நா.மணி
திரையில் தோன்றும் முன்பே அரசியல் பாலபாடம் படித்து நடிகர்களாக வலம் வந்தவர்கள். நடிக்க வந்த பின்னர் அரசியலையும் நடிப்பையும் இரு கரங்களில் முன்னெடுத்தவர்கள். நடிகப் பிம்பத்தை அரசியலாக்க விரும்புபவர்கள். நடிப்பு பிரபலத்தை காசாக்கிக் கொள்ள விளம்பரங்களில் நடிப்பது போன்றதே இந்த செயல் திட்டம். முதலில் கூறப்பட்ட இரண்டு வகையினர் அரசியல் செய்ய, ஆளுமை பெற தகுதி பெற்றவர்கள். மூன்றாம் பிரிவினர் ஆபத்தானவர்கள். சமூகத்திற்கு பெரும் தீங்கை உருவாக்குபவர்கள்.
திரைப்படத்தில் நாயகனாக நடிப்பவர் அரசியல் நாயகனாக விருப்பப்படலாம். ஆனால் மக்களின் ஒரு பகுதியினர் அவரை நிஜ நாயகனாக ஆக்க விரும்புவது ஒருவகை மனோநிலை. அது ஓர் உளவியல். தான் ஈட்ட முடியாத வெற்றிகளை தனக்கு பிரியமான மனிதப் பிம்பம் ஈட்டும் போது தனக்கு ஓர் மனநிறைவு ஏற்படுகிறது. பின்னர் அது மட்டற்ற மகிழ்ச்சியாக மாறுகிறது.
தன்னிடம் இல்லாத அழகை தனது பிம்பத்திற்குள் பார்க்கிறார். தனக்கு இல்லாத தைரியத்தை, தான் அனுபவிக்க முடியாத அதிகாரத்தை திரையில் தோன்றும் பிம்பம் சாதித்து காட்டுகிறது. அந்த பிம்பத்தை பார்த்து தானே இவற்றை செய்வதாக மனம் கருதிக் கொள்கிறது. முதலில் “நான் அவர் இல்லை; அவர் எனது மாய உலகம்” எனத் தொடங்கி, “அவர் நானே” என்ற நிலைக்கு மாறுகிறது. இந்த ஆபத்தான நிலையில் நடிகன் சொல்வதையெல்லாம் கண்மூடித்தனமாக ஆதரிக்கிறார். இதை உணரும் நடிகன் இந்த சூழலை பயன்படுத்திக் கொண்டு ஆட்சி கட்டிலில் அமர விரும்புகிறான். அவ்வாறான நடிகர்களால் ஏற்படும் பாதிப்புகளை சற்று பரிசீலனை செய்வோம்.
உணர்ச்சிப்பட்ட முடிவுகள்
நடிகனை நம்பி வாக்களிக்க முனையும் வாக்காளர்களின் வேட்பாளர் தேர்வில் விவேகம் இருக்காது. அவரது தேர்வு உணர்வு சார்ந்ததாகவே இருக்கும்.
கொள்கையை மறந்து முகத்தை தேர்வு
கட்சியின் கொள்கைகள், திட்டங்கள், நிர்வாகத் திறன் போன்றவற்றை பரிசீலனை செய்ய மாட்டார்கள். நடிகனின் முகத்திற்காக வாக்களித்தல், வாக்காளர் என்ற அந்தஸ்திலிருந்து வாக்களிப்பதல்ல. அது ஒரு குடிமகனாக தன்னையும் சக வாக்காளர்களையும் வஞ்சிக்கும் செயலாகும்.
புகழ் பரப்பும் மேடை
நடிக அரசியல் கொள்கைகள், செயல்திட்டங்கள், பொறுப்புகள், கடமைகள் ஆகியவற்றை சார்ந்து இருக்காது. அர்த்தமுள்ள விவாதங்களை உருவாக்காது. தேர்தலும் பிரச்சாரமும் புகழைப் பரப்பும் மேடையாக மட்டுமே மாறிவிடும். அரசியல் மேடையும் ஒரு சினிமா காட்சியாக அரங்கேறும்.
பின்னுக்குத் தள்ளப்படும் கொள்கைகள்
நடிகனின் முகத்தை முன்னிறுத்தும் அரசியல், கட்சி கொள்கை, சாசனம், செயல் திட்டங்கள் ஆகிய அனைத்தையும் பின்னுக்கு தள்ளிவிடுகிறது.
பொறுப்புணர்வு அற்ற ஆட்சி
ஆட்சி அமைத்தாலும் பொறுப்புணர்வு (accountability) குறையும். தவறுகளை நியாயப்படுத்தும் போக்கு உருவாகும். எதையும் கண்டுகொள்ளாத நிலை நிலவும்.
அரசியல் குழப்பங்கள்
நடிகர்கள் ஆட்சியில் கொள்கை வடிவமைப்பு, பொருளாதார முடிவுகள், நிர்வாக ஒருங்கிணைப்பு திறன் இன்மை போன்றவை நிலவும். அனுபவமில்லாத அரசியல் பெரும் குழப்பங்களை ஏற்படுத்தும்.
அரசியல் கலாச்சாரத்தை பாதிக்கும்
சமூகத்துக்கு உழைத்த நல்லவர்கள், அரசியலே வாழ்வு என்று இருப்பவர்கள், திறமை மிக்க அரசியல்வாதிகள், மதிநுட்பம் மிக்க மக்கள் சோர்வு அடைவார்கள். இது அரசியல் கலாச்சாரத்தை பாதிக்கும். அரசியல் என்பது பிரபல நடிகர்களின் போட்டி (competition) போல மாறிவிடும்.
புகழை நம்பி நகரும் அரசியல்
அரசியலில் உழைப்பு, அறிவு, சேவை ஆகிய அனைத்தையும் அது பின்னுக்கு தள்ளிவிடும். வெற்றி, புகழ் மட்டுமே அரசியல் என்ற புதிய பரிமாணத்தில் அரசியல் சிக்கிக் கொள்ளும்.
அரசியல் அமைப்பின் பலவீனம்:
ஒரு கட்சி என்பதற்கு ‘சிந்தனை’ மையமாக இல்லாமல், நடிகனைச் சுற்றி இயங்கும் கட்சிகள் அரசியல் அமைப்பை பலவீனப்படுத்தும்.
பின்னுக்குத் தள்ளப்படும் அடிப்படை பிரச்சினைகள்
நடிகர்கள் ஆட்சியில் கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு போன்ற முக்கிய பிரச்சினைகள் பின்னுக்கு தள்ளப்படும். அவற்றை பிம்ப அரசியல் மயக்கத்தில் இருக்கும் ‘ரசிக வாக்காளர்’ கவனிக்க மாட்டார். இதற்கு உதாரணமாக, எம்.ஜி.ஆர் காலத்தில் பள்ளிக் கல்வி தனியார் மயமாக்கலுக்குள் தீவிரமாக சென்றது என்பதைக் குறிப்பிடலாம்.
ரசிக மனம் குடிமகன் ஆகும் போது…
ஒரு நடிகனின் ரசிகனாக இருப்பது வரை பிரச்சினை இல்லை. ஆனால் ரசிக மனமே குடிமகன் என்ற அந்தஸ்தை அடையும் போது அது சமூகத்தையே பாதிக்கும்.
பக்தி மனநிலை
நடிகன் மீதுள்ள ஈர்ப்பும் மோகமும் ஒருவகை பக்தி மனநிலை. இந்த மனநிலை வாக்களிப்பதற்கான காரணமாக இருக்கக் கூடாது. அது சமூகத்தை பாதிக்கும்.
உண்மையை இழத்தல்
திரை மாயை அரசியலில் ‘ரசிக வாக்காளர்’ உண்மைகளை இழக்க உறுதுணையாக மாறுகிறார்.
கடந்த கால பரிசீலனை இன்மை
நடிகரை முன்னிறுத்தும் அரசியல் கட்சியினர் கொள்கையைத் தேட மறந்து விடுவார்கள். இவர்களின் கடந்த கால அரசியல் நிலைப்பாடுகளையும் பரிசீலிக்க மாட்டார்கள்.

அக்கறை இன்மை
வாக்காளர் முன்பு முதன்மை நடிகன் மட்டுமே கண்களில் தோன்றுவார். வேட்பாளர்களாக நிற்கும் மற்றவர்கள் குறித்து இந்த ரசிக வாக்காளனுக்கு அக்கறை இருக்காது.
சுய பரிசீலனை இன்மை
“நான் செலுத்தும் வாக்கு நான் வாழும் சமூகத்திற்கும் எனக்கும் நல்லதா?” என்று பரிசீலிக்கும் சிந்தனை ரசிக வாக்காளனுக்கு இருக்காது.
பகுப்பாய்வு இன்மை
வாக்களிக்க தேவையானது களத்தில் நிற்கும் அரசியல் கட்சிகளை பகுத்துப் பார்ப்பது. இந்த பகுத்தறிவு, ரசிக மனம் கொண்ட வாக்காளர்களிடம் செயல்படாது. இவர்கள் உணர்ச்சி பூர்வமாக முடிவு எடுப்பவர்கள்.
விமர்சனப் பார்வை
நடிகன் மீதான கண்மூடித்தனமான நம்பிக்கை ஒரு சமூக உளவியல் கட்டமைப்பு. நடிகன் மீதான ரசிப்பு, அவர்மீது பெருமதிப்பாக மாறுகிறது. அடுத்த கட்டமாக, அவரை வழிபாட்டுக்குரிய மனிதராக மாற்றுகிறது. வழிபாட்டுக்குரிய மனிதர் மீது விமர்சனப் பார்வை மறைந்து விடும். மற்றவர்கள் விமர்சனம் செய்தாலும் கோபம் கொப்பளிக்கும்.
திரைக் கதாபாத்திரமே நிஜ கதாபாத்திரம்:
‘ரசிக வாக்காளர்’ உண்மையில் வாக்களிப்பதில்லை; வாக்களிப்பதையும் ஓர் வழிபாடாகவே கருதுகிறார். திரைக் கதாபாத்திரத்தை நிஜக் கதாபாத்திரமாக மாற்ற முயற்சி செய்வது அல்லது இரண்டையும் கலப்பது ஜனநாயகத்திற்கு ஆபத்து.
முடிவுரை
ஒரு நடிகன் மீதான பாசமும் நேசமும் ஒரு நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கக் கூடாது. வாக்கு என்பது ஒருவரின் விருப்பத்தின் வெளிப்பாடு மட்டுமல்ல; அது ஒரு சமூகப் பொறுப்பின் அடிப்படையில் எடுக்கப்படும் முடிவு.
கட்டுரையாளர்:

நா.மணி, பேராசிரியர், மேனாள் தலைவர், தமிழ் நாடு அறிவியல் இயக்கம்.
