ஒரு திரைப்படத்தில் நடிக்க முடிவாகி, சில காட்சிகள் படம்பிடிக்கப்பட்டு, அப்படம் குறித்த அறிவிப்பும் வெளியானபிறகு, அதிலிருந்து நாயகனோ, நாயகியோ வெளியேறுவது என்பது திரையுலகில் சகஜமான ஒன்று. Shruti Haasan quit dacoit movie reason
அப்படிப் பல போட்டோஷுட்களை நாம் பார்த்திருக்கிறோம். தெலுங்கு நடிகர் அடிவி சேஷ் நாயகனாக நடிக்கும் ‘டகாய்ட்’ (DACOIT) படத்திலும் அதுவே நிகழ்ந்திருக்கிறது.
முதலில் இந்த படத்தில் பிரதான பாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டவர் ஸ்ருதிஹாசன். அவர் சம்பந்தப்பட்ட டீசர் சில மாதங்களுக்கு முன்னர் வெளியானது. கலவரம் நடந்த இடத்தில் ஸ்ருதி நடந்து வருவதாகக் காட்சிகள் அதில் இடம்பெற்றிருந்தன. தொடர்ந்து படப்பிடிப்பு நடந்து வருவதாகவும், தெலுங்கு மட்டுமல்லாமல் தமிழ், இந்தியிலும் அப்படம் வெளியாகும் என்று அறிவிப்பு வெளியானது.
ஆனால், திடீரென்று ஸ்ருதிக்குப் பதிலாக மிருணாள் தாகூர் அப்படத்தில் இடம்பிடித்தார். அதே டீசர் மிருணாளைக் கொண்டு படம்பிடிக்கப்பட்டு சமூகவலைதளங்களில் வெளியிடப்பட்டது.

அதையடுத்து ‘டகாய்ட்’ படத்தில் இருந்து வலுக்கட்டாயமாக ஸ்ருதி வெளியேற்றப்பட்டார் என்பது உட்படப் பல்வேறு செய்திகள், வதந்திகள் பரவத் தொடங்கின. படக்குழு அது தொடர்பாகப் பதிலளிக்காதது பல யூகங்களுக்கு வழிவகுத்தது.
இந்த நிலையில், தற்போது ஸ்ருதி விவகாரம் குறித்து ‘டகாய்ட்’ படத்தின் நாயகன் அடிவி சேஷ் வாய் திறந்திருக்கிறார்.
சமீபத்தில் அவர் அளித்த பேட்டியொன்றில், ‘டகாய்ட் படத்தில் இருந்து ஸ்ருதி வெளியேறியது சுமூகமாகவே நிகழ்ந்தது’ என்றிருக்கிறார்.
படக்குழுவோடு சேர்ந்து பணியாற்றுவதில் ஸ்ருதிக்கு இருந்த சிரமங்களாலும், கூலி படத்தின் ஷெட்யூல் காரணமாகவும், தாமாக முன்வந்து அவர் வெளியேறியதாகக் கூறியிருக்கிறார்.
தற்போது வரை அப்படத்தின் 60% படப்பிடிப்பு நிறைவடைந்திருப்பதாகத் தெரிவித்திருக்கிறார் அடிவி சேஷ்.
எல்லாம் சரிதான், ‘விருமாண்டி படத்துல மாதிரி ஸ்ருதியோட வெர்ஷன் வேற மாதிரி இருந்துராம’ என்று சோஷியல் மீடியாவில் வருகிற கமெண்ட்களுக்கு தான் பாவம் என்ன பதில் சொல்லப் போகிறாரோ?!