அதிமுக மூத்த தலைவர்களில் ஒருவரான செங்கோட்டையனும், கோவை தெற்கு தொகுதி பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசனும் இன்று (செப்டம்பர் 13) ஒரே விமானத்தில் சென்னைக்கு சென்றுள்ளனர்.
முன்னதாக கோவை விமான நிலையத்தில் அதிமுக மூத்த தலைவர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “என்னை பொருத்தவரை இயக்கம் நன்றாக இருக்க வேண்டும்.. எல்லோரும் இணைய வேண்டும்.. வெற்றி என்ற இலக்கை, புரட்சித்தலைவர் புரட்சித்தலைவி வழியில் சென்று ஆட்சி அமைய வேண்டும் என்பதுதான் என் ஆசை. அதிமுகவில் ஒரு மாதத்தில் அனைவரும் இணைவார்கள் என்ற நம்பிக்கை இருக்கின்றது ” என்றார்.
சென்னை வரும் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்திப்பீர்களா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு ”இல்லை.. நான் உறவினர் திருமணத்திற்கு செல்கிறேன்” என்றார்.
இதைத்தொடர்ந்து ”மீண்டும் டெல்லி செல்வீர்களா? என்ற கேள்விக்கு காலம் பதில் சொல்லும்” என பதில் அளித்தார்.
செங்கோட்டையன் சென்னை சென்ற அதே பயணிகள் விமானத்தில் கோவையில் இருந்து பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவரும், எம்எல்ஏவுமான வானதி சீனிவாசனும் சென்னை சென்றார்.
ஏற்கனவே ஹரித்துவார் செல்கிறேன் என்று கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் சொன்ன செங்கோட்டையன் டெல்லி சென்று அமித்ஷா மற்றும் நிர்மலா சீதாராமனை சந்தித்து விட்டு திரும்பினார்.
இந்நிலையில் ஜிஎஸ்டி விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் பாஜக நிர்வாகிகளுடன் கலந்துரையாடலில் பங்கேற்க நிர்மலா சீதாராமன் நாளை சென்னை வரும் நிலையில் வானதி சீனிவாசனும், செங்கோட்டையனும் ஒரே விமானத்தில் சென்னை கிளம்பி உள்ளது பேசு பொருளாகி உள்ளது.