்களைப் பயன்படுத்துகிறார்.
  • தாம் முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் அணுகுண்டுகள் போல.. இந்திய தேர்தல் ஆணையம் ஒளிந்து கொள்ள இனி இடமே இல்லை என்கிறார் ராகுல் காந்தி.
  • இந்திய தேர்தல் ஆணையத்தில் தவறு செய்த யாராக இருந்தாலும் மேல் அதிகாரிகள் முதல் கீழ்நிலை வரை யாரையும் ‘சும்மா’ விடமாட்டோம் என மிரட்டுகிறார் ராகுல் காந்தி.
  • இப்படி எல்லாம் பேசிய ராகுல் காந்தி, எந்த ஒரு புகார் அல்லது பிரமாணப் பத்திரத்தையும் தாக்கல் செய்யவும் இல்லை
  • காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள், இடதுசாரி என்ஜிஓக்கள், கவனத்தை ஈர்க்க விரும்பும் நபர்கள் எல்லோரும் ‘வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம்’ SIR-ல் தேர்தல் ஆணையத்தை கடுமையாக விமர்சிக்கின்றனர்; இந்திய தேர்தல் ஆணையத்தையே பாஜகவின் பி டீம் என்றெல்லாம் விமர்சனம் செய்கின்றனர்.
  • இந்திய தேர்தல் ஆணையம் SIR நடவடிக்கையை வெளிப்படையாகத்தான் நடத்துகிறது; தகுதி இல்லாதவர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கிவிட்டு தகுதியானவர்களை வாக்காளர்களாக சேர்க்கிறது தேர்தல் ஆணையம்.
  • ஆனால் அரசியல் தோல்விகளால் ஏற்பட்ட விரக்தியை மறைக்க தேர்தல் ஆணையத்தின் மீது குற்றம்சாட்டுகின்றனர். இது ஒருவகை இயலாமையால் வெளிப்படும் கோபம்; தொடர் தேர்தல் தோல்விகளால் ஏற்படும் விரக்தியின் வெளிப்பாடு.
  • எதிர்க்கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்களில் தேர்தல் முடிவுகள் சாதகமாக வந்தால் இந்திய தேர்தல் ஆணையம் மீது எந்த குற்றச்சாட்டும் முன்வைக்கப்படுவது இல்லை; தங்களுக்கு சாதகமாக தேர்தல் முடிவு இல்லாமல் போனால் தேர்தல் ஆணையத்தை வில்லனாக சித்தரிக்கின்றனர்.
  • டிஎன் சேசன், கோபால்சாமி போன்றோர் இந்திய தேர்தல் ஆணையத்தை வலிமைப்படுத்தியவர்கள்; அவர்கள் தலைப்புச் செய்திகளில் அடிபட வேண்டும் என்பதற்காக செயல்படவில்லை; அவர்கள் அரசியல் சாசனப் பிரிவுகளை- சட்டங்களை செயல்படுத்தினர்.
  • இந்திய நாட்டு மக்கள், இந்திய தேர்தல் ஆணையத்துடன் இணைந்து நிற்க வேண்டிய தருணம் இது.
  • போலி வாக்காளர்கள் ஒரு அரசு அமைவதை தீர்மானித்துவிடக் கூடாது; இவர்கள் தேசத்தின் இறையாண்மைக்கு ஆபத்தானவர்கள்.
  • உலக நாடுகள் சட்டவிரோத குடியேறிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை மேற்கொள்கின்றன.
  • அரசியல் தாக்குதல்களுக்காக இந்திய அரசியல் சாசன அமைப்புகள் ‘பொம்மைகள்’ ஆகிவிடக் கூடாது.
  • இந்திய தேர்தல் ஆணையம் தமது வெளிப்படையான நடவடிக்கைகளை கடுமையாக தொடரத்தான் வேண்டும். இவ்வாறு அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share