ராமதாஸ் உடனான சந்திப்பில் கூட்டணி, அரசியல் குறித்து எதுவும் பேசவில்லை என்று செல்வப்பெருந்தகை இன்று (ஜூன் 27) தெரிவித்துள்ளார்.
பாமக நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி இடையேயான மோதல் தொடர்ந்து நீடித்து வருகிறது. Selvaperunthagai met Ramadoss at his thailapuram residence
இந்தநிலையில், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தைலாபுரம் இல்லத்திற்கு சென்று ராமதாஸை இன்று சந்தித்தார்.
இந்த சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய செல்வப்பெருந்தகை, “ராமதாஸின் உடல்நிலை குறித்து விசாரிப்பதற்காக வந்தேன். இது மரியாதை நிமித்தமான சந்திப்பு. இதில் கூட்டணி குறித்தோ, அரசியல் குறித்தோ பேசவில்லை.
ராமதாஸ், அன்புமணி இடையேயான பிரச்சனை தொடர்பாக சமாதான பேச்சுவார்த்தை எதுவும் நடத்தவில்லை. அவர்கள் சமாதானமாக இருந்தால் மகிழ்ச்சி.
திமுக ஏன் பாமகவில் குழப்பம் ஏற்படுத்த போகிறது? அதற்கு வாய்ப்பே இல்லை. திமுக தலைவர் ஸ்டாலினுக்கு இதுபோன்று அரசியல் செய்ய தெரியாது. பாமகவில் ராமதாஸ், அன்புமணி இடையே நிலவும் மோதலுக்கு பாஜக தான் காரணம்.
பாஜக கூட்டணி வைக்கும் கட்சிகளை உடைத்து விடுவார்கள். அவர்களின் அடுத்த குறி அதிமுக தான். முருகன் மாநாட்டில் அண்ணாவை விமர்சித்து வீடியோ வெளியிட்டதற்கு ஏன் அதிமுக காட்டமாக அறிக்கை வெளியிடவில்லை. பாஜகவை பார்த்து ஏன் பயப்படுகிறார்கள்?” என கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து, திமுக கூட்டணியில் பாமக வர வாய்ப்பிருக்கிறதா என்ற கேள்விக்கு, “இதுதொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலின் தான் முடிவெடுப்பார்” என்றார்.