அண்ணா, எம்ஜிஆரை நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மிகவும் கீழ்த்தரமாக விமர்சித்த நிலையில், அதிமுக தரப்பில் கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை வளசரவாக்கத்தில் உள்ள நாம் தமிழர் கட்சி அலுவலகத்தில் இன்று (செப்டம்பர் 26) விடுதலைப்புலிகள் அமைப்பைச் சேர்ந்த திலீபனுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பத்திரிகையாளர்களை சந்தித்தார்.
அப்போது தவெக தலைவர் விஜய் குறித்த கேள்விக்கு பதிலளித்த சீமான், “விஜய் மாற்றம் என்பது குறித்து சொல்லவே இல்லை.. அவர் திமுகவிலிருந்து இரண்டு இட்லியையும், அதிமுகவில் இருந்து இரண்டு தோசையையும் எடுத்து ஒன்றாக பிச்சு போட்டு ஒரு உப்புமா கிண்டி விட்டார். ஒரு பக்கம் அண்ணாவையும், ஒரு பக்கம் எம்ஜிஆரையும் வைத்து கொண்டார். இதில் என்ன மாற்றம் வருகிறது. இது ஒரு சனியன்.. அது ஒரு சனியன்.. இரண்டு சனியனையும் சேர்த்து ஒரு சட்டையை தைத்து விட்டார். சனிக்கிழமை, சனிக்கிழமை கிளம்பி விட்டார்.
சரி.. மாற்றம் என்றால் எப்படிப்பட்ட மாற்றம்.. என்பதை பற்றி எல்லாம் அவர் சொல்லவே இல்லையே. நாங்கள் ஸ்ட்ரெய்ட்டாக பாயிண்டுக்கு வருவோம் என்கிறார். இதுவரை ஒரு பாயிண்டுக்கும் வரவில்லை. நாளை கரூர், நாமக்கல் என இரண்டு பாயிண்ட்களில் பேசுகிறார். அதுதான் அவருடைய பாயிண்ட்” என விமர்சித்திருந்தார்.
விஜய்யை விமர்சிப்பதாக கூறி தமிழகத்தின் முன்னாள் முதல்வர்களான அண்ணா மற்றும் எம்.ஜி.ஆர் இருவரையும் கீழ்த்தரமாக சீமான் சாடியுள்ளது திமுக, அதிமுகவினரிடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக வேடிக்கை பார்க்காது!
அதிமுக மாநில ஐடி விங் செயலாளர் சிங்கை ராமச்சந்திரன் வெளியிட்ட கண்டன அறிக்கையில், “பேரறிஞர் அண்ணாவை பற்றியோ புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரை பற்றியோ இழிவாகப் பேச சீமானுக்கு என்ன தகுதி உள்ளது? மறைந்த தலைவர்களை எப்படி பேச வேண்டும் என்ற அடிப்படை நாகரிகம் கூட சீமானுக்கு இல்லை.
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் பெயரை சொல்லி தமிழ்நாட்டில் ஏமாற்றி திரள்நிதி வசூல் செய்து உடம்பை வளர்க்கும் சீமானுக்கு எம்.ஜி.ஆர் யார் என தெரியாது, ஆனால் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் யார், என்ன செய்திருக்கிறார் என பிரபாகரனுக்கு தெரியும், சொல்லி இருக்கிறார்.
பாலியல் குற்ற வழக்கில் மாட்டி மூளை பிசகி முதல்வர் மு.க.ஸ்டாலின் வீட்டிற்கு போய் சரணடைந்ததால், பேரறிஞர் அண்ணா, புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரை எல்லாம் வாய்க்கொழுப்பில் விமர்சித்தால் அதிமுக வேடிக்கை பார்க்காது!” என அவர் தெரிவித்துள்ளார்.