எடப்பாடி பழனிசாமி குறித்து கருத்து சொல்ல விரும்பவில்லை. அவருக்கு தோல்வி பயம் ஏற்பட்டுள்ளது என்று தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகக் குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
கோவை விமான நிலையத்தில் இன்று (பிப்ரவரி 5) செய்தியாளர்களிடம் பேசிய செங்கோட்டையன், பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை “தமிழக வெற்றிக் கழகத்தில் என்ஜின் இல்லை” என்று பேசியது குறித்த கேள்விக்கு, “தமிழக வெற்றிக் கழகத்தைப் பொறுத்தவரை, தமிழக மக்கள் ஏற்கனவே முடிவு செய்துவிட்டார்கள். இரண்டு இயக்கங்களே இந்த நாட்டை ஆள வேண்டும்.. புதிதாக ஒருவர் தோன்ற வேண்டும் என்ற எண்ணத்துடன் தான் இந்த இயக்கம் தற்போது வீர நடை போட்டுக் கொண்டிருக்கிறது.
பல கோடி ரூபாய் வருவாயை இழந்தாலும், விஜய் ஒரு இளைஞராக மக்கள் பணியாற்ற வந்திருக்கிறார். அவரைப் பற்றி எல்லோரும் கருத்து தெரிவிப்பதற்குக் காரணம், எல்லோருக்கும் வெற்றி என்ற இலக்கை அடைய முடியாத பயம் ஏற்பட்டுள்ளது. அதனால்தான் அனைவரும் கருத்துக்களைத் தெரிவித்து வருகிறார்கள்.
ஒவ்வொருவருக்கும் தோல்வி பயம் உருவாகியுள்ளது. சிலருக்கு தங்கள் இடத்தில் வெற்றி பெற முடியாது என்பதால்தான் ஒவ்வொரு இயக்கமும் கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டிருக்கிறது.இளைஞர்கள் மட்டுமின்றி, வெளிநாடுகளில் உள்ள தமிழர்கள் 3 லட்சம் பேரும் தமிழகத்தில் எப்போது தேர்தல் நடைபெறப் போகிறது என்று எதிர்பார்த்து பதிவு செய்துள்ளது இந்திய வரலாற்றில் இடம்பெறப் போகிறது.
ஒரு புதிய தலைமை தமிழகத்தை ஆள வேண்டும், குறிப்பாக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் ஆள வேண்டும் என்ற நோக்கம் புதிதாக வாக்களிக்கும் ஒவ்வொருவரின் எண்ணத்திலும் உள்ளது. 35 வயதுக்கு கீழ் உள்ள அனைவரது ஒருமித்த கருத்தாகவும் அது பிரதிபலித்துக் கொண்டிருக்கிறது” என்றார்.
மேலும், “நான் நிகழ்ச்சிகளுக்குச் செல்லும்போது, குழந்தைகள் தங்கள் பெற்றோர்களிடமும் பெரியவர்களிடமும் ‘விஜய்க்கு வாக்களிக்க வேண்டும்’ என்று வற்புறுத்துவதாக எங்களிடம் கூறுகிறார்கள்.
மக்கள் சக்தியால் வரும் வெற்றியை யாராலும் தடுக்க இயலாது. விஜய் தான் 2026-இல் தமிழகத்தின் முதலமைச்சராக வருவார். 234 தொகுதிகளிலும் விஜய் வெற்றி பெறுவார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.
அதிமுக நேரடியாக தமிழக வெற்றிக் கழகத்தை விமர்சிக்கத் தொடங்கியுள்ளது குறித்த கேள்விக்கு, “அதற்குக் காரணம் அவர்களது தோல்வி பயம்தான். தோல்வி பயம் ஏற்பட்டதால்தான் இவ்வாறான கருத்துக்களை அவர்கள் பரிமாறிக்கொண்டிருக்கிறார்கள். அவர் (எடப்பாடி பழனிசாமி) வெற்றி பெற வேண்டும் என்றால் நேரடியாக திமுகவிடம் பேச வேண்டும். ஆனால் இப்போது அவர்கள் B Team-ஆக யார் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்று நாட்டு மக்கள் தெரிந்துகொண்டிருக்கிறார்கள். எனவே அதைப் பற்றி கருத்து சொல்ல வேண்டியதில்லை. கருத்து சொல்லவும் விரும்பவில்லை. அவர்கள் என்ன கருத்து வேண்டுமானாலும் சொல்லட்டும். அவர்களுக்கு தோல்வி பயம் ஏற்பட்ட காரணத்தால்தான் இவ்வாறான கருத்துக்களை வெளிப்படுத்திக்கொண்டிருக்கிறார்கள்” என்றார்.
அதிமுகவின் தேர்தல் அறிக்கையை எடப்பாடி பழனிசாமி இரண்டு கட்டங்களாக வெளியிட்டது குறித்து பேசிய அவர், “தேர்தல் அறிக்கை என்பது மொத்தமாகக் கொடுக்கப்பட வேண்டியது. ஒவ்வொரு நாளும் சிந்தித்துச் சிந்தித்து தேர்தல் அறிக்கை கொடுத்துக்கொண்டிருக்கிறார் என்றால், எவ்வளவு தோல்வி பயம் இருக்கிறது என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்” என்று பதிலளித்தார்.
ஓ. பன்னீர்செல்வத்திடம் தமிழக வெற்றிக் கழக சார்பில் பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறதா என்ற கேள்விக்கு பதில் அளிக்காமல் அவர் அங்கிருந்து கிளம்பினார்.
