ADVERTISEMENT

தொகுதிகள்.. முஸ்லிம் லீக் கேட்டது எத்தனை? திமுக குழு சொன்ன பதில் என்ன? பேரா. காதர் மொகிதீன் பேட்டி முழு விவரம்

Published On:

| By Mathi

IUML Khader Mohideen1.jpg

சென்னையில் திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் இன்று (பிப்.22) திமுகவின் குழுவுடன் முஸ்லிம் லீக் கட்சியின் குழு தொகுதி பங்கீட்டுப் பேச்சுவார்த்தை நடத்தியது.

இந்தப் பேச்சுவார்த்தைக்குப் பின்னர்செய்தியாளர்களிடம் பேராசிரியர் காதர் மொகிதீன் கூறியதாவது: இந்திய யூனியன் முஸ்லீம் லீக் சார்பில் 5 பேர் கொண்ட குழு அமைத்தோம். தமிழ்நாட்டுல கலைஞர் காலத்துல முஸ்லீம் சமுதாயத்துக்காக 16 தொகுதிகளைக் கொடுக்க வேண்டும்னு சொல்லி வந்தோம். கலைஞர் அதனைச் செய்தார்.

ADVERTISEMENT

முஸ்லிம் லீக் குழு

அதே மாதிரி இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கிற்கு கலைஞர் காலத்துல 5 தொகுதிகளைக் கொடுத்தார். அதே மாதிரி 5 தொகுதிகளை நீங்களும் தரவேண்டும் என்ற குறிப்பைக் காட்டுவதற்காகத்தான் நாங்க 5 பேர் உள்ள குழுவை அமைத்து போனோம்.

ADVERTISEMENT

இப்போ 4 பேர்தான் போயிருக்கிறோம். ஆக 5 தொகுதியைக் கேட்டு 5 பேர் தொகுதியை அமைத்துக் கொண்டு போன நாங்க 4 பேர்தான் போனதுனால ஒருவேளை அந்த 5-ஐ 4ஆக மாற்றுவார்களோ என்கிற சந்தேகம்கூட இருக்குது. காலங்கள் மாறும்.

ஆனால் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி நல்ல ஆட்சி, எல்லோரும் சொல்லக்கூடிய நல்ல ஆட்சி. இந்த நல்ல ஆட்சி மீண்டும் வரவேண்டும் என்ற உணர்வோடுதான் திராவிட முன்னேற்றக் கழக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் ஈடுபட்டிருக்கிற அனைத்துக் கட்சிகளும் பாடுபட்டுக் கொண்டிருக்கிறாங்க.

ADVERTISEMENT

அரசியல் கட்சி மட்டும் அல்ல

இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கைப் பொறுத்தவரையில் நாங்கள் ஒரு வெறுமனே ஒரு அரசியல் கட்சியாக யாரும் கருதக்கூடாது. இது ஒரு சமுதாயம் சார்ந்த அரசியல் கட்சி. சமுதாயம் சார்ந்த அரசியல் கட்சின்னு சொன்னா தமிழ்நாட்டுல பள்ளிவாசலை மையமாகக் கொண்டு இயங்கக்கூடிய எட்டாயிரத்திற்கும் மேற்பட்ட ஜமாத்துகள் என்கிற அமைப்பு சமுதாயம். அந்த சமுதாயத்தைப் பிரதிபலிக்கக் கூடியது, ரெப்ரெசன்ட் பண்ணக்கூடியது அந்த கட்சிதான் இந்திய யூனியன் முஸ்லீம் லீக். இது வெறுமனே அரசியல் கட்சி அல்ல.. இது ஒரு கொள்கையை வகுத்துக் கொண்டு நடக்கிற கட்சி இல்ல.

முஸ்லிம்களுக்கு 16 தொகுதிகள் ஏன்?

இது திருக்குரானை ஒரு கையிலயும் நபிகள் நாயகப் போதனை இன்னொரு கையிலயும், அதே நேரத்துல இந்திய முஸ்லீம் என்கிற முறையில இந்திய அரசியலமைப்பு சாசனத்தை இன்னொரு கையிலயும் ஏந்திக்கொண்டு செல்லவேண்டும் என்ற அடிப்படையில் நாங்கள் பயணம் பண்ணிக் கொண்டிருக்கிறோம். அந்த அடிப்படையில் தமிழ்நாட்டுல 60 லட்சத்துக்கும் மேற்பட்ட முஸ்லீம் வாக்காளர் இருக்கிறாங்க. அவங்களையெல்லாம் ரெப்ரெசன்ட் பண்ணக்கூடிய முறையில் உள்ள ஒரு அமைப்புதான் இந்திய யூனியன் முஸ்லீம் லீக். அந்த அடிப்படையில் தான் 16 முஸ்லீம் எம்எல்ஏக்கள் செல்ல வேண்டும் என்று நாங்கள் சொல்லிக் கொண்டிருக்கிறோம்.

முஸ்லிம்களுக்கு 16 தொகுதிகளைத் தர வேண்டும் என கலைஞரிடம் கேட்டோம். ஏன் என கலைஞர் கேட்டார்.. அதற்கு, “234 தொகுதிகளிலும் நாங்க இல்லாத தொகுதிகளே கிடையாது. 2,000 வாக்குகளில் இருந்து 65,000- 70,000 வாக்குகள் அளவுக்கு எங்க சமுதாய ஓட்டுகள் இருக்கு என்கிற அடிப்படையில் தான் இதைக் கேக்குறோம்“ என்று சொன்னோம். இதை கலைஞர் ஏற்றுக் கொண்டு அதனை அப்படியே செய்தார்.

5 தொகுதிகளைக் கேட்கிறோம்

அதே மாதிரி முஸ்லீம் லீக்கிற்கு கலைஞர் 5 தொகுதியை கொடுத்துப் பெருமைப்படுத்தினார். இப்போதும் நாங்கள் 5 தொகுதிகளைக் கேட்கிறோம். குறைந்தபட்சம் 5 கொடுக்கவில்லையென்றாலும் 4 தொகுதியாவது கொடுத்தா நல்லா இருக்கும் அப்படின்னு வலியுறுத்திட்டு வந்திருக்கிறோம்.

திமுகவின் டிஆர் பாலு சொன்னது என்ன?

டிஆர் பாலு தலைமையிலான குழு, “ தமிழ்நாட்டுல உள்ள முஸ்லீம் சமுதாயம், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகியவை இந்த திராவிட மாடல் ஆட்சி தொடரவேண்டும் என்ற அடிப்படையில் எல்லா காரியங்களையும் நீங்கள் செய்வதற்கு நன்றி செலுத்துகிறோம் – உங்களுக்கு சென்ற முறை நாங்கள் 3 தொகுதிகளைக் கொடுத்தோம். துரதிர்ஷ்டவசமாக 3 தொகுதிகளிலும் வெற்றி பெற முடியாமல் போய்விட்டது. இதையும் நீங்கள் மனதில் வைத்துக்கொள்ள வேண்டும் என்று சொன்னது.

மேலும், கூட்டணியில் இன்னும் ஒரு சில கட்சிகளை நாம் இணைக்க வேண்டியிருக்கு. அதனால நாங்களும் தொகுதிகளை விட்டு கொடுக்கப் போகிறோம். அது மாதிரி கூட்டணிக் கட்சிகளும் விட்டுக் கொடுத்தால் நல்லா இருக்கும் என்றும் டிஆர் பாலு குழு சொன்னது.

அத்துடன், ”கடந்த முறை 3 தொகுதிகள் கொடுத்தோம், அதுல ஒன்றை விட்டுக் கொடுக்கலாம் என்றும் டிஆர் பாலு குழுவினர் கூறினர். நாங்க எந்த முடிவும் சொல்லலை. அடுத்து கன்சல்ட் பண்ணிட்டு வந்து, உட்கார்ந்து பேசுவோம் என்றோம்.

ஏணிச் சின்னத்தில்தான் போட்டி

ஏணிச் சின்னம் எங்களுடைய சின்னம். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆல் இந்தியா அளவுல உள்ள ஒரு கட்சி. அது தேர்தல் ஆணையத்துல அங்கீகரிக்கப்பட்ட ஒரு கட்சி. அதனால ஏணிச் சின்னம்ங்கறது எப்போதும் இருக்கும். அதனால எந்த சின்னம் என்ற கேள்வியே இல்லை.

சின்னம் இல்லாதவங்க திராவிட முன்னேற்றக் கழகச் சின்னத்துல நிக்கலாம், அது வேற. எங்களைப் பொறுத்தவரைக்கும் எந்த தேர்தலா இருந்தாலும், உள்ளாட்சித் தேர்தலா இருந்தாலும் சரி, சட்டமன்றத் தேர்தலா இருந்தாலும் சரி, நாடாளுமன்றத் தேர்தலா இருந்தாலும் சரி, நாங்க ஏணிச் சின்னத்துலதான் போட்டியிட்டோம்.. போட்டியிடுவோம்.

உள்ளாட்சியில் அதிக இடங்களா?

உள்ளாட்சித் தேர்தலில் அதிக இடங்கள் ஒதுக்க வேண்டும் என்ற பேச்சு தற்போது வரவில்லை. எங்க செயற்குழு கூட்டத்துலதான் அந்த கருத்து பரவலாகப் பேசப்பட்டது. வருங்காலத்துல உள்ளாட்சித் தேர்தல்கள் ஆரம்பத்துல இருந்து கீழ்மட்டத்துல இருந்து மேல்மட்டம் வரைக்கும் எல்லா இடங்கள்லயும் இந்திய யூனியன் முஸ்லிம் லீகை ரெப்ரசென்ட் பண்ணக்கூடிய, பிரதிநிதித்துவப்படுத்தக்கூடிய வகையில எங்களுடைய ஈடுபாடு இருக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறோம். உள்ளாட்சித் தேர்தல் வரும்போது நிச்சயமாக இதைச் செய்வோம்.

சுமூகமான பேச்சுவார்த்தை

திமுக குழுவுடனான பேச்சுவார்த்தை சுமூகமாத்தான் இருக்கு, எந்தப் பிரச்சனையும் கிடையாது.

தேர்தல் காலங்களில் கூடுதல் தொகுதி கேட்கிறது, குறைச்சுக் கொடுக்கிறது இது இயற்கையில நடக்கக்கூடிய ஒண்ணு. கூடுதல் தொகுதி கொடுத்த காலத்தைப் பாராட்டியும், குறைச்சுக் கொடுத்த காலத்துல தூத்துறதுமான பழக்கம் எங்களுக்குக் கிடையாது.

என்றைக்கும் திமுக கூட்டணியில்தான் இருப்போம்

நாங்க திராவிட முன்னேற்றக் கழகத் தலைமையிலான கூட்டணியில் அன்றும் இருந்தோம், இன்று இருக்கிறோம், நாளைக்கு இருப்போம். அதுல எங்களுக்கு எந்தவிதமான மறு சிந்தனையும் கிடையாது. அவங்க நாலு தொகுதி கொடுக்கறாங்களா, மூணு தொகுதி கொடுக்கறாங்களா, இல்ல ரெண்டு தொகுதி கொடுக்கப் போறாங்களா.. ஒண்ணுமில்லன்னு சொல்லப் போறாங்களாங்கிற கொஸ்டினே கிடையாது. எது சொன்னாலும் நாங்க அங்கதான் இருப்போம். அது எங்களுடைய முடிவு.

16 தொகுதிகள் பட்டியல்

16 தொகுதிகள் லிஸ்டைக் கொடுத்து, இதுல நாங்க நிக்கறதுக்கு என்ன செலவு வந்தாலும் பார்த்துக்குறோம் அப்படின்னு சொல்றது ஃபர்ஸ்ட் டைம் கேட்கிறேன். ஃபர்ஸ்ட் டைம். அதனால கட்சியில நிறைய விருப்பம் வந்திருக்கு, எதிர்பார்ப்பு நிறைய வந்திருக்கு. இந்தச் சூழ்நிலையில நாங்க பேச்சுவார்த்தை நடத்துறோம்.

தமிழ்நாட்டுல திராவிட மாடல் ஆட்சி தொடர்ந்து நீடித்து நன்மையைச் செய்து கொண்டிருப்பது போல வருங்காலத்திலயும் தொடர்ந்து நீடித்து நன்மையைச் செய்ய வேண்டும் என்ற நம்பிக்கை நாங்கள் ஆழமாக ஊர்… வேரூன்றி இருக்கிறோம். இரண்டாவது, திராவிட முன்னேற்றக் கழகத் தலைமையிலான கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இணைந்திருப்பது தேர்தல் வாக்குறுதியோ அல்லது தேர்தல் சீட்டை அடிப்படையா வச்சு இல்லை. எங்களுடைய கூட்டு உறவு என்பது, இந்த கூட்டணி என்பது இருப்பது கொள்கை ரீதியான கூட்டணி. ஒன்றே குலம் ஒருவனே தேவன், யாதும் ஊரே யாவரும் கேளிர், பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும், யான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம் என்பது தமிழ் மொழியில் உள்ள பண்பாட்டு விழுமியங்களாகும். இது தமிழ் மொழியில் மட்டுமல்ல, திராவிடப் பாரம்பரியத்தில் உள்ளது மட்டுமல்ல, முஸ்லிம் லீக்கோட பாரம்பரியமும் அதுதான், இஸ்லாமியப் பாரம்பரியமும் அதுதான், நபிகள் நாயகம் போதித்த பாரம்பாரியமும் அதுதான் என்ற அடிப்படையில் தான் திராவிட முன்னேற்றக் கழக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இணைந்திருக்கிறது.

இதனால நாங்க இப்போ பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறோம். அவர்கள் சொல்லியிருக்காங்க. அதையெல்லாம் கலந்து பேசிட்டு மீண்டும் வந்து நாங்க சந்திப்போம். இவ்வாறு பேராசிரியர் காதர் மொகிதீன் கூறினார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share