கரூர் சம்பவத்தில் தமிழ்நாடு அரசு சிறப்பாக விசாரணை நடத்திக் கொண்டிருந்தது. இந்த விசாரணையில் மிரட்டல் இருக்கப் போவதில்லை. நியாயமான முறையில் விசாரணை நடந்திருக்கும் என செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது தவெக தலைவர் விஜய் சிபிஐ விசாரணையில் ஆஜராகியது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு, “ சிங்கம் வாயில் தானே சென்று மாட்டிக்கொண்டது போன்று விஜய் மாட்டியுள்ளார். கரூர் சம்பவத்தில் தமிழ்நாடு அரசு சிறப்பாக விசாரணை நடத்திக் கொண்டிருந்தது. இந்த விசாரணையில் மிரட்டல் இருக்கப் போவதில்லை. நியாயமான முறையில் விசாரணை நடந்திருக்கும். ஆனால், சிபிஐ விசாரணை என்ற பெயரில் பாஜக அதைத் தன் கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்டு அனைவரையும் துன்புறுத்தியது.
இப்போது தவெக தலைவரையும் சென்னையிலிருந்து டெல்லி அழைத்துள்ளார்கள். இது ஒரு அரசியல் ஒப்பந்தத்திற்கான முயற்சியாகத் தெரிகிறது. பாஜகவின் முயற்சி ஒருபோதும் தமிழகத்தில் வெற்றி பெறாது என்பதுதான் எதார்த்தமான உண்மை.
எல்லோரையும் அச்சுறுத்த வேண்டும். பாஜகவின் அரசியல் ஒப்பந்தத்திற்கு வந்தால் எல்லாமே காணாமல் போய்விடும். ஒத்துவராவிட்டால் என்ன பிரச்சினைகளை ஏற்படுத்த முடியுமோ அதைச் செய்வார்கள்” என்றார்.
மேலும், “பாஜகவிற்கும் ஆர்எஸ்எஸ்ஸுக்கும் எத்தனை முகங்கள் உள்ளன என்று யாராலும் கண்டுபிடிக்க முடியாது. இதற்கு ஆந்திராவில் தெலுங்குதேசம் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ரமேஷ், சவுத்திரி உள்ளிட்ட 3 பேர் மீது வழக்கு அவர்கள் சம்பந்தப்பட்ட இடங்களில் ரெய்டு உள்ளிட்ட அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது நம் கண்முன் உள்ள உதாரணம். அவர்கள் பாஜகவில் இணைந்தவுடன், கங்கையில் குளித்தவுடன் புனிதவான்களாக மாறுவது போல மாற்றிவிட்டனர்” என்றும் தெரிவித்தார்.
