தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாகக் கடுமையான குளிர் காற்று வீசி வருகிறது. சென்னை, திருவண்ணாமலை, கடலூர் மற்றும் புதுச்சேரியில் குளிரின் தாக்கம் அதிகமாக உணரப்படுகிறது.
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் 2 டிகிரி செல்சியஸ், உதகமண்டலத்தில் 4.1 டிகிரி செல்சியஸ் என மிகக் குறைந்த வெப்பநிலை பதிவாகியுள்ளது.
இந்த அசாதாரண நிலை குறித்து வானிலை ஆய்வாளர்கள் கூறுகையில்,
- வட இந்தியாவில் நிலவும் உயர் அழுத்த வறண்ட வாடை காற்று
- தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் வளிமண்டலக் கீழடுக்கு சுழற்சி ஆகியவைதான் இதற்கு காரணம் என்கின்றனர்.
இந்திய வானிலை ஆய்வு மையம் சொல்வது என்ன?
- சென்னை, புறநகர் பகுதிகளில் அதிகாலை நேரங்களில் கடும் பனிமூட்டம் நிலவும்; வெப்பநிலை சுமார் 20 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்
- உள் மாவட்டங்களான வேலூர், கரூர், சேலம், ஈரோடு, கோயம்புத்தூர், தருமபுரியில் குறைந்தபட்ச வெப்பநிலை 15-16 டிகிரி செல்சியஸ் வரை குறையும்.
- திருவண்ணாமலை, திருச்சி மற்றும் மதுரையில் வெப்பநிலை சுமார் 16-17 டிகிரி செல்சியஸ் வரை குறையக் கூடும்.
- மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளான ஊட்டி, கொடைக்கானல், வால்பாறையில் இரவு நேரங்களில் குறைந்தபட்ச வெப்பநிலை 8-10 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும்; சில இடங்களில் உறைபனி ஏற்படவும் வாய்ப்புள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் டிசம்பர் 23 ஆம் தேதி வரை கடுமையான குளிர் நீடிக்கும் எனத் தெரிவித்துள்ளது.
டிசம்பர் 25 வரை பெரும்பாலும் வறண்ட, குளிர்ந்த, மிதமான வானிலையே நிலவும் என தனியார் வானிலை வல்லுநர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
இன்று (டிசம்பர் 15) மற்றும் நாளை (டிசம்பர் 16) தமிழகத்தில் குறைந்தபட்ச வெப்பநிலை வழக்கத்தை விட 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் வெப்பநிலை 8 டிகிரி செல்சியஸ் முதல் 5 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகி உள்ளது. கொடைக்கானலில் உறைபனியால் சுற்றுலா பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
கன்னியாகுமரியில் குளிர் காலமாக இருந்தாலும் தற்போது மிகக் கடுமையான குளிர் நிலவுகிறது.
