2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்கு திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியுடன் திமுக தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தையை இன்று பிப்ரவரி 22-ந் தேதி தொடங்கியது.
தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தைக்காக திமுகவில் டிஆர் பாலு தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவில் கே.என்.நேரு, திருச்சி சிவா, ஆ.ராசா, ஆர்.எஸ். பாரதி, எ.வ.வேலு, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.
திமுக கூட்டணியில் தொடர்ந்து இடம் பெற்று வரும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அமைத்துள்ள குழுவுடன் இன்று திமுக குழு பேச்சுவார்த்தை நடத்தியது.
திமுக தலைமையகமான சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக குழுவை முஸ்லிம் லீக்கின் தலைவர் காதர் மொகிதீன், நவாஸ் கனி, அப்துல் ரகுமான், அபூபக்கர், ஷாஜஹான் ஆகியோர் அடங்கிய குழு தற்போது சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்க இருப்பதாக முஸ்லிம் லீக் கட்சியின் தலைவர் காதர் மொய்தீன் ஏற்கனவே கூறியிருந்த நிலையில் தற்போது பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.
முஸ்லிம் லீக் கட்சிக்கு எத்தனை இடங்கள்?
2021-ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணியில் இடம் பெற்ற முஸ்லிம் லீக் கட்சிக்கு கடையநல்லூர், வாணியம்பாடி, சிதம்பரம் ஆகிய 3 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இந்த 3 தொகுதிகளிலும் ஏணிச் சின்னத்தில் போட்டியிட்ட முஸ்லிம் லீக், தோல்வியைத் தழுவியது.
இந்நிலையில் தற்போதைய 2026 தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை முஸ்லிம் லீக் கேட்கிறது. திமுக தரப்பில் அதிகபட்சமாக 2 தொகுதிகள் ஒதுக்க வாய்ப்புள்ளது.
