பாமக சின்னம் விவகாரத்தில் ராமதாஸுக்கு பின்னடைவு – நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு!

Published On:

| By Kavi

மாம்பழம் சின்னத்தை முடக்க முடியாது என்று தேர்தல் ஆணையம் நீதிமன்றத்தில் கூறியுள்ளது. 

பாமக நிறுவனர் ராமதாஸ் மாம்பழம் சின்னத்தையும் கட்சியின் பெயரையும் தனது தரப்புக்கு ஒதுக்க கேட்டு உரிமையியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். 

ADVERTISEMENT

அதுபோன்று, மாம்பழம் சின்னம் தொடர்பான வழக்கில் தீர்வு கிடைக்கும் வரை தேர்தல் தேதியை அறிவிக்க கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் ராமதாஸ் வழக்கு தொடர்ந்தார். 

இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தில் ராமதாஸ் மேல்முறையீடு செய்திருந்தார். 

ADVERTISEMENT

இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், மாம்பழம் சின்னம் தொடர்பாக சென்னை உரிமையியல் நீதிமன்றம் விசாரித்து மூன்று நாட்களுக்குள் உத்தரவிட வேண்டும் என்று கூறியது. 

அதன்படி இந்த வழக்கின் விசாரணை சென்னை 12வது கூடுதல் உரிமையியல் நீதிமன்ற நீதிபதி தர்மபிரபு முன்பு இன்று (மார்ச் 26) விசாரணைக்கு வந்தது. 

ADVERTISEMENT

அப்போது ராமதாஸ் சார்பில் மூத்த வழக்கறிஞர் பிரபாகரன் ஆஜராகி, ‘அன்புமணி கட்சி விரோத செயல்களில் ஈடுபட்டதால் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். ஆனால் மீண்டும் தலைவராக தேர்வு செய்யப்பட்டதாக ஆவணங்களை மோசடியாக சமர்ப்பித்து தேர்தல் ஆணையத்தை ஏமாற்றியுள்ளார். இது தொடர்பாக தேர்தல் ஆணையத்துக்கு 5 முறை கடிதம் அனுப்பப்பட்டது. இந்த சூழலில் அன்புமணிக்கு மாம்பழம் சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையத்துக்கு என்ன ஆர்வம் என்று தெரியவில்லை” என்று வாதங்களை முன் வைத்தார். 

மேலும், “சென்னை திநகரில் இருப்பது அன்புமணியின் வீடு. அதை கட்சி அலுவலகமாக தேர்தல் ஆணையம் எப்படி கருதியது என்று தெரியவில்லை. அவரது பதவிகாலம் முடிந்ததும், தேர்தல் ஆணையம் எப்படி அன்புமணியை தலைவராக ஏற்றது என்றும் தெரியவில்லை” என்று கூறினார். 

இதையடுத்து பாமக பொதுச்செயலாளர் வடிவேல் இராவணன் சார்பில் மூத்த வழக்கறிஞர் என்.எல்.ராஜா ஆஜராகி, “இந்த மனு தாக்கல் செய்யப்பட்ட முறையே தவறானது. ராமதாஸ் தான் தலைவராக உள்ளார் என்றால் ஏன் தன்னை தலைவராக அறிவிக்க வேண்டுமென வழக்கு தொடர்ந்துள்ளார்” என வாதங்களை முன் வைத்தார். 

தேர்தல் ஆணையம் சார்பில் வழக்கறிஞர் நிரஞ்சன் ராஜகோபால் ஆஜராகி, “இது தந்தை மகனுக்கு இடையே உள்ள பிரச்சனை. மாம்பழம் சின்னத்தை தற்போதைய நிலையில் முடக்க முடியாது. தேர்தல் நடைமுறை தொடங்கியிருக்கும் நிலையில் நீதிமன்றம் தலையிட்டு உத்தரவு பிறப்பிக்க முடியாது. புதுச்சேரியில் சின்னம் ஒதுக்கப்பட்டுவிட்டது” என்று குறிப்பிட்டார். 

அன்புமணி சார்பில்  வழக்கறிஞர் சித்ரா சம்பத் ஆஜராகி, “பாமக நிறுவனர் ராமதாசை சிலர் தவறாக வழி நடத்துகின்றனர். தந்தை மகனுக்கு இடையேயான பிரச்சனையை வைத்து அரசியல் செய்கின்றனர். 

2025 ஆகஸ்ட் மாதம் சிறப்பு பொதுக்குழு நடத்தப்பட்டு ராமதாஸ் செயல் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதாக கூறுவது போலியானது. பொதுக்குழு நடத்துவதற்கு 21 நாட்களுக்கு முன் நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்க வேண்டும். அதன் பிறகு தான் பொதுக்குழு கூட்ட வேண்டும். அப்படி கூட்டப்பட்டதற்கான ஆதாரங்கள், ஆவணங்கள் இல்லை. 

பழைய முகவரியை மாற்ற வேண்டும் என்று ராமதாஸ் கூறுவதன் மூலம் திநகரில் பாமக அலுவலகம் செயல்பட்டு வந்தது என்பதை ராமதாஸும் ஏற்றுக்கொள்கிறாரா?” என்று கேள்வி எழுப்பி வாதம் வைத்தார். 

தொடர்ந்து தேர்தல் ஆணையம் சார்பில், “ அன்புமணி மற்றும் ராமதாஸ் ஆகிய தனி நபர்களுக்கு சின்னம் ஒதுக்கப்படவில்லை. பாமக என்ற கட்சியின் பெயரில் மட்டுமே சின்ன ஒதுக்கப்பட்டது. பதிவு செய்யப்பட்ட கட்சியான பாமக இலவச சின்னமான மாம்பழத்தை ஒதுக்க வேண்டும் என்று கேட்டது. அதன் அடிப்படையில் மாம்பழம் சின்னம் ஒதுக்கப்பட்டது. 

உச்ச நீதிமன்றம் கூட குறிப்பிட்ட பிரிவுகளை தவிர சின்னம் ஒதுக்கீடு தொடர்பான தேர்தல் ஆணையத்தின் முடிவில் தலையிட முடியாது. இரண்டு ஆண்டுகள் எந்த அலுவலகத்தில் இருந்து தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் வந்ததோ அந்த முகவரிக்கு தான் சின்னம் ஒதுக்கீடு செய்து கடிதம் அனுப்பப்பட்டது” என்று தெரிவிக்கப்பட்டது. 

அனைத்து தரப்பு வாதங்களையும் தொடர்ந்து, தன்னை தலைவராக அங்கீகரிக்க வேண்டும், உரிமையியல் வழக்கில் தீர்வு எட்டப்படும் வரை மாம்பழம் சின்னத்தை முடக்கி வைக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட கோரிய ராமதாஸின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share