இலங்கை பிரதமர் ஹரிணி அமரசூரியா பிரதமர் மோடியை நேற்று (அக்டோபர் 17) சந்தித்து பேசினார்.
இலங்கை பிரதமர் நேற்று முன்தினம் இந்தியா வந்தார். இந்தசூழலில் தமிழ்நாடு மீனவர்கள் சந்திக்கும் பிரச்சினை தொடர்பாகவும், கட்சத்தீவை மீட்பது தொடர்பாகவும் முதல்வர் ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினார்.
இந்தசூழலில் டெல்லியில் பிரதமர் மோடியை இலங்கை பிரதமர் ஹரிணி அமரசூரியா சந்தித்து பேசியுள்ளார்.
அப்போது பிரதமர் மோடி, வரலாற்று சிறப்புமிக்க, பன்முக தன்மை கொண்ட இந்தியா-இலங்கை உறவுகளுக்கு ஹரிணி அமரசூரியா வருகை புதிய உத்வேகத்தை அளிக்கும் என்று கூறியுள்ளார்.
மேலும், ‘இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் தாம் இலங்கையில் மேற்கொண்ட அரசுமுறை பயணத்தை நினைவுகூர்ந்த பிரதமர், அப்போது ஒத்துழைப்பிற்கான அனைத்து துறைகளையும் உள்ளடக்கி அதிபர் அனுர குமார திசநாயகாவுடன் பயனுள்ள விவாதங்களை நடத்தியதாக கூறினார்.
கல்வி, தொழில்நுட்பம், புத்தாக்க மேம்பாட்டில் ஒத்துழைப்பு, மீனவர்கள் நலன் உட்பட பல துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர்.
இந்தியா-இலங்கை இடையேயான சிறப்பு உறவுகளை எடுத்துரைத்த பிரதமர் மோடி, இருநாடுகளின் பகிரப்பட்ட வளர்ச்சிப் பயணத்தில் ஒருங்கிணைந்து பணியாற்றும் இந்தியாவின் உறுதிபாடும் குறித்தும் பேசினார்.
இந்த சந்திப்பு தொடர்பாக மோடி தனது எக்ஸ் பக்கத்தில் தமிழில் பகிர்ந்துள்ளார்.
அதில், ‘இலங்கைப் பிரதமர் டாக்டர் ஹரிணி அமரசூரிய அவர்களை வரவேற்பதில் பெருமகிழ்வடைகின்றேன். கல்வி, பெண்களுக்கு அதிகாரமளித்தல், கண்டுபிடிப்பு, அபிவிருத்தி ஒத்துழைப்பு மற்றும் நமது மீனவர்களின் நலன்புரி உள்ளிட்ட பரந்தளவான விடயங்கள் குறித்து எமது கலந்துரையாடலில் கவனஞ்செலுத்தப்பட்டது. மிகவும் நெருக்கமான அயல் நாடுகளாக நமது இரு நாட்டு மக்களினதும் அதேபோல பகிரப்பட்ட பிராந்தியத்தினதும் சுபீட்சத்துக்கு நமது ஒத்துழைப்பானது அளப்பரிய முக்கியத்துவம் வாய்ந்தது’ என்று கூறியுள்ளார்.
