கோவையில் மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய 3 பேரை காவல்துறையினர் சுட்டு பிடித்துள்ள நிலையில் அவர்கள் மீது ஏற்கனவே கொலை, வழிப்பறி, அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் இருப்பது குறித்த பகீர் தகவல்கள் வெளியாகி உள்ளது.
கோவை விமான நிலையம் அருகே ஞாயிறன்று நள்ளிரவில் கல்லூரி மாணவியின் ஆண் நண்பரை தாக்கி விட்டு 3 பேர் கொண்ட கும்பலால் மாணவி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் தமிழகம் முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்திற்கு அதிமுக, பாஜக, உள்ளிட்ட பல்வேறு கட்சியினரும், பெண்கள் அமைப்புகளும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இன்று (நவம்பர் 4) அதிமுக, தவெக, உள்ளிட்ட கட்சிகள் கோவையில் ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன.
நேற்று அதிகாலையில் நிர்வாணமான நிலையில் மாணவி மீட்கப்பட்ட நிலையில் இச்சம்பவம் தொடர்பாக 7 தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்த சம்பவத்தில் தொடர்புடைய 3 பேரும் துடியலூர் வெள்ளகிணறு பட்டத்தரசி அம்மன் கோவில் அருகே பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து தலைமறைவாக இருந்த குற்றவாளிகள் மூன்று பேரை போலீசார் பிடிக்கச் சென்ற பொழுது அவர்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால் போலீசார் மீது தாக்குதல் நடத்தினர்.
இதில் சந்திரசேகர் என்ற காவலருக்கு இடதுகை மணிக்கட்டில் வெட்டு விழுந்தது. காவலரை வெட்டிவிட்டு தப்பி ஓடிய போது பீளமேடு காவல் ஆய்வாளர் அர்ஜுன் மற்றும் சரவணம்பட்டி காவல் ஆய்வாளர் ஞானசேகரன் ஆகியோர் தப்பி ஓடிய குற்றவாளிகள் மீது துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் கருப்பசாமி, காளீஸ்வரன் ஆகிய இருவருக்கும் இரண்டு கால்களிலும் துப்பாக்கி குண்டு பாய்ந்துள்ளது. குணா என்பவருக்கு ஒரு காலில் மட்டும் குண்டு பாய்ந்த்து. குற்றவாளிகள் மூன்று பேர் காலிலும் போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்திய நிலையில் அவர்கள் தள்ளாடி கீழே சரிந்தனர்.
போலீசார் மேற்கொண்ட முதல்கட்ட விசாரணையில் மூன்று பேரும் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பதும், குணா (எ) தவசி, சதீஷ் (எ)கருப்பசாமி, கார்த்திக் (எ) காளீஸ்வரன் என்பதும் தெரியவந்தது. இவர்கள் மூவரும் இருகூர் பகுதியில் வீடு எடுத்து கட்டிட வேலை பார்த்து வந்துள்ளனர். இதில் கருப்பசாமி, காளீஸ்வரன் ஆகிய இருவரும் சகோதரர்கள் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் இவர்கள் 3 பேர் மீதும் ஏற்கனவே ஒரு கொலை வழக்கு , வழிப்பறி, அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் இருப்பதும் தெரியவந்துள்ளது.
குண்டு பாய்ந்த 3 பேருக்கும் கோவை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. குற்றவாளிகளால் அரிவாளால் வெட்டப்பட்டதில் காயமடைந்த காவலர் சந்திரசேகரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
கோவையில் மாணவியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த 3 பேரும் நள்ளிரவு நேரத்தில் துப்பாக்கியால் சுடப்பட்டு பிடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
