கன்னட சினிமாவின் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் சிவராஜ்குமார். ‘கருநாடக சக்கரவர்த்தி’ ‘சிவண்ணா’ என ரசிகர்களால் அழைக்கப்படும் இவர் தமிழ் ரசிகர்களுக்கு பரிட்சயம் ஆனது ரஜினிகாந்தின் ‘ஜெயிலர்’ படத்தின் மூலமாகத் தான்.
அதற்குப் பிறகு நடிகர் தனுஷ் நடித்து வெளியான ‘கேப்டன் மில்லர்’ திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் சிவராஜ்குமார்.
இந்த நிலையில், சமீபத்தில் தனக்கு உடல்நிலையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், அதற்கான சிகிச்சையில் தான் ஈடுபட்டுவருவதாகவும் நடிகர் சிவராஜ்குமார் தெரிவித்துள்ளார்.
இயக்குநர் நார்தன் இயக்கத்தில் சிவராஜ்குமார் நடித்து வருகிற நவ.15ஆம் தேதி வெளியாகவுள்ள திரைப்படம் ‘பைரதி ரனகல்’. இந்தத் திரைப்படம் சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியான ‘மஃப்டி’ திரைப்படத்தின் பிரிக்வெல் ஆகும்.
இந்தப் படத்தை சிவராஜ்குமாரின் கீதா பிக்சர்ஸ் நிறுவனமே தயாரித்துள்ளது. இந்தப் படத்தின் புரோமோஷனில் தன் உடல் நலம் குறித்து மனம் திறந்தார் சிவண்ணா.
அதுகுறித்து பேசிய அவர், ‘ எல்லோரைப் போலவும் அதைக் கேட்கும் போது எனக்கும் அதிர்ச்சியாகவே இருந்தது. ஆனால், என் நண்பர்கள், குடும்பம் மற்றும் ரசிகர்கள் கொடுத்த பலத்தால் அந்த சவாலை சந்தித்து தற்போது இரண்டு கட்ட சிகிச்சைகள் நல்ல படியாக நடந்து முடிந்தன. இன்னும் இரண்டு கட்ட சிகிச்சைகள் மீதம் உள்ளன.
கவலைப் படத் தேவையில்லை. இந்த சிகிச்சைகளுக்கு நடுவே தான் பல்வேறு ஆக்ஷன் காட்சிகளில் நடித்தேன், ‘டான்ஸ் கர்நாடகா டான்ஸ்’ நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினேன். தற்போது ‘பைரதி ரனகல்’ படப் புரோமோஷன் வேலைகளில் ஈடுபட்டு வருகிறேன்.
எனக்கு சிறிது காலம் ஓய்வு தேவைப் படுகிறது. மீதமுள்ள சிகிச்சைகளை முடித்து விட்டு ஜனவரி மாதம் இறுதியில் பழைய நிலைக்கு திரும்பி விடுவேன்’ எனத் தெரிவித்துள்ளார்.
ஆனால், தனக்கு என்ன உடல்நல பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறித்து அவர் தெரிவிக்கவில்லை.
மேலும், சிவராஜ்குமாருக்கு அமெரிக்காவில் உள்ள ஃப்லோரிடாவில் வருகிற டிசம்பர் மாதம் சிகிச்சை நடக்கவிருப்பதாக கர்நாடகா திரைத்துறை வட்டாரங்களில் பேசப்படுகிறது.
இதற்கிடையில், சிவராஜ்குமார் நடிக்கும் ‘45’ என்கிற படத்தின் படப்பிடிப்பு நிறைவாகியுள்ளது. மேலும், தெலுங்கு நடிகர் ராம்சரண் நடிக்கும் அடுத்த படம் உட்பட பல்வேறு படங்களில் அடுத்தடுத்து சிவராஜ்குமார் கமிட் ஆகியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
– ஷா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
தனுஷ் இயக்கும் ‘இட்லி கடை’ !: ரிலீஸ் தேதி அறிவிப்பு