அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன் நிலுவையில் உள்ள இரட்டை இலை சின்ன விவகாரத்தில் தேர்தல் ஆணையம் தலையிட்டு விசாரணை நடத்த வேண்டும் என கடிதம் எழுதி உள்ளார்.
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் தொகுதி எம்எல்ஏ-வும், முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன் எடப்பாடி பழனிசாமி தலைமை மீது இருந்த அதிருப்தி காரணமாக கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் இருந்து வந்தார். இந்நிலையில் கடந்த செப்டம்பர் 5ம் தேதி செய்தியாளர்களை சந்தித்து மனம் திறந்து பேசினார். அப்போது அதிமுகவில் இருந்து விலகியவர்களை ஒன்றிணைக்க வேண்டும் என்று தெரிவித்தார். இதைத்தொடர்ந்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செங்கோட்டையனை கட்சி பொறுப்புகளில் இருந்து அதிரடியாக நீக்கினார்.
கடந்த அக்டோபர் 30ம் தேதி அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரனுடன் இணைந்து தேவர் குருபூஜையில் பங்கேற்றார். இதைத்தொடர்ந்து சசிகலாவையும் சந்தித்து பேசினார்.
இதை காரணம் காட்டி கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக கூறி அக்டோபர் 31ம் தேதி செங்கோட்டையனை அதிமுகவிலிருந்து அதிரடியாக நீக்கினார் எடப்பாடி பழனிசாமி.
கோவையில் நேற்று (நவம்பர் 3) செய்தியாளர்களிடம் பேசிய செங்கோட்டையன் அதிமுகவிலும் குடும்ப அரசியல் இருப்பதாக பகிரங்க குற்றச்சாட்டை முன் வைத்தார். இந்நிலையில் செங்கோட்டையன் தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் ஒன்றை எழுதி உள்ளார். அதில், “தேர்தல் ஆணையம் நிலுவையில் உள்ள இரட்டை இலை சின்ன விவகாரத்தில் தலையிட்டு விசாரணை நடத்த வேண்டும். எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்குவதாக கூறும் அதிமுகவின் பிரிவு உண்மையான அதிமுக இல்லை. அதிமுக கட்சியின் உண்மையான நிலை என்ன என்பதை நிருபிக்க அவகாசம் தேவை” என செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்
