தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தனது சொந்த தொகுதி மக்களுக்கு செந்தில் பாலாஜி தீபாவளி பரிசு வழங்கி வருகிறார்.
வரும் அக்டோபர் 20ஆம் தேதி நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை வருகிறது. இதையொட்டி புத்தாடை வாங்குவது, பலகாரங்கள் செய்வது என இப்போதே மக்கள் கொண்டாட்டத்தை ஆரம்பித்துவிட்டனர்.
இந்த சூழலில் தீபாவளியை முன்னிட்டு முன்னாள் அமைச்சரும் கரூர் மாவட்ட செயலாளருமான செந்தில் பாலாஜி, கரூர் சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட சுமார் 80 ஆயிரத்துக்கும் அதிகமான குடும்பங்களுக்கு தீபாவளி பரிசு வழங்கி வருகிறார்.
இனிப்பு, காரத்துடன் கூடிய சில்வர் அண்டா கொண்ட தீபாவளி பரிசை கொடுக்கும் பணி கரூர் மாநகராட்சி 48வது வார்டு கோடங்கப்பட்டியில் இன்று தொடங்கியது. அந்த அண்டா சுமார் 2 அடி உயரம் கொண்டது எனவும், அதன் மூடியில் செந்தில் பாலாஜியின் பெயர் பொறிக்கப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வருகின்றன.
முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரது படங்களுடன் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் என்று அச்சிடப்பட்டிருக்கும் பரிசு பையை வழங்கும் பணியை தொடங்கி வைத்து வீடு வீடாக சென்று பரிசுகள் வழங்கி வாழ்த்துக்கள் கூறி வருகிறார் செந்தில் பாலாஜி.
இதையொட்டி இன்று காலை அந்த பகுதியில் உள்ள ஸ்ரீ பட்டாளம்மன் கோயிலில் வழிபாடு செய்து, பரிசு பொருட்களுக்கும் பூஜை செய்யப்பட்டது.
சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில் செந்தில் பாலாஜி தனது சொந்த தொகுதி மக்களுக்கு தீபாவளி பரிசு வழங்கியது கவனம் பெற்றுள்ளது.
