“கல்லூரி ஆரம்பிக்கணுமா? யுஜிசி ஒரு பக்கம் இழுக்கும், ஏஐசிடிஇ இன்னொரு பக்கம் இழுக்கும்…” என்று பல ஆண்டுகளாகக் கல்வி நிறுவனங்கள் புலம்பிக் கொண்டிருந்ததற்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்கப் போகிறது மத்திய அரசு. உயர்கல்வித் துறையில் பல ஆண்டுகளாகப் பேசப்பட்டு வந்த ‘ஒரே நாடு, ஒரே கல்வி ஒழுங்குமுறை ஆணையம்’ என்ற திட்டத்திற்குத் தற்போது உயிர் கொடுக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், ‘விக்ஸித் பாரத் சிக்ஷா அதிக்ஷன்’ (Viksit Bharat Shiksha Adhikshan) மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இது நாடாளுமன்றத்தில் நிறைவேறினால், இந்தியாவின் உயர்கல்வித் துறையே தலைகீழாக மாறப்போகிறது.
யுஜிசி, ஏஐசிடிஇ-க்கு குட்-பை:
தற்போது கலை, அறிவியல் கல்லூரிகளைப் பல்கலைக்கழக மானியக் குழுவும் (UGC), பொறியியல் கல்லூரியை அகில இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் குழுவும் (AICTE), ஆசிரியர் கல்வியைத் தேசிய ஆசிரியர் கல்விக் குழுவும் (NCTE) தனித்தனியாகக் கண்காணித்து வருகின்றன.
புதிய மசோதாவின்படி, இந்த மூன்று அமைப்புகளும் கலைக்கப்பட்டு, அவற்றிற்குப் பதிலாக ஒரே ஒரு தலைமை அமைப்பு உருவாக்கப்படும். இனி உயர்கல்வி தொடர்பான அனைத்து முடிவுகளையும் இந்த ஒற்றை அமைப்புதான் எடுக்கும்.
என்ன பயன்?
தேசிய கல்விக் கொள்கை 2020யின் (NEP) பரிந்துரைப்படியே இந்த மாற்றம் கொண்டுவரப்படுகிறது.
- அலைச்சல் மிச்சம்: கல்லூரிகள் இனி ஒவ்வொரு சிறிய விஷயத்திற்கும் டெல்லியில் உள்ள வெவ்வேறு அலுவலகங்களுக்கு அலையத் தேவையில்லை.
- விரைவான முடிவு: பாடத்திட்ட மாற்றம், புதிய படிப்பு அனுமதி போன்றவை இனி ஒரே இடத்தில், வேகமாக நடக்கும்.
- ஆன்லைன் கல்வி: வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களை அனுமதிப்பது மற்றும் ஆன்லைன் கல்வியை முறைப்படுத்துவது எளிதாகும்.
விதிவிலக்கு யாருக்கு?
இந்த புதிய அமைப்பு அனைத்து உயர்கல்வி நிறுவனங்களையும் கட்டுப்படுத்தும் என்றாலும், மருத்துவம் (Medical) மற்றும் சட்டம் (Law) சார்ந்த படிப்புகளுக்கு மட்டும் இதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அவை வழக்கம் போலத் தேசிய மருத்துவ ஆணையம் மற்றும் பார் கவுன்சில் கட்டுப்பாட்டில் இயங்கும்.
அரசியல் பார்வை:
“ஒரே நாடு, ஒரே தேர்தல் வரிசையில் இப்போது கல்வியிலும் அதிகாரத்தை ஒரே இடத்தில் குவிக்கப் பார்க்கிறது மத்திய அரசு” என்று எதிர்க்கட்சிகள் விமர்சிக்கக்கூடும். மாநில உரிமைகள் இதில் பறிபோகுமா அல்லது நிர்வாகம் சீராகுமா என்ற விவாதம் கல்வித்துறையில் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது.
இந்த மசோதா நடைபெற்று வரும் நாடாளுமன்றக் கூட்டத்தொடரிலேயே தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி நடந்தால், 70 ஆண்டுகளாகக் கோலோச்சிய யுஜிசி வரலாறு விரைவில் முடிவுக்கு வரும்.
