கவிஞர் வைரமுத்துவின் தாத்தா பிறந்த ஊர் இன்று வைகை அணைக்குள் மூழ்கிக் கிடக்கிறது. அதாவது வைகை அணை கட்டப்பட்டபோது, வைரமுத்துவின் தாத்தா பிறந்து வளர்ந்த ஊர், தெரு, வீடு எல்லாம் வைகை அணையால் உருவான நீர்பிடிப்புப் பகுதிக்குள் மூழ்கியது. தனது தண்ணீர் தேசம் நாவலில் அதை நெகிழ்வோடு பதிவு செய்து இருப்பார் வைரமுத்து
அதே போல வைகை அணை கட்டப்பட்ட போது, அணைக்குள் மூழ்கிய ஒரு கிராமத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட ஒரு குடும்பத்து சிறுவன் பாண்டி,
வாங்கிய கடனைக்கட்ட முடியாமல் அப்பா தற்கொலை செய்து கொள்ள, அம்மாவும் இறந்து போக, அனாதையான அவனுக்கு தன் வீட்டில் இருந்து தினமும் சாப்பாடு கொடுத்து அனுப்புகிறார் ரொக்கப்புலி என்கிற கஞ்சா வியாபாரி மற்றும் அடிதடி நபர் (சரத்குமார்)
ரொக்கப்புலியின் ரவுடித்தனத்தால் ஈர்க்கப்பட்ட சிறுவன் பாண்டியை, படிக்கச் சொல்லி திட்டி அனுப்பி விடுகிறார் ரொக்கப்புலி.
ஆனால் ரொக்கப்புலியைக் கொல்ல வரும் ஒருவனை கத்தியால் குத்தி, பாண்டி ரொக்கப் புலியைக் காப்பாற்ற , அவனை தன்னோடு சேர்த்துக் கொள்கிறார்.
அவனும் வளர்ந்து இளைஞன் ஆக (சண்முகப் பாண்டியன்) பாண்டியும் ரொக்கப்புலியும், மாமன் மாப்பிள்ளை என்ற உறவில் பழகுகிறார்கள் .
விதம் விதமான முறைகளில் கஞ்சா கடத்துகிறார்கள்.
தடுக்க வந்த போலீஸ் அதிகாரியையே டிரான்ஸ்ஃ பர் செய்து தூக்கி அடிக்கும் வல்லமை இருக்கிறது அவர்களுக்கு.
ஆனால் அடுத்து வரும் பெண் போலீஸ் அதிகாரி (தர்னிகா) இவர்களைக் கைது செய்ய, பெண் போலீஸ் மீது பாண்டிக்கு காதல். ஆனால் அவள் இவனை குற்றவாளியாகவே பார்க்கிறாள்.
கஞ்சா கடத்தும் அவனை, தப்பிக்க முடியாமல் சிக்க வைக்க, திட்டமிட்டு பாண்டியை நம்ப வைத்து பெண் போலீஸ் அதிகாரி ஒரு நாடகம் போட, பாண்டி சிக்குகிறான் .
ரொக்கப்புலி வந்து ஸ்டேஷனை அடித்து உடைத்து நொறுக்கி கொளுத்தி, பாண்டியை மீட்டுக் கொண்டு போகிறார்.
காவல் நிலையத்தை உடைத்த வழக்கை தள்ளி வைத்து விட்டு, வெடிகுண்டு தயாரித்தார்கள் என்ற பொய் வழக்கை பாண்டி மற்றும் ரொக்கப் புலி மீது போடுகிறார், சைக்கோத்தனமான போலீஸ் உயர் அதிகாரி ஒருவர்.
அதில் இருந்து பாண்டியும், ரொக்கப்புலியும் தப்பிக்க, அவர்களை தனிப்பட்ட வகையில் பழிவாங்க முடிவு செய்கிறார் போலீஸ் உயர் அதிகாரி.
பாண்டியும், ரொக்கப்புலியும் கஞ்சா கடத்துவதை விட்டு விட்டு, விவசாயம் செய்ய முயல, விளைச்சல் இல்லை. ஊர் மக்கள் சாப்பாட்டுக்கே கஷ்டப்பட, அவர்களுக்காக மீண்டும் கஞ்சா கடத்தலில் இறங்குகிறார்கள் ரொக்கப்புலியும் பாண்டியும்.
நடந்தது என்ன என்பதே, ஸ்டார் சினிமாஸ் சார்பில் முகேஷ் டி செல்லையா தயாரிக்க, சண்முகப் பாண்டியன், சரத்குமார், தர்னிகா, ஸ்ரீரெட்டி, காளி வெங்கட், முனீஸ் காந்த் நடிப்பில் பொன்ராம் இயக்கி இருக்கும் கொம்பு சீவி.
இதுவரை சண்முகப்பாண்டியன் நடித்த படங்களிலேயே இதில்தான் ஓரளவுக்கு பாராட்டும்படி நடித்திருக்கிறார்.
சரத்குமார் அசத்தலாக நடித்திருக்கிறார்.
எதிர்பாராத மழையால் நீரில் பயிர்கள் மூழ்கிக் கிடக்கும் காட்சிகளை மிக சிறப்பாக எடுத்து இருக்கிறார் பொன்ராம்.
பெண் போலீஸ் அதிகாரி கேரக்டரில் தர்னிகா நடிப்பு போதவில்லை. வசனம் பேசி விட்டு, ‘ அப்பாடா கரெக்ட்டா பேசிட்டேன்..” என்று அவர் ஆசுவாசம் அடைவது முகத்தில் தெரிகிறது.
வைகை அணை கதையை போகிற போக்கில் இரண்டாம் பகுதியில் சும்மா காமா சோமா வசனத்தில் சொல்கிறார்கள். அதை ஆரம்பத்தில் காட்சியாகச் சொல்லி, அதன் பின்னர் சிறுவன் அம்மாவை இழக்கும் கதையை சொல்லி இருந்தால், படத்தின் கனம் இன்னும் ஏறி இருக்கும்.
செத்துப் போன அம்மா, பாண்டி வளர்ந்த பின்னும் அடிக்கடி இன்னொரு பெண்ணின் உடலில் ஆவியாக வந்து ஆடி, பாண்டியை வர வைத்து தலை சீவி விட்டு , மடியில் படுக்க வைத்து தாலாட்டி விட்டுப் போகிறது என்ற கதை போக்கு.. உண்மையில் அபாரமானது. நெகிழ்வானது. அதை வைத்து அட்டகாசமாக அழுத்தமாக பல காட்சிகளை வைத்து இருக்கலாம். தவற விட்டு இருக்கிறார் இயக்குனர் பொன்ராம் .
இப்படி சிறப்பான பகுதிகளை எல்லாம் விட்டு விட்டு, இரட்டை அர்த்த , ஆபாச வசனங்கள் மூலமும் , செயற்கையான வசனங்கள் நடிப்பு இவற்றின் மூலமும் காமெடி வரும் என்று…..
வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் படங்களைக் கொடுத்த பொன்ராம் முடிவு செய்து விட்டது தான் பரிதாபம்.
ஆனால் அந்த பேய் வரும் பெண்ணின் கேரக்டருக்கு தெலுங்கு கவர்ச்சி நடிகை ஸ்ரீ ரெட்டியை (யாருன்னு தெரியுதா?) நடிக்க வைத்திருப்பதன் பின்னால் இருக்கும் சிதம்பர ரகசியம்தான் புரியவே இல்லை.
பெண் போலீஸ் அதிகாரியை ஒரு கஞ்சா விற்பவன் டாவடிப்பதும், அவன் ஹீரோ என்பதற்காக பெண் போலீஸ் அதிகாரி சும்மா மையமாக, பட்டும் படாமல் நடந்து கொள்வதும் எல்லாம், எந்தக் காலத்து சினிமா? படுத்தறீங்களே…!
ஒரு முக்கியமான பிரச்னைக்காக மீண்டும் கஞ்சா கடத்த பாண்டியும் ரொக்கப் புலியும் முடிவு செய்கிறார்கள். ஆனால் அந்த முயற்சியில் நடப்பது எல்லாம் செயற்கையான எரிச்சல் ஊட்டுகிற லாஜிக் இல்லாத காமெடியே இல்லாத காமெடிகள்.
எனில் அந்தக் கடத்தலின் நோக்கமாவது நிறைவேறியதா என்றால் அதுவும் இல்லை.
வானத்தில் ரோகிணி நட்சத்திரம் தெரியுது என்று நடிகை ரோகிணி போட்டோவைக் காட்டுவது போன்ற விஷயங்கள் ஐடியாவாக காமடியாகவே இருக்கிறது. ஆனால் எடுத்த விதம் காட்சி அனுபவத்தில் காமெடியாக வெளிப்படாமல் புஸ்வானம் ஆகிறது.
தமிழ் வார்த்தை ஒவ்வொன்றிலும் கடைசியாக. ‘லு…” என்று சேர்த்துக் கொண்டால் அதுதான் தெலுங்கு என்று இங்கே ஒரு காமெடி கமெண்ட் உண்டு. (உதாரணமாக முதல்வர் என்பதை முதல்வர்லு என்று சொல்வது)
ஆனால் அதை வைத்து ஆபாசமாக ஒரு காமெடியை உருவாக்கியதே ஒரு கொடுமை என்றால், அப்படி சொல்லும் தமிழர்களை தெலுங்கர்கள் பதிலுக்கு அதே ஆபாச காமெடியை வைத்து மிரட்டி ஒரு வழி செய்வது போல காட்சி வருகிறது.
படம் சம்மந்தப்பட்டவர்களின் தெலுங்கு மொழியின் மீதான பற்றுக்கும் அந்த மொழியை தவறாகப் பேசும் தமிழர்கள் சிலருக்கு எதிரான கோபத்தை வெளிப்படுத்தும் தீவிரமும் குறிப்பிடத்தக்கது.
காளி வெங்கட் , முனீஸ் காந்த் .. இவர்கள் எல்லாம் இந்தப் படத்துக்கு எதற்கு என்பது எவ்வளவோ யோசித்தும் புரியவே இல்லை.
கதைப்படி பார்த்தால், ரொக்கப் புலியும் பாண்டியும்தான் அயோக்கியர்கள். சமூக விரோதிகள். பாண்டியைப் பிடிக்க பெண் போலீஸ் போடும் திட்டம் நியாயமானதுதான். ஆனால் இவர்கள் ஏதோ தியாகிகள் போலவும், பெண் போலீஸ் அதிகாரி கெட்டவர் போலவும் படம் உணர்த்துவது படு செயற்கை.
உண்மையில் சைக்கோ போலீஸ் என்று சொல்லப்படும் உயர் போலீஸ் அதிகாரி நல்லவர்தான். கடைசி வரை லஞ்சப் பணத்துக்கு மயங்காதவராகவே இருக்கிறார்.
வைகை அணை கட்டப்பட்ட போது, ஊரும் நிலமும் நீருக்குள் மூழ்கி விட, நிலங்களை இழந்து , வறுமையில் மூழ்கி, வேறு வழியின்றி தான் கஞ்சா கடத்த வந்தோம் என்று பாண்டியும் ரொக்கப்புலியும் ஒரு காட்சியில் சொல்ல,
உடனே பெண் போலீஸ் அதிகாரி, “அந்த அணையால்தானே இன்னிக்கு பல தென்மாவட்டங்கள்ல விவசாயம் நடக்குது. குடிதண்ணீர் கிடைக்குது” என்று சொல்கிறார் . (வைரமுத்து இதையும் சொல்லி இருப்பார்)
பதிலுக்கு சரத்குமார் “ஆனா, எங்க தாகம் தீரலையே” என்கிறார்
ஆனால் வைகை அணை கட்டப்பட்டபோது, நீரில் மூழ்கிய கிராமங்களில் வாழ்ந்தவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்பட்டது. மேட்டுப் பகுதிகளில் நிலம் ஒதுக்கவும், உரிய நஷ்ட ஈடு தரவும், அதை உடனடியாக செயல்படுத்தவும் அன்றைய முதல்வர் காமராஜர் உத்தரவிட்டார் என்று பதிவு இருக்கிறது.
எனில் அவர் உண்மையிலேயே உத்தரவிடவில்லையா? அல்லது அவர் போட்ட உத்தரவுகள் நடைமுறைக்கு வரவில்லையா? அதை காமராஜர் கவனிக்கவில்லையா என்ற கேள்வியும் வருகிறது . அது பற்றி இன்னும் தெளிவாக பேசி இருந்தால் இந்தப் படம் அந்தப் பரபரப்பு காரணமாகவே வெற்றிப்படமாக ஆகி இருக்கும்
மொத்தத்தில் கொம்பு சீவி .. கூர் தீட்டவே இல்லை.
