ADVERTISEMENT

மகாராஷ்டிராவில் மகளிர் தொகை திட்டம் மூடப்படுகிறதா?

Published On:

| By Aara

மகாராஷ்டிர மாநிலத்தில் லட்கி பஹின் திட்டம் என்பது தமிழ்நாட்டில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகையைப் போல கொண்டுவரப்பட்ட திட்டமாகும். மகாராஷ்டிராவில் மகளிர் உரிமைத் தொகை திட்டம் மூடப்படுகிறதா? Shut Down Ladki Bahin Scheme Maharashtra

கடந்த 2024  மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணி தோல்வி அடைந்த பிறகு, நிதியமைச்சரான அஜித் பவார் ‘முக்கிய மந்திரி லட்கி பஹின்’என்ற திட்டத்தைத் தொடங்கினார். அதாவது முதலமைச்சரின் பெண்கள் உதவித் தொகைத் திட்டம் என இதற்குப் பெயர்.

ADVERTISEMENT

இதன்படி பொருளாதாரத்தில் பின் தங்கிய குடும்பப் பெண்களுக்கு மாதம் 1500 ரூபாய் வழங்கப்பட்டது.  18 இல் இருந்து 65 வயது வரை உள்ள பெண்களுக்கு மாதம் 1,500 ரூபாய் அளிக்கும் இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. இதன் மூலம் மகாராஷ்டிராவில் 2 கோடியே 25 லட்சம் பெண்கள் பலனடைந்தனர்.

2024  நவம்பரில் மகாராஷ்டிராவில் சட்டமன்றத் தேர்தல் வந்தது. அப்போது,  மீண்டும் பாஜக கூட்டணி ஆட்சிக்கு வந்தால்,  லட்கி பஹின் திட்டத்தின் தொகை  மாதம் 2,100 ரூபாயாக உயர்த்தப்படும் என்று அறிவித்தார்கள்.

ADVERTISEMENT

இது மாநிலத்தில் இருக்கும் பெண்கள் மத்தியில் மிக அதிக வரவேற்பைப் பெற்றது. அதனால்தான் மகாராஷ்டிர அரசியல் வரலாற்றில் எதிர்க்கட்சிகளே இல்லை என்ற நிலையை உருவாக்கி பாஜக-ஷிண்டே சிவசேனா-அஜித் பவார் தேசியவாத காங்கிரஸ் கூட்டணி பெரும் வெற்றி பெற்றது.

மொத்தமுள்ள 288 தொகுதிகளில் 220 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைத்தது. பாஜகவின் ஃபட்னவிஸ் முதல்வராகவும்,  அஜித் பவார் துணை முதல்வராகவும் பொறுப்பேற்றனர்.

ADVERTISEMENT

வாக்குறுதியளித்தபடி மகாராஷ்டிராவின் மகளிர்க்கு மாதம் 2100 அல்லவா  அளிக்க வேண்டும். ஆனால், மகளிர் உரிமைத் தொகை சமீப மாதங்களாக 8 லட்சம் பெண்களுக்கு 500 ரூபாய்தான் வந்திருக்கிறது. Shut Down Ladki Bahin Scheme Maharashtra

இது தொடர்பாக உத்தவ் தாக்கரே சிவசேனாவின் முக்கிய தலைவர் சஞ்சய் ராவுத் ,  லட்கி பஹின் திட்டம் முழுமையாக முடக்கப்பட்டுள்ளதாக மகாராஷ்டிரா அரசை நேற்று (மே 4) விமர்சித்தார்.

”ஆளும் மகாயுதி கூட்டணி தனது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறிவிட்டது, பொதுமக்களை ஏமாற்றிவிட்டது. மீண்டும் பாஜக ஜெயித்தால், லட்கி பஹின் யோஜனா திட்டத்தில் 2100 வழங்கப்படும் என கூறினார்கள். ஆனால், பெண்கள் இப்போது ரூ.500 மட்டுமே பெறுகிறார்கள்.

கடந்த  மார்ச் 10 அன்று, துணை முதல்வரும் நிதியமைச்சருமான அஜித் பவார் மாநில சட்டமன்றத்தில் மாநில பட்ஜெட்டை தாக்கல் செய்தார். 2025-26 நிதியாண்டிற்கான முக்கிய மந்திரி லட்கி பஹின் யோஜனாவிற்கு மொத்தம் ரூ.36,000 கோடி ஒதுக்கப்படுவதாக அவர் அறிவித்தார். அதாவது  கடந்த வருடம் ஒதுக்கப்படட  ரூ.46,000 கோடியிலிருந்து 10 ஆயிரம் கோடி ரூபாய் குறைக்கப்பட்டுவிட்டது” என விமர்சித்தார் ராவத். Shut Down Ladki Bahin Scheme Maharashtra

எதிர்க்கட்சியான ராவத் ஒரு பக்கம் என்றால்… இன்னொரு பக்கம் மகாராஷ்டிர அரசுக்குள் இருந்தே இந்த விவகாரம் போட்டு உடைக்கப்பட்டிருக்கிறது.

மகாராஷ்டிராவின் சமூக நீதித்துறை அமைச்சராக சிவசேனாவை சேர்ந்த சஞ்சய் ஷிர்சாத் பதவி வகிக்கிறார். அவர் இன்று  (மே 5)   தனது சொந்த அரசாங்கத்தின் கொள்கையை எதிர்த்திருக்கிறார்.

“லட்கி பஹின் யோஜனா எங்களுக்கு மிகவும் முக்கியமானது, அதனால்தான் நாங்கள் ஆட்சிக்கு வந்துள்ளோம். எனவே இந்த திட்டத்தை ஒருபோதும் நிறுத்தக்கூடாது. அதனால்  அதற்கான நிதியை (மகாராஷ்டிரா அரசு) விடுவிக்க வேண்டும்,

ஆனால் துரதிர்ஷ்டவசமாக  லட்கி பஹின் திட்டத்தின் கீழ் பெண்களுக்கு மாதாந்திரம் ரூ.1,500 வழங்குவதற்காக, சமூக நீதித் துறையிலிருந்து ரூ.410.3 கோடியையும், பழங்குடியினர் மேம்பாட்டுத் துறையிலிருந்து ரூ.335.7 கோடியையும் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறைக்கு திருப்பிவிட்டிருக்கிறது மாநில அரசு. இதனால்  மாநில அரசின் சமூக நீதித்துறை மூடப்படும் அபாயத்தில் இருக்கிறது. இதுபற்றி முதலமைச்சரிடமும், நிதியமைச்சரான துணை முதல்வர் அஜித் பவாரிடமும் பேசியிருக்கிறேன்” என்று வேதனை தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிர மாநிலத்தில் அறிவித்த ஓரிரு வருடங்களிலேயே மகளிர் மாதாந்திர உதவித் தொகை திட்டம் தள்ளாட்டம் கண்டிருக்கிறது. காரணம் மகாராஷ்டிர அரசின் கடுமையான நிதிச் சுமைதான் என்கிறார்கள் அதிகாரிகள்.

தமிழ்நாட்டில் இந்த வருட (2025-26) பட்ஜெட்டில் மகளிர் உரிமைத் தொகைக்காக ரூ.13,807 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருப்பது குறிப்பிடத் தக்கது.

தமிழ்நாட்டில் இத்திட்டத்தின் கீழ்  ஒரு கோடியே 15 லட்சம் பெண்கள் மாதம் ஆயிரம் ரூபாய் பெறும் பயனாளிகளாக உள்ளனர்.  ஆனால் மகாராஷ்டிராவில்  2 கோடியே 25 லட்சம் பெண்கள்  மாதம் 1500 ரூபாய் பெற்றுவருவது குறிப்பிடத் தக்கது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share