சென்னையில் பழைய இரும்பு கடையில் ஏற்பட்ட தீ விபத்து, அருகிலுள்ள கடைகள் மற்றும் வீடுகளுக்கும் பரவிய நிலையில் அதனை அணைப்பதற்கு தீயணைப்பு படையினர் போராடி வருகின்றனர். scaring fire accident at ramapuram
சென்னை ராமாபுரம், டிசி கொத்தரை நகர் பகுதியில் உள்ள இரும்புக்கடையில் இன்று (மார்ச் 16) மாலை வெல்டிங் வேலை செய்து கொண்டிருக்கும் பொழுது அங்கு எதிர்ப்பாராத விதமாக பெரும் தீ விபத்து ஏற்பட்டது. அதனால் அங்கிருந்து குபுகுபுவென புகை வெளியேறியது.
தீ விபத்து ஏற்பட்ட பழைய இரும்புக்கடைக்கு அருகில் ஏராளமான கடைகளும், அடுக்குமாடி குடியிருப்புகளும் இருந்ததால் மக்கள் அச்சமடைந்தனர்.
இதுகுறித்து தகவலறிந்த ராமாபுரம் போலீசார் விபத்து ஏற்பட்ட இடத்திற்கு வந்து, அங்கிருந்து பொதுமக்களை அப்புறப்படுத்தினர். தொடர்ந்து மூன்று தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்புத்துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
எனினும் இரும்புக்கடையில் பற்றி கொளுந்துவிட்டு எரியும் தீ, அருகிலுள்ள பர்னிச்சர், பெயிண்ட் உள்ளிட்ட கடைகளுக்கும், வீடுகளுக்கும் பரவியுள்ளதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதனால் தீ விபத்து ஏற்பட்டுள்ள இடங்களை சுற்றியுள்ள குடியிருப்பு பகுதிகளில் இருந்து மக்களை அப்புறப்படுத்தும் பணியில் போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
இந்த விபத்தால் ராமாபுரம் பகுதியில் கரும்புகை சூழ்ந்து முதியவர்கள் மற்றும் குழந்தைகள் மூச்சுத்திணறால் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
படங்கள் மற்றும் வீடியோக்கள் : சின்னையா