தமிழகத்தில் ஆட்சியிலும் காங்கிரஸ் கட்சி பங்கு கேட்கும் என்று அக்கட்சியின் முன்னாள் தமிழக தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.
சிதம்பரத்தில் இன்று (செப்டம்பர் 18) செய்தியாளர்களிடம் கே.எஸ்.அழகிரி கூறியதாவது: நாங்கள் (காங்கிரஸ்) அதிக இடங்களிலும் போட்டியிட விரும்புகிறோம். அரசாங்கத்திலும் நாங்க பங்கு பெற விரும்புகிறோம்.
50, 60 ஆண்டுகாலமாக காங்கிரஸ் கட்சி ஏதாவது ஒரு அரசியல் இயக்கத்துடன் கூட்டு சேர்ந்து, ‘சாறை’ அவர்கள் குடிப்பதற்கும் சக்கையை நாங்கள் பார்க்கும் ஒரு சூழ்நிலை நிலவுகிறது.
அந்த நிலையை மாற்றி, வெற்றி பெறுகிற அரசாங்கத்தில் எங்களுக்கும் பங்கு வேண்டும் என கேட்கிற நிலைக்கு நாங்கள் வருவோம் என்பதுதான் காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு. இவ்வாறு கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் இடம் பெற்றிருந்தாலும் திமுக தனிப்பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைக்கும் என கூறி வருகிறது. நடிகர் விஜய்யின் தவெகதான், ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு கொடுப்போம் என பேசி வருகிறது. இந்த பின்னணியில் கே.எஸ்.அழகிரி, ஆட்சியிலும் பங்கு கேட்போம் என கூறியிருப்பது கவனம் பெற்றுள்ளது.