நடிகர் விஜய் செப்டம்பர் 27ம் தேதி கரூர் வேலுச்சாமிபிரத்தில் நடந்த தவெக பரப்புரையில் பேசினார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்துள்ளனர். இதுகுறித்து ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.
இதற்கிடையில் கரூர் பரப்புரையில் பேசிய விஜய் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை கடுமையாக விமர்சித்த தோடு 10 ரூபாய் பாலாஜி என பாடல் பாடினார். இது குறித்த வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலானது.
கரூர் கூட்ட நெரிசல் குறித்து நேற்று வீடியோ வெளியிட்ட விஜய் மற்ற இடங்களில் நடந்த பரப்புரையில் இல்லாத வகையில் கரூரில் மட்டும் நடக்க காரணம் என்ன என்று கேள்வி எழுப்பி இருந்தார்.
இந்நிலையில் இன்று செந்தில் பாலாஜி கரூரில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது விஜய் பரப்புரையில் 10 ரூபாய் பாலாஜி என்று பாடல் பாடி விமர்சித்தது குறித்த கேள்விக்கு பதிலளித்த செந்தில் பாலாஜி, “அரசியல் ரீதியாக அவர்களால் கருத்துக்களை முன் வைக்க நினைத்தார்கள். ஆனால் அது எடுபடவில்லை. உடனே தனிப்பட்ட முறையில் அவதூறு பரப்ப முயல்கின்றனர். தற்போது அந்த துறையில் நான் அமைச்சராக இல்லை. ஆனாலும் என் மீதான இந்த விமர்சனம் குறித்து பதில் அளிக்க வேண்டியது என் கடமை என்று கூறி, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கும், விஜய்க்கும் விரிவான விளக்கம் அளித்தார்.
கடந்த 2016 முதல் 2021-ம் ஆண்டு வரைக்கும் கடந்த அதிமுக ஆட்சியில், மதுபானக்கடையில் மதுபாட்டிலுக்கு 10 ரூபாய்க்கு கீழே, கூடுதலாக வசூலிக்கப்பட்டது குறித்து எழுந்த 7,540 புகார்களுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. மதுபாட்டிலுக்கு 10 ரூபாய்க்கு மேலே கூடுதலாக வசூலிக்கப்பட்டது தொடர்பாக 8,666 புகார்களுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. நடவடிக்கையில் வசூல் செய்த அபராதத் தொகை 14 கோடி ரூபாய்.
2021-க்குப் பிறகு திமுக ஆட்சியில், மது பாட்டிலுக்கு 10 ரூபாய்க்கு கீழே வசூலிக்கப்பட்ட விவகாரத்தில் 18,253 புகாருக்கும், 10 ரூபாய்க்கு மேலே 2,356 புகாருக்கும் நடவடிக்கைள் எடுக்கப்பட்டுள்ளன. இதில் ரூ.8.50 கோடி அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளன என்று செந்தில் பாலாஜி கூறினார்.
இந்த 5 ஆண்டுகளில் இந்த புகார்கள் வரும் போது அந்த மது பாட்டிலுக்கு வசூலிக்கப்படும் கூடுதல் தொகை ஒருவருக்கு செல்கிறது என்றால் கடந்த ஆட்சியில் கூடுதலாக வசூலிக்கப்படும் தொகை எடப்பாடி பழனிச்சாமிக்கு சென்றதா.. அதை அவர்களும் ஒப்புக்கொள்ள வேண்டும். அப்படி என்றால் இன்று முதல் எடப்பாடி பழனிச்சாமியை 10 ரூபாய் பழனிச்சாமி என்று அழைக்கலாமா? என்று காட்டமாக தெரிவித்ததார்.