திமுக – காங்கிரஸ் இடையே கூட்டணி பேச்சுவார்த்தை இழுபறியாக இருந்து வரும் நிலையில், “மேலிடை அறிக்கைக்காக காத்திருக்கிறோம்” என்று செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.
சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில், திமுக தனது கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
இதில் திமுக – காங்கிரஸ் இடையே இழுபறி நீடித்து வருகிறது. நேற்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து பேசினார்.
இதில் இறுதியாக காங்கிரஸுக்கு 28 தொகுதிகள், 1 ராஜ்யசபா சீட் என பைனல் செய்து நேற்று இரவு ப.சிதம்பரத்திடம் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்திருந்தார். இந்த தகவலை காங்கிரஸ் மேலிடத்துக்கு ப.சிதம்பரம் அனுப்பினார்.
ஆனால் காங்கிரஸ் 30 தொகுதிகளை பெறுவதில் உறுதியாக இருக்கிறது. ஸ்டாலின் 28 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறார்.
இப்படி இழுப்பறி நீடித்து வரும் நிலையில் காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் சென்னை வந்துள்ளார். விமான நிலையத்துக்கு சென்று அவரை காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வரவேற்றார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய செல்வப்பெருந்தகை, “மேலிடம் சொன்ன பிறகு அறிவாலயத்துக்கு போவோம். மேலிட அறிக்கைக்காக காத்திருக்கிறோம். பேச்சுவார்த்தை சுமூகத்தான் இருக்கிறது. கூட்டணியை உறுதி செய்ய காலம் இருக்கிறது. ” என்று கூறினார்.
