பாஜக கூறிய பிறகே எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அதிமுகவை ஒருங்கிணைக்க வேண்டும் என்று நாங்கள் 6 பேர் பேசினோம் என முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் இன்று (நவம்பர் 7) கோபிச்செட்டிபாளையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். “எடப்பாடி பழனிசாமியிடம் அதிமுகவில் நான் உட்பட ஆறு பேர் சென்று பாஜக கூட்டணியில் இணைப்பதோடு, வெளியேற்றியவர்களை இணைக்கப்பட வேண்டும் என்று சொன்னோம். அங்கு என்ன நடந்தது என்பதை நான் வெளியே சொல்ல விரும்பவில்லை.
என்னைப்பொறுத்தவரை, என்னை அழைத்தவர்கள் பாஜக தான். அழைத்து இரு இயக்கங்களும் ஒன்றிணைக்கப்பட வேண்டும் என்று கூறியதும் அவர்கள் தான்.
நானும் அதையே தான் சொன்னேன். இயக்கம் ஒன்றிணைக்கப்பட வேண்டும். உங்களை விட்டால் எங்களுக்கு வேறு வழியில்லை. எங்களை விட்டால் உங்களுக்கும் மாற்று இல்லை. ஆகவே தமிழ்நாட்டில் அதிமுகவை ஆட்சியில் அமர்த்த நீங்கள் தயாராக இருக்க வேண்டும். அதேபோல், 2029 ஆம் ஆண்டு உங்கள் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு, மேல இருக்கக்கூடிய உயர் மட்ட நபர்களுடன் கலந்து பேசி முடிவுகளை எடுக்கலாம் என்று சொன்னேன்” என்றார்.
சந்தேகம் எழுப்பும் நயினார்
இந்நிலையில் இன்று தமிழக பாஜக தலைவர் திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே செய்தியாளர்களிடம் பேசுகையில், “அண்ணன் செங்கோட்டையன் கொடுத்த பேட்டியை பார்த்தேன் அதில் சரியான தகவல் இல்லை. யாரை பார்த்தார். என்ன பேசினார் என்பது குறித்து தெளிவான தகவல்கள் இல்லை. செங்கோட்டையன் விவகாரத்தில் திமுக பின்னணியில் உள்ளதோ என சந்தேகம் எழுந்துள்ளது. நேற்று முன்தினம் மனோஜ் பாண்டியன் கூட திமுகவில் இணைந்துள்ளார்.
முதல்வர் ஸ்டாலின், விஜய் இருவரின் தொண்டர்கள் யார் தளபதி என்பதில் சமூக வலைதளங்களில் மோதிக் கொள்கிறார்களே என்ற கேள்விக்கு இது தமிழகத்தின் தலைவிதி” என தெரிவித்தார்
