டெல்லி கார் குண்டு வெடிப்புக்கு முன் சிக்கிய 350 கிலோ வெடி மருந்து- அதிர்ச்சி தகவல்

Published On:

| By Mathi

Delhi Blast 2

டெல்லி செங்கோட்டை கார் குண்டு வெடிப்பு சம்பவத்துக்கு (Delhi Car Bomb Blast) முன்னதாக டெல்லி அருகே 350 கிலோ வெடி மருந்துகள், ஏகே 47 ரக துப்பாக்கிகள் என மிகப் பெரும் ஆயுத குவியலை ஜம்மு காஷ்மீர் போலீசார் கைப்பற்றி இருந்தனர்.

ஜம்மு காஷ்மீரில் செயல்படும் ஜெய்ஷ் இ முகம்மது என்ற பயங்கரவாத அமைப்பு டெல்லியில் மிகப் பெரிய நாசவேலைக்கு சதித் திட்டம் தீட்டி இருப்பதாக காஷ்மீர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில் டெல்லி மற்றும் புறநகர் பகுதிகளில் சந்தேக நபர்களை ஜம்மு காஷ்மீர் போலீசார் வலை வீசி தேடினர்.

ADVERTISEMENT

இந்நடவடிக்கையின் போது டாக்டர் அதில் அகமது ராதேர் என்பவர் சிக்கினார். தெற்கு காஷ்மீரைச் சேர்ந்த அதில் அகமது, உ.பி. மாநில சஹாரன்பூரில் ஜம்மு காஷ்மீர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், டாக்டர் முஜம்மில் சகீல் என்பவர் சிக்கினார். டெல்லி அருகே ஃபரிதாபாத்தில் முஜம்மில் சகீல் வீட்டில் ஜம்மு காஷ்மீர் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் 350 கிலோ வெடி மருந்து மற்றும் ஏகே 47 ரக துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

ADVERTISEMENT

ஜம்மு காஷ்மீர் போலீசார் கடந்த சில வாரங்களாக நடத்திய இந்த தீவிர தேடுதல் நடவடிக்கையில், தலைநகர் டெல்லியில் நாசவேலைகளுக்கு மிகப் பெரும் சதித் திட்டம் தீட்டப்பட்டிருந்த தகவல் உறுதி செய்யப்பட்டது.

இந்த நிலையில் இன்று (நவம்பர் 10)_இரவு டெல்லி செங்கோட்டை அருகே கார் குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. இத்தாக்குதலில் 8 பேர் பலியாகி உள்ளனர். மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர்.

ADVERTISEMENT

டெல்லி கார் குண்டு வெடிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து தலைநகர் முழுவதும் உச்சகட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக தேசிய புலனாய்வு ஏஜென்சி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share