நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் வனப்பகுதிக்குள் நாட்டு இன மாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து செல்லும் போராட்டம் இன்று (ஆகஸ்ட் 3) நடைபெற்றது. போலீஸ் தடுப்புகளை உடைத்து தடையை மீறி மாடு மேய்க்க சென்றதால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவியது.
தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அருகே குரங்கணி செல்லும் சாலையில் சுமார் 1000 நாட்டு இன மாடுகளை 2 கிலோ மீட்டர் தூரம் வரை ஊர்வலமாக அழைத்து சென்று வனத்துறையினரின் தடையை மீறி நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் மாடுகளை மலை மேல் ஏற்றி மேய்ச்சலுக்கு அழைத்து சென்றார். அப்போது வனத்துறையினர் தடுத்து மலை மேல் மாடுகளை ஏற்றிச் செல்ல கூடாது என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதைத்தொடர்ந்து சீமான் தடையை மீறி விவசாயிகளுடன் நாட்டு இன மாடுகளை மலை மேல் ஏற்றி மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்றார். இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.

ஆடு மாடுகள் மேய்ப்பது தொழில்முறை அல்ல!
இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சீமான், “இலங்கையில் எங்களை (தமிழர்கள்) குண்டு போட்டு கொன்றார்கள். அது இனப்படுகொலை. இங்கு குடிக்க வைத்து கொல்கிறார்கள். இதுவும் இனப்படுகொலைதான். இந்த நாட்டை உலகின் தலை சிறந்த நாடாக பூமியின் சொர்க்கமாக மாற்றி படைப்போம். 5 ஆண்டுகளில் ஆக சிறந்த நாடாக மாற்றுவேன்.
ஆடு மாடுகள் மேய்ப்பது தொழில்முறை அல்ல, எங்களது வாழ்க்கை முறை, கலாச்சாரம், பண்பாடு ஆகும். மாட்டுப் பொங்கல் என்று கொண்டாடிய பரம்பரை நாங்கள், கூரிய கொம்புகள் இருப்பதை மறந்து மாடுகள் வண்டி இழுத்துக் கொண்டிருக்கின்றன. மாடுகளுக்கு போராட தெரியவில்லை. மேய்ச்சல் நிலம் என்பது எங்களது உரிமை, ஜாதி, மதம் என்பதெல்லாம் கொடிய நோய், அது நம்மை பிரிக்கும். ஆனால் மொழி உணர்வே நம்மை இணைக்கும்” என்றார்.
மாடு இல்லாமல் எங்கிருந்து பால் வரும்?
மேலும் அவர், “எத்தனை நூறு ஆண்டுகளாக மலைகளில் மாடு மேய்க்கிறார்கள். திடீரென உங்களுக்கு அக்கறை வந்து தடை என்கிறீர்கள். நாங்கள் எங்கு போய் மேய்ப்பது. காடும் காடு சார்ந்த இடங்களிலும் வாழ்ந்த கால்நடைகளை பிற்காலத்தில் மருத நிலத்திற்குக் கொண்டு வந்து வேளாண்மைக்குப் பயன்படுத்தினோம். நீங்கள் பல்லாயிரக்கணக்கில் வெடி குண்டு வைத்து கிரானைட், மணல் என கொண்டு செல்லும் போது வன விலங்குகள் பாதுகாப்பாக இருக்கும் போது, எங்கள் ஆடும், மாடும் சென்று மேய்ந்தால் பாதுகாப்பு இல்லாமல் போய்விடுமா?
ஒன்றரை லட்சம் மாடுகள் இருந்த இடத்தில் 5000 மாடுகளாகக் குறுக்கி விட்டீர்கள். எல்லாம் அடிமாடாகப் போய்விட்டது. கால்நடைக்கு என்று துறை இருக்கிறது. அந்த துறை இதுகுறித்து கவலைப் பட்டுள்ளதா? குழாயை திருகினால் பால் வருமா? மாடு இல்லாமல் எங்கிருந்து பால் வரும்? கால்நடைத்துறை, பால்வளத்துறை என இரண்டு துறைகள் இருக்கிறது. அதற்கு ஒரு அமைச்சர். ஒரு தண்ட சம்பளம். எங்களை மேய்க விடவில்லை என்றால் மீண்டும் வந்து மேய்ப்போம். எங்களுக்கு எதுவெல்லாம் மேய்ச்சல் நிலம் என்று சொல்லிவிட்டு நீங்கள் சட்டத்தை உறுதி செய்யுங்கள்” என்றார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வன்னியரசு, ”இது ஒரு பிற்போக்குத்தனமான மாநாடு, குலக்கல்வியை ஊக்குவிக்கும் வகையில் இருக்கும்” என விமர்சித்தது குறித்து செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.
நாட்டை ஆள்வது அவர்கள் குலத்தொழிலா?
அதற்குப் பதில் அளித்த சீமான், “நமது மேல் வைக்கப்படும் விமர்சனத்தில் உண்மை இல்லை என்றால் அதற்கு நாம் பதில் சொல்ல வேண்டிய தேவையில்லை ஆடு, மாடுகள் மேய்ப்பது, மீன்பிடிப்பது, நெசவு செய்வது வேளாண்மை செய்வதெல்லாம் பிற்போக்கு, குலத்தொழில் என்றெல்லாம் சொல்லக்கூடாது. முதலில் அது தொழில் அல்ல அக்ரி இண்டஸ்ட்ரி கிடையாது.. அக்ரிகல்ச்சர்.
அது எனது கலாச்சாரம். எனது வாழ்க்கை முறையின் பண்பாடு. ஆதியில் மனிதன் தோன்றிய காலத்திலிருந்து மனிதன் கொஞ்சம் கொஞ்சமாகச் செய்து வந்த வேலை முதன் முதலில் வேட்டையாடி சாப்பிட்டோம். பிறகு வளர்த்து சாப்பிடுவோம் என்று முடிவு செய்தோம். பின்னர் நாங்களே விளைய வைத்து சாப்பிடுவது என்று முடிவுக்கு வந்தோம். இதுதான் பரிணாமம். இதில் எங்கு குலத்தொழில் வந்தது. மாந்தனின் முதல் கல்வியே உழவு தான் என்று தேவநேய பாவாணர் சொல்கிறார். இதுவெல்லாம் குலத்தொழில் என்று சொல்லிக் கொண்டிருக்கும் உமக்கு என்ன குலத்தொழில். இந்த கேள்விக்கு பதில் இருக்கிறதா? கலைஞர் வீட்டில் எங்களை ஆட்சி செய்து கொண்டிருக்கிறார்களே.. நாட்டை ஆள்வது அவர்கள் குலத்தொழிலா.. எங்களை அதிகாரம் செய்வது உங்களது குலத் தொழிலா என்று கேள்வி எழுப்பினார்.