காவல்துறை மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்த மயிலாடுதுறை டிஎஸ்பி சுந்தரேசன் மீது தனது பணிகளின் போது செய்த குற்றங்களை காவல்துறை பட்டியலிட்டுள்ளது. Shocking allegations on suspended dsp sundaresan
தமிழக காவல்துறையில் 1859 மெட்ராஸ் சட்டம் பிரிவு 10ன் படி பொது கருத்து சுதந்திரம் மற்றும் பேச்சுரிமை வரையறுக்கப்பட்டது. 1952ல் தமிழ்நாடு போலீஸ் சபாடினேட்டர் (இன்ஸ்பெக்டருக்கு கீழ் உள்ளவர்கள்) சர்வீஸ் ரூல்ஸ், இதிலும் கருத்து சுதந்திரம் வரையறுக்கப்பட்டது. அதாவது காவல்துறை பணியில் உள்ளவர்கள், வரையறுக்கப்பட்டதற்கு மீறி சீருடையில் கருத்தை தெரிவிப்பது சட்டத்திற்கு புறம்பானது.
இந்த நிலையில் காவல்துறை மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்து ஹாட் டாபிக் ஆக மாறியுள்ளார் மயிலாடுதுறை டிஎஸ்பி சுந்தரேசன். அவர் ஜூலை 17-ந் தேதி செய்தியாளர்களிடம் பேசுகையில், தாம் லஞ்சம் வாங்காத நேர்மையான அதிகாரி எனவும், தமக்கு நெருக்கடி தருவதாகவும் குற்றம்சாட்டி இருந்தார். தமது வாகனத்தை அதிகாரிகள் தர மறுத்ததால் நடந்தே அலுவலகத்துக்கு செல்வதாகவும் பத்திரிகையாளர்களை அழைத்து வீடியோ எடுக்க வைத்து பரபரப்பைக் கிளப்பியிருந்தார் சுந்தரேசன்.
ஆனால் காவல்துறை வட்டாரங்களோ, டிஎஸ்பி சுந்தரேசன் காவல்துறையில் செய்த சேட்டைகளும் லீலைகளும் என்ன என்ன தெரியுமா? என மலைக்க வைக்கும் ஒரு பட்டியலையே அசால்ட்டாக வீசி வருகின்றனர்.

சுந்தரேசன் மீதான காவல்துறையின் அலுவல் நடவடிக்கைகள்:
2005 – 2006 காலக்கட்டத்தில் சென்னை நந்தம்பாக்கம் காவல் நிலையத்தில் பணியாற்றிய போது (குற்ற எண் 42/2006, 43/2006) எப்.ஐ.ஆர், மற்றும் கைது அட்டை தவிர சாட்சி பட்டியல், முக்கிய ஆவணங்கள் உள்ளிட்ட ஆதாரங்களை வைக்கவில்லை என்பதால் அப்போது சுந்தரேசனுக்கு 3(a)மெமோ வழங்கப்பட்டது.
வள்ளியூர் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக இருந்தபோது (குற்ற எண் 223/2002, 240/2002) இரு வழக்குகளில் கொலை முயற்சி, வீட்டுக்குள் அத்துமீறி புகுந்து பொருளை சேதப்படுத்தி கொள்ளையடிப்பது போன்ற வழக்குகள் இருந்த நபர் ஒருவருக்கு பாஸ்போர்ட் வழங்க சுந்தரேசன் பரிந்துரை செய்து கையெழுத்து இட்டிருந்தார். இதனால் 3(a) மெமோ வழங்கப்பட்டது.
துரைப்பாக்கம் காவல்நிலையத்தில் பணியாற்றிய போது, தமீம் அன்சாரி என்பவர் திருட்டு விசிடி, டிவிடி விற்றதாக 2008-ம் ஆண்டு பெண் சப் இன்ஸ்பெக்டர் ஜெயகித்திராவால் காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டார். ஆனால் அன்சாரி மீது வழக்கு பதிவு செய்யாமல் ரூ.40,000 லஞ்சம் பெற்றிருக்கிறார் சுந்தரேசன்.
இதே துரைப்பாக்கத்தில் பணிபுரிந்த போது, பெருங்குடி பேரூராட்சி துணைத் தலைவர் சீனிவாசனை முடிந்து போன வழக்குகளை காட்டி குண்டர் சட்டத்தில் அடைப்பதாக மிரட்டி 2 முறை ரூ.40,000 லஞ்சம் வாங்கியிருக்கிறார். இந்த புகாரின் மீது காஞ்சிபுரம் டிஐஜியால் 3(b) மெமோ வழங்கப்பட்டது.
மேலும் 2008-ம் ஆண்டு திருவள்ளுவர் தினத்தன்று மதுபானங்கள் விற்றதாக டாஸ்மாக் பார் உரிமையாளர் மணி, டாஸ்மாக் பார் மேலாளர் சண்முகசுந்தரம் ஆகியோரை மிரட்டி மாதம் ரூ.3,000 லஞ்சம் பெற்று வந்துள்ளார்.
பன்னுசேகர் என்பவர் தொடர் குற்றத்தில் ஈடுபட்டு வந்ததால், குற்றத் தடுப்பு சட்டமான 110ன் கீழ் வழக்குப்பதிவு செய்ய கோட்டாட்சியர் முன்பு ஆஜர்படுத்தாமல் தவிர்த்தார். இதனால் இந்த வழக்கு நிலுவையில் வைக்கப்பட்டது.
அதே எல்லைக்குட்பட்ட பகுதியில் சாலையோர டீ கடை வியாபாரம் நடத்தியவர்களிடம் மாதந்தோறும் மாமூல் வாங்கியதும், குறிப்பாக கிருஷ்ணன் என்பவரிடம் மாதம் ரூ.3,000 லஞ்சம் வாங்கியதும் பதிவாகியுள்ளது.
இதன் உச்சமாக சொல்லப்படுவதுதான் புவனாவுடனான சுந்தரேசனின் லீலைகள்.
துரைப்பாக்கத்தில் சுந்தரேசன் பணிபுரிந்த போது, புவனா என்பவர் கேஸ் (சிலிண்டர்) திருடு போனதாக புகார் கூறுகிறார். அந்த புகார் மீது சி எஸ் ஆர் கொடுக்காமல் வழக்கு பதிவு செய்யாமல், காணாமல் போன சிலிண்டரைக் கண்டுபிடித்துக் கொடுத்த சுந்தரேசன் அதன் பிறகு புவனாவுடன் தவறான நட்பு ஏற்படுத்திக் கொண்டு, வீட்டுக்கு அடிக்கடி சென்று வந்துள்ளார் .
ஒரு கட்டத்தில் காவல் நிலையத்திலேயே துரைப்பாக்கம் இன்ஸ்பெக்டர் சபாபதி, ரைட்டர் கனகராஜ் மீதான பழைய பகையை தீர்க்க, புவனாவை அடித்து கட்டாயப்படுத்தி வாக்குமூலம் வாங்கியதுடன் காவல் துறையினருக்கான பொதுநாட் குறிப்பில் (CD) உண்மைக்கு மாறான தகவல்களை எழுதினார். போலீஸ்காரர்களை பொய் சாட்சியம் சொல்ல மிரட்டினார்.
ஆனால் பின்னர் புவனாவையே பலிகடாவாக்கியும் இருக்கிறார் சுந்தரேசன். அதாவது புவனா தன்னை உல்லாசமாக இருக்க அழைத்தார் என உண்மைக்கு மாறாக, காவலர் ஒழுக்க விதிகளுக்கு எதிராக பொது பதிவேட்டில் (CD) பதிவு செய்திருந்தார். இந்த காரணங்களுக்காக இவர் மீது 3(b) மெமோ கொடுக்கப்பட்டது.
இவர் மீது 3(a), 3(b) என மொத்தம் 4 மெமோக்கள் வழங்கப்பட்ட நிலையில், சஸ்பெண்ட் செய்யப்பட இருந்த சுந்தரேசனை அப்போதிருந்த அதிகாரிகள் காப்பாற்றினர் என காவல்துறை வட்டாரத்தில் கூறுகிறார்கள்.
இவர் மீதுள்ள குற்றச்சாட்டுகளை பற்றி, சுந்தரேசனை தொடர்புகொண்டு கேட்டோம். ”சஸ்பெண்டே செய்திட்டாங்க… இனிமேல் நான் என்ன பதில் சொல்ல போகிறேன்” என்று லைனை துண்டித்தார்.