கரூரில் நடிகர் விஜய் கலந்து கொண்ட பரப்புரையில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியானது தொடர்பாக விஜய் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். விஜய்க்கு ஆறுதல் தெவிரித்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், தற்போது முதல்வரை பார்த்து நீங்கள் பழிவாங்க வேண்டும் என்று நினைத்தால், என விஜய் பேசி இருப்பது திரைப்பட கதாநாயகன் வசனம் போல் உள்ளது என கடுமையாக விமர்சித்துள்ளார்.
இது குறித்து விருதுநகரில் இன்று (அக்டோபர் 2) செய்தியாளர்களை சந்தித்த சீமான் பேசுகையில், “விஜய் வெளியிட்ட வீடியோவை நான் முழுமையாக பார்த்தேன். அவர் பேசியதில் இதயத்தில் இருந்து வலியோ வேதனையோ வெளிப்படவில்லை. அதை வெளிப்படுத்தி இருந்தால் அவர் அப்படி பேசி இருக்க மாட்டார்.
அதை உணர்ந்து இருந்தால், மாண்புமிகு தமிழக முதல்வர் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இருந்தால், என் மேல் எடுங்கள். என்னை நம்பி வந்து என்னுடன் இருப்பவர்களை நீங்கள் கைது செய்ய வேண்டாம். இதற்கு நான் தான் பொறுப்பு. என் மேல் நடவடிக்கை எடுங்கள் என்று தான் பேசி இருக்க வேண்டும்.
ஆனால் இவர் நீங்கள் பழிவாங்க வேண்டும் என்று நினைத்தால், என்று பேசி இருப்பது திரைப்பட கதாநாயகன் வசனம் போல் இருக்கிறது. அது நல்ல அணுகுமுறை அல்ல. அந்த CM சார் என்பதே சின்னப்பிள்ளை விளையாட்டுக்கு கூப்பிடுவது போல் உள்ளது.
அவர் மீது உங்களுக்கு மதிப்பில்லாமல் போகட்டும். ஆனால் அவர் உட்கார்ந்திருக்கும் நாற்காலி.. இந்த நிலத்தில் பெரும் பெரும் தலைவர்கள் உட்கார்ந்து இருந்தது. ஓமந்தூரார் ராமசாமி ரெட்டியார், குமாரசாமி ராஜா, மூதறிஞர் ராஜாஜி, பெருந்தலைவன் காமராஜர், பேரறிஞர் அண்ணா போன்ற பெருந்தலைவர்கள் இருந்த இடம் அது. அதை பார்த்து பேச வேண்டும். CM Sir, CM Sir என்றெல்லாம் பேசக்கூடாது. அது தன்மையான பதிவு அல்ல.
இதை பார்க்கும் போது அந்த இறப்பை விட வலியாக உள்ளது. அதற்குப் பின் நடக்கும் நிகழ்வுகள் அதைவிட வேதனையை தருகிறது. அதுதான் பெரிய சங்கடங்களாக உள்ளது.
இதற்கு முன் விஜயகாந்த், சரத்குமார், கார்த்திக், கமலஹாசன் என எத்தனையோ பேர் அரசியலுக்கு வந்து கட்சி தொடங்கியுள்ளனர். ஆனால் இப்படி இல்லை. ஆனால் இப்படி இவ்வளவு நேரம் காத்திருந்து, பசி பட்டினியாக இருந்து மயக்கம் அடைவது என்பதெல்லாம் இல்லை. அதனால் இனிவரும் காலங்களில் இந்த முறையை மாற்ற வேண்டும்.
தெருத்தெருவாக சென்று வாக்கு கேட்பது, ஊர் ஊராக சென்று கூட்டம் போடுவது என்ற முறையை மாற்ற வேண்டும். இனி மார்ச்சிலிருந்து ஏப்ரல் வரை இரண்டு மாதம் வெயிலில் போய் கத்துவது மக்களுக்கும் தொல்லை, நமக்கும் தொல்லை பெரிய பொருள் செலவு.
ஒரு வளர்ந்து கொண்டிருக்கிற ஏழ்மையில் சிக்கி இருக்கிற ஒரு நாட்டின் அணுகுமுறையாக இது இல்லை. இதனால் இந்த முறையை மாற்ற வேண்டும் என்று நான் நினைக்கிறேன். தேர்தல் ஆணையமே ஒவ்வொரு ஒரு தலைவருக்கும் ஒரு நாள் கொடுத்து விடுங்கள். இன்று நீங்கள் பேசலாம்.. எல்லா தொலைக்காட்சிகளும் எடுப்பார்கள் என்று தேர்தல் ஆணையமே சொல்லிவிட்டால் ஒவ்வொரு தலைவரும் அவர்கள் கருத்தை பேசி விட்டு செல்லலாம். மக்கள் எது சரி என்று நினைக்கிறார்களோ.. வாக்கு செலுத்தி விட்டுச் செல்லட்டும். அப்படி செய்யும் போது இந்த மாதிரி சிக்கல்கள் வராது. போக்குவரத்து நெரிசல் இடையூறு போன்ற பல பிரச்சனைகளுக்கு இது தீர்வாகும் என்று தெரிவித்துள்ளார்.