MLA பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன்!

Published On:

| By Pandeeswari Gurusamy

Sengottaiyan resigns from MLA post

அதிமுகவின் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தனது எம்எல்ஏ பதவியை இன்று (நவம்பர் 26) ராஜினாமா செய்துள்ளார். தனது கைப்பட எழுதிய ராஜினாமா கடிதத்தை சபாநாயகர் அப்பாவுவிடம் அளித்துள்ளார்.

யார் இந்த செங்கோட்டையன்

அதிமுகவில் எம்ஜிஆர் காலத்தில் இருந்தே கொங்கு மண்டலத்தில் முக்கிய முகமாக வலம் வந்தவர் செங்கோட்டையன். ஈரோடு மாவட்டம் குள்ளம்பாளையத்தை சேர்ந்த செங்கோட்டையன், 1948 ஆம் ஆண்டு பிறந்தார். தமது அரசியல் பயணத்தை திமுகவில் இருந்து தொடங்கிய அவர், 1972-ல் எம்ஜிஆர் கட்சியை உருவாக்கிய போது அவருடன் இணைந்து செயல்பட்டார்.

ADVERTISEMENT
எம்ஜிஆரின் பாராட்டு

1975 ஆம் ஆண்டு கோவை பொதுக்குழு மாநாட்டை சிறப்பாக நடத்தி முடித்ததன் மூலம் எம்ஜிஆரின் பாராட்டை பெற்றார். 1975இல் கோவையில் நடந்த பொதுக்குழு, செயற்குழுவில் அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என்பது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்று பெயர் மாற்றப்பட்டபோது பொருளாளராக இருந்தவர்.

முதல் முறையாக 1977ல் நடந்த சட்ட மன்ற தேர்தலில் கோபிச்செட்டி பாளையத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். எம்ஜிஆர் மறைவுக்கு பின் ஜெயலலிதாவுடன் இணைந்து சேவல் சின்னத்தில் போட்டியிட்டு கோபிச்செட்டி பாளையத்தில் வெற்றி பெற்றார். செங்கோட்டையன் அதிமுக வரலாற்றில் ஒன்பது முறை எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

ADVERTISEMENT

எம்ஜிஆர் ஜெயலலிதாவின் சுற்றுப் பயணத்தை வகுத்து கொடுத்தவர். அதிமுகவின் அமைச்சராகவும் இருந்தவர். அதிமுகவில் ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு எடப்பாடி பழனிசாமியின் தலைமையை ஏற்று செயல்பட்டு வந்தார். எடப்பாடி ஆட்சியில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.

காலப்போக்கில் எடப்பாடி பழனிசாமியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கட்சி நிகழ்ச்சிகளில் இருந்து விலகி இருந்தார்.

ADVERTISEMENT
மனம் திறந்த செங்கோட்டையன்

கடந்த செப்டம்பர் 5ஆம் தேதி பத்திரிகையாளர்களை சந்தித்து மனம் திறந்தார். அப்போது அதிமுக தலைமை மீதான தனது அதிருப்தியை வெளிப்படுத்திய செங்கோட்டையன் கட்சியிலிருந்து விலகியவர்களை ஒன்றிணைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். அதற்கு பத்து நாட்கள் கெடு விதிப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

இதைத்தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி செங்கோட்டையனை கட்சி பதவிகளில் இருந்து நீக்கினார். இதற்கிடையில் நான் கெடு விதிக்கவில்லை. எனது பேச்சு தவறாக புரிந்து கொள்ளப்பட்டது என்று ஒரு முறை செய்தியாளர் சந்திப்பில் செங்கோட்டையன் தெரிவித்திருந்தார் .

ஓபிஎஸ், டிடிவி, சசிகலாவுடன் சந்திப்பு

கடந்த அக்டோபர் 30ஆம் தேதி மதுரையில் நடந்த முத்துராமலிங்கத் தேவர் குருபூஜைக்கு அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர் செல்வத்துடன் ஒரே காரில் பயணித்து சென்றார். ஓபிஎஸ் மற்றும் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுடன் இணைந்து குரு பூஜையில் கலந்து கொண்டார். பின்னர் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட சசிகலாவையும் சந்தித்து பேசினார்.

இந்த நிகழ்வை தொடர்ந்து அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் செங்கோட்டையனை அதிரடியாக நீக்கினார் எடப்பாடி பழனிசாமி.

கோபியில் எடப்பாடி பிரச்சாரம்

இதைத் தொடர்ந்து செங்கோட்டையனின் அடுத்த கட்ட நகர்வு என்ன என்பது தமிழக அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளானது. இந்த நிலையில் வரும் 30-ஆம் தேதி எடப்பாடி பழனிசாமி கோபிசெட்டிபாளையத்தில் பிரச்சாரம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார். மேலும் டிசம்பர் 10 ஆம் தேதி அதிமுகவின் பொதுக்குழு, செயற்குழு நடைபெறும் என்றும் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.

இந்த நிலையில்தான் நாம் மின்னம்பலத்தில் டிஜிட்டல் திண்ணை: விஜய் முன்னிலையில் தவெக-வில் இணையும் செங்கோட்டையன்- ஓபன் ஆகிறது ‘ஜான் டோல்கேட்’? என்ற தகவலை வெளியிட்டிருந்ததோம்.

இதைத்தொடர்ந்து செங்கோட்டையன் தனது எம்எல்ஏ பதவியை இன்று ராஜினாமா செய்ய இருப்பதாகவும் செய்தி வெளியிட்டோம். மேலும் நவம்பர் 27ஆம் தேதி விஜய் முன்னிலையில் தவெகவில் இணைய இருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தோம்.

மன வேதனை

இந்நிலையில் நேற்று (நவம்பர் 25) மாலை கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய செங்கோட்டையன் 50 ஆண்டுகால அரசியல் வரலாற்றில் ஏற்றத்தாழ்வுகளை சந்தித்து இயக்கத்திற்காக உழைத்த எனக்கு கொடுத்திருக்கக் கூடிய பரிசு உறுப்பினராக கூட இருக்கக் கூடாது என்ற முறையில் நீக்கப்பட்டு இருக்கிறேன். இந்த மன வேதனை என்பது உங்களைப் போன்றவர்களுக்கு நன்றாக தெரியும். இதற்கு மேல் எந்தக் கருத்தையும் சொல்வதற்கு இல்லை” என்று தெரிவித்தார்.

இன்று (நவம்பர் 26) காலை தலைமைச் செயலகத்தில் சபாநாயகர் மு.அப்பாவுவை சந்தித்து தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துள்ளார். காலை 11.45 மணியளவில் செங்கோட்டையன் தனது கைப்பட எழுதிய ராஜினாமா கடிதத்தை சபாநாயகரிடம் அளித்துள்ளார்.

தலைமைச்செயலகத்தில் இருந்து வெளியே வந்த செங்கோட்டையனிடம் தவெகவில் இணைகிறீர்களா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய நிலையில். அவர் கையெடுத்து கும்பிட்டு விட்டு அங்கிருந்து நகர்ந்து விட்டார்.

செங்கோட்டையன், விஜய்யுடன் இணைந்தால் அது தவெகவிற்கு பெரிய பலமாக அமைய வாய்ப்புகள் உள்ளது. குறிப்பாக கரூர் பெருந்துயர சம்பவம் நடந்துள்ள நிலையில், எம்ஜிஆர், ஜெயலலிதாவின் பயண திட்டங்களை வகுத்த செங்கோட்டையனின் அரசியல் அனுபவம் தவெகவிற்கு பக்கபலமாக இருக்கும். ஆனால் விஜய்யும், தவெகவின் நிர்வாகிகளும் அவரின் அனுபவத்தை எப்படி பயன்படுத்தி கொள்வார்கள் என்பது தான் பெரிய கேள்வி என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அதேசமயம் இன்று செங்கோட்டையனை திமுகவில் சேர அழைப்பு விடுத்து அமைச்சர் சேகர் பாபு சந்தித்து பேசினார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share