வங்க கடலில் இன்று புயல் சின்னமான காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாகிறது. இதனால் டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் கனமழை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் இன்று தென்கிழக்கு வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது.
இது நாளை மறுநாள் நவம்பர் 24-ந் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும்; இப்புயல் சின்னம் மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து மேலும் வலுவடையும்.
இது வலுவடைந்து புயலாக மாறும் போது, ‘சென்யார்’ என பெயர் சூட்டப்படும்.
இதனால் தமிழகத்தின் பல இடங்களிலும் புதுச்சேரி- காரைக்காலிலும் நவம்பர் 27-ந் தேதி வரை இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளது.
இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:
- கன்னியாகுமரி
- திருநெல்வேலி
- தூத்துக்குடி
- தென்காசி
- இராமநாதபுரம்
- புதுக்கோட்டை
- தஞ்சாவூர்
- திருவாரூர்
- நாகப்பட்டினம்
- மயிலாடுதுறை
- கடலூர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
