மகாராஷ்டிராவில் மகா வெற்றி பெற்ற மோடி- மிக முக்கியமான 5 ஃபேக்டர்கள் இதோ!

Published On:

| By Minnambalam Login1

mahayuti wins maharashtra election

ஐந்து மாதங்களுக்கு முன்பு, நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மகாராஷ்டிர மாநிலத்தில் பாஜக தலைமையிலான மஹாயுதி கூட்டணி மொத்தமுள்ள 48 தொகுதிகளில் 17 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது.

ஆனால் அதே கூட்டணி இப்போது நடந்த சட்டமன்றத் தேர்தலில் மொத்தமுள்ள 288 தொகுதிகளில் 220 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கிறது. எதிர்க்கட்சியான இந்தியா கூட்டணியோ மகாராஷ்டிர சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராக கூட யாரையும் தேர்வு செய்ய முடியாத நிலையில் படுதோல்வி அடைந்திருக்கிறது.

பாஜக 133 இடங்களில் முன்னிலை பெற்று மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்திருக்கிறது. அதன் கூட்டணிக் கட்சியான சிவசேனா (ஷிண்டே) 57 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. தேசியவாத காங்கிரஸ் கட்சி 41 இடங்களை வென்றிருக்கிறது.

காங்கிரஸ் 15, உத்தவ் தாக்கரே சிவசேனா 20, சரத்பவாரின் தேசிய வாத காங்கிரஸ் 10 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளன.

மகாராஷ்டிர தேர்தல் வரலாற்றிலேயே எதிர்க்கட்சித் தலைவரை கூட தேர்ந்தெடுக்க முடியாத அளவுக்கு எதிர்க்கட்சிகள் வீழ்ச்சியடைந்துள்ளன.

இப்படி ஒரு மகா வெற்றியை பாஜக கூட்டணி பெறுவதற்கு முக்கிய காரணிகள் என்ன? இதோ…

மகளிர் ராஷ்டிரமான மகாராஷ்டிரா

பெண்கள் உதவித் தொகை திட்டத்தை இந்த தேர்தலில் பாஜக அரசு பெரிய அளவில் பிரச்சாரத்தில் கொண்டு சென்றது. அது மிகப்பெரிய அளவில் கை கொடுத்துள்ளது.

கடந்த மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணி தோல்வி அடைந்த பிறகு, நிதியமைச்சரான அஜித் பவார் கடந்த பட்ஜெட்டில் ‘முக்கிய மந்திரி லட்கி பஹின்’ திட்டத்தைத் தொடங்கினார். அதாவது முதலமைச்சரின் பெண்கள் உதவித் தொகைத் திட்டம்.

இதன்படி பொருளாதாரத்தில் பின் தங்கிய குடும்பப் பெண்களுக்கு மாதம் 1500 ரூபாய் வழங்கும் திட்டத்தைத் தொடங்கினார். கடந்த நான்கு மாதங்களாகவே மாநிலத்தில் உள்ள பின் தங்கிய குடும்பப் பெண்களுக்கு மாதம் 1,500 ரூபாய் கொண்டு சேர்க்கப்பட்டது.

18 இல் இருந்து 65 வயது வரை உள்ள பெண்களுக்கு மாதம் 1,500 ரூபாய் அளிக்கும் இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. இதன் மூலம் மகாராஷ்டிராவில் 2 கோடியே 25 லட்சம் பெண்கள் பலனடைந்தனர்.

இவர்கள் மொத்த பெண்களில் 55% ஆவார்கள். மீண்டும் பாஜக கூட்டணி ஆட்சிக்கு வந்தால், இந்த தொகை 2,100 ரூபாயாக உயர்த்தப்படும் என்று அறிவித்தார் ஷிண்டே.

இது மாநிலத்தில் இருக்கும் பெண்கள் மத்தியில் மிக அதிக வரவேற்பைப் பெற்றது. பெண்களின் பேராதரவை பாஜக கூட்டணிக்கு இந்தத் திட்டம் கொண்டு வந்திருக்கிறது.

பாஜகவின் ஓபிசி ஒற்றுமை கோஷம்!

பாஜக மகாராஷ்டிராவில் OBC களின் கட்சியாக இருந்து வருகிறது. காங்கிரஸோ இந்தத் தேர்தலில் சாதி வாரி கணக்கெடுப்பு என்பதை முக்கிய பிரச்சாரமாக முன் வைத்தது.

காங்கிரசின் இந்த கோரிக்கை ஓபிசி சமூகத்தை பிளவுபடுத்தவே உதவும் என்று பாஜக சார்பில் பிரச்சாரம் செய்யப்பட்டது. இதற்காகவே பாஜக மகாராஷ்டிராவில் இந்த சட்டமன்றத் தேர்தலில் இரு முக்கிய கோஷங்களை தேர்தல் முழக்கங்களாக முன் வைத்தது.

அதாவது, ‘பட்டேங்கே தோ கட்டேங்கே’ (பிரிந்தால் நாம் அழிந்துபோவோம்), ‘ஏக் ரஹேங்கே தோ சேஃப் ரஹேங்கே’ (ஒற்றுமையாக பாதுகாப்பாக இருப்போம்) என்பவைதான் அந்த இரு கோஷங்கள்.

அதாவது சாதிவாரி கணக்கெடுப்பு மூலம் ஓபிசி மக்களிடம் பிளவை ஏற்படுத்த காங்கிரஸ் முயற்சி செய்கிறது. ஓபிசி மக்களின் ஒற்றுமையை சிதறச் செய்து அதில் அரசியல் லாபம் அடைய பார்க்கிறது காங்கிரஸ் என்று பாஜகவினர் தீவிரமாக பிரச்சாரம் செய்தனர்.

குறிப்பாக பிரதமர் மோடியே தனது பிரச்சாரத்தில் இதுவரை இல்லாத அளவில் ஓபிசி சமூகங்களின் பெயர்களை எல்லாம் வரிசையாக பட்டியலிட்டார்.

’காங்கிரஸ் மகாராஷ்டிராவில் இருக்கும் குன்பி, மாலி உள்ளிட்ட ஓபிசி சமூகங்களுக்கு இடையே சண்டையை உருவாக்கி ஜெயிக்க நினைக்கிறது. ஜவஹர்லால் நேரு காலத்தில் இருந்தே ஓபிசி மக்கள் ஒன்றாக இருப்பதை தடுக்க முயற்சித்து வருகிறது காங்கிரஸ். ஓபிசி மக்களின் ஒற்றுமையைக் கண்டு காங்கிரஸ் அஞ்சுகிறது. அதனால்தான் சாதி வாரி கணக்கெடுப்பு கோஷத்தை முன் வைக்கிறார்கள்’ என்று பேசினார் பிரதமர்.

பாஜகவின் இந்த மாநிலம் முழுமைக்குமான தீவிர பிரச்சாரத்தை காங்கிரஸ் சரியான வகையில் எதிர்கொள்ளவில்லை. அதுமட்டுமல்ல… மகாராஷ்டிர மாநிலத்தில் ஓபிசி ஆதரவுத் தளத்தில் காங்கிரஸுக்கு ஆளுமை மிக்க தலைவர் இல்லை.

இதுவும் பாஜக பக்கம் ஓபிசி வாக்குகள் குவிய முக்கிய காரணமாக அமைந்தது.

மும்பையைத் திறந்துவிட்ட ஷிண்டே… வெற்றியைத் திறந்துவிட்ட மக்கள்!

இந்த சட்டமன்றத் தேர்தலில் பாஜக மகாராஷ்டிராவில் குறிப்பாக மும்பை மாநகரில் வெற்றி அடைவதற்கான இன்னொரு முக்கிய காரணம் மும்பை நகருக்குள் நுழைவதற்கான டோல் கேட் கட்டணம் ரத்து செய்யப்பட்டதாகும்.

கடந்த அக்டோபர் 14 ஆம் தேதி மகாராஷ்டிர மாநில அமைச்சரவைக் கூட்டம் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் நடந்தது. இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட மிக முக்கிய முடிவு மும்பையில் இருந்து மாநிலம் முழுதுமுள்ள மக்களால் வரவேற்கப்பட்டது.

 

அதாவது மும்பைக்குள் நுழையும் அல்லது வெளியேறும் ஐந்து நுழைவுப் புள்ளிகளில் லைட் மோட்டார் வாகனங்களுக்கு நுழைவுக் கட்டணம் வசூலிக்கப்படமாட்டாது என்பதுதான் அந்த முடிவு. அன்று இரவு 12 மணியில் இருந்தே இந்த முடிவு அமல்படுத்தப்பட்டது.

அதாவது மாநிலம் முழுமையில் இருந்தும் மும்பைக்கு வரும் கார்கள், தினமும் புற நகர்களில் இருந்து மும்பைக்குள் வந்து செல்லும் பள்ளிப் பேருந்துகள், டாக்சிகள், போக்குவரத்துக் கழக பேருந்துகள் ஆகியவற்றுக்கு நுழைவுக் கட்டணம் கிடையாது என்பதால் மக்கள் பெரும் நிம்மதிப் பெருமூச்சுவிட்டனர்.

இந்த முடிவால் மாநில அரசின் சாலை மேம்பாட்டுக் கழகத்துக்கு ஏற்படும் இழப்பை ஈடுகட்ட தலைமைச் செயலாளர் தலைமையில் குழு அமைக்கப்பட்டது.

இந்த முடிவு மும்பை மட்டுமலல் மாநிலம் முழுதுமான நடுத்தர மக்களின் பெரும் ஆதரவை பாஜக அரசுக்கு ஈட்டிக் கொடுத்திருக்கிறது.

வெற்றிக்கு வித்திட்ட விதர்பா

மகாராஷ்டிராவின் 288 சட்டமன்றத் தொகுதிகளில் 62 விதர்பா பிராந்தியத்தில் உள்ளன. இவற்றில் 40க்கும் மேற்பட்ட சட்டமன்றத் தொகுதிகளை பாஜக கூட்டணி கைப்பற்றியிருக்கிறது.

தற்போதைய துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ், மத்திய அமைச்சர் நிதின் கட்கரி போன்ற முக்கிய பாஜக தலைவர்களின் தாயகமாக விதர்பா இருக்கிறது. எனவே பாஜக இம்முறை விதர்பாவில் வழக்கம்போலவே கூடுதல் ஆர்வம் காட்டியது. அரசுத் தரவுகளின்படி, 2023 ஆம் ஆண்டில் 1,439 விவசாயிகள் விதர்பாவில் தற்கொலை செய்துகொண்டனர்.

சோயாபீன் விலை சரிவு மற்றும் வெங்காயம் மீதான ஏற்றுமதி தடை ஆகியவை மக்களவைத் தேர்தலில் விதர்பா பகுதியில் பாஜகவுக்கு பெரும் தோல்வியைக் கொடுத்தன.

இந்த முறை, வெங்காயம் மீதான ஏற்றுமதி தடையை நீக்கி, குறைந்தபட்ச ஆதரவு விலையில் சோயாபீன் கொள்முதல் செய்தது ஆகியவற்றால் விதர்ப்பாவில் பாஜக மீண்டும் வெற்றி பெற்றிருக்கிறது.

அதுமட்டுமல்ல, மாநிலம் முழுதுமே பாஜகவுக்கு கை கொடுத்த ஆர்.எஸ்.எஸ். விதர்பாவிலும் மிக தீவிரமாக வேலை செய்ததும் விதர்பாவில் பாஜக வெற்றிக்கு மிக முக்கியக் காரணம்.

பாஜகவின் தேர்தல் உழைப்பு- சோம்பேறியான காங்கிரஸ்

வழக்கம்போல எதிர்க்கட்சியை விட இந்த முறை ஆளுங்கட்சியினரின் உழைப்பு மிக அதிகம். இதுவும் பாஜகவின் பெரிய வெற்றிக்கு முக்கியமான காரணமாக அமைந்தது.

பிரதமர் மோடி 10 பேரணிகளில் பங்கேற்று 106 சட்டமன்ற தொகுதிகளில் பிரச்சாரம் செய்திருக்கிறார். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா 16 பேரணிகள் மூலம் 38 தொகுதிகளில் பிரச்சாரம் செய்தார்.

மகாராஷ்டிரா முழுவதும் அதிகபட்சமாக 75 பேரணிகளில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே கலந்துகொண்டிருக்கிறார். அவருக்கு அடுத்தபடியாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி நவம்பர் 4 முதல் 18 வரை 72 பேரணிகள் மற்றும் ரோட் ஷோக்களை நடத்தினார். 80 வயதுக்கு மேல் ஆன சரத் பவார் கூட 55 பேரணிகளில் பேசியிருக்கிறார்.

ஆனால் காங்கிரஸ் மூத்த தலைவர்களான ராகுல் காந்தி மற்றும் மல்லிகார்ஜுன் கார்கே ஆகியோர் முறையே 7 மற்றும் 9 பேரணிகளில் மட்டுமே கலந்து கொண்டிருக்கிறார்கள். காங்கிரஸ் கட்சியினரே ராகுல் காந்தியின் இந்த போக்கு குறித்து புலம்பிக் கொண்டிருக்கிறார்கள்.

தேர்தல் பிரச்சாரத்தில் மட்டுமல்ல, தேர்தல் வாக்குப் பதிவு அன்று கூட பாஜக ஓயவில்லை. ஒட்டுமொத்த வாக்காளர்களின் பெயர், அலைபேசி எண் அடங்கிய அதிநவீன மென்பொருள் மூலம் உருவாக்கப்பட்ட வாக்காளர் தரவுத் தளத்தை பாஜக வைத்திருந்தது.

வாக்குப்பதிவு நாளில், மதியம் வரை வாக்களிக்காத வாக்காளர்கள் யார் என அறிந்து உடனடியாக அவர்களுக்கு அந்தந்த பகுதி பாஜக நிர்வாகிகள் அலைபேசி செய்து, ‘ இன்னும் நீங்கள் ஏன் ஓட்டுப் போடவில்லை? இப்போதே போய் ஓட்டு போடுங்கள்’ என்று அழைப்பு விடுத்து வாக்களிக்க வைத்துள்ளனர்.

இப்படி தேர்தல் முடியும் வரை உழைத்ததற்கு பலனைதான் பாஜக அறுவடை செய்திருக்கிறது.

-ஆரா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….

எப்போதும் ஆட்சியில் பங்கு இல்லை : அமைச்சர் ஐ.பெரியசாமி

4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்… எச்சரிக்கை விடுத்த சென்னை வானிலை மையம்!

வயநாடு இடைத்தேர்தல் : ராகுலின் சாதனையை முறியடித்த பிரியங்கா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share