கல்வராயன் மலை -மணியார்பாளையம் பழங்குடியினர் உண்டு உறைவிட மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த 2 ஆசிரியர்கள் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். பள்ளியின் தலைமை ஆசிரியர் தலைமறைவாகி உள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலை அருகே மணியார்பாளையம் கிராமத்தில் அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் சுமார் 500 மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.
இந்நிலையில் பள்ளியின் தலைமையாசிரியர் தனபால், பள்ளி மாணவிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. இதையடுத்து கள்ளக்குறிச்சி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர் இளையராஜா மேற்பார்வையில் குழந்தைகள் உதவி மைய பணியாளர்கள் மணியார்பாளையத்தில் உள்ள உண்டு உறைவிட பள்ளிக்கு நேரில் சென்று விசாரணை செய்தனர்.
அப்போது, தலைமை ஆசிரியர் தனபால் பாலியல் தொல்லை கொடுத்தது விசாரணையில் உறுதியானது. இதைத் தொடர்ந்து துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ள கள்ளக்குறிச்சி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மற்றும் பழங்குடியினர் நலத்திட்ட அலுவலருக்கும் பரிந்துரைக்கப்பட்டது. இதன்படி, கடந்த சில நாட்களுக்கு முன் தலைமை ஆசிரியர் தனபாலை சஸ்பெண்ட் செய்து பழங்குடியின நல இயக்குநர் அண்ணாதுரை உத்தரவிட்டார்.
மேலும் தலைமையாசிரியர் தனபாலுடன் இயற்பியல் ஆசிரியர் ராஜவேல் மற்றும் பகுதிநேர ஆசிரியர் தேவேந்திரன் ஆகியோரும் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததும் தெரியவந்தது.
தலைமை ஆசிரியர் தனபால் தலைமறைவாக உள்ள நிலையில் பகுதி நேர ஆசிரியர் தேவேந்திரன் மற்றும் இயற்பியல் ஆசிரியர் ராஜவேல் ஆகிய இருவரையும் போக்சோ சட்டத்தின் கீழ் கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். தப்பி ஓடிய தலைமை ஆசிரியர் தனபாலை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.