அடுத்த ட்விஸ்ட் : எரிந்த நிலையில் பணம்… உச்சநீதிமன்றம் வெளியிட்ட வீடியோ ஆதாரம்!

Published On:

| By christopher

sc releases video evidence of Yashwant Varma

நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் தீ விபத்திற்கு பின்னர் எரிந்த நிலையில் பணம் கிடந்ததற்கான வீடியோவை உச்ச நீதிமன்றம் வெளியிட்டுள்ளது. sc releases video evidence of Yashwant Varma

டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் கடந்த 14ஆம் தேதி ஏற்பட்ட தீயை அணைக்கும் போது, ஒரு அறையில் கட்டு கட்டாக பணம் கண்டெடுக்கப்பட்டதாக தகவல்கள் வந்தன.

ADVERTISEMENT

இதையடுத்து உச்ச நீதிமன்றம் கொலிஜியம் கூடி, நீதிபதி யஷ்வந்த் வர்மாவை அலகாபாத் உயர்நீதிமன்றத்திற்கு பணியிடம் மாற்றம் செய்ய பரிந்துரை செய்ததாகவும், அவர் மீது முதற்கட்ட விசாரணையை தொடங்கியதாகவும் கூறப்பட்டது.

குற்றச்சாட்டுக்கு உள்ளான நீதிபதி அலகாபாத் உயர்நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்யப்படுவதற்கு அங்குள்ள பார் கவுன்சில் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இதனையடுத்து நீதிபதி யஷ்வந்த் வர்மாவை பணியிட மாற்றம் செய்வது குறித்து தற்போது பரிசீலனை செய்து வருகிறோம். அவரிடம் விளக்கம் கேட்டிருக்கிறோம்” என உச்ச நீதிமன்றம் அறிக்கை வெளியிட்டது.

ADVERTISEMENT

இதற்கிடையே திடீர் திருப்பமாக ’நீதிபதி வீட்டில் தீயணைப்பு நடவடிக்கையின் போது நாங்கள் எந்த பணத்தையும் கண்டுபிடிக்கவில்லை” என டெல்லி தீயணைப்புத் துறை தலைவர் அதுல் கார்க் தெரிவித்தார்.

இவ்வாறு உயர்நீதிமன்ற நீதிபதி விவகாரத்தில் தொடர்ந்து அதிரடி திருப்பங்கள் கண்டது தேசிய அளவில் கவனம் பெற்றது.

ADVERTISEMENT

இந்த நிலையில் நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் தீ விபத்தின் போது பணம் கண்டெடுக்கப்பட்டதை உறுதி செய்யும் விதமாக ஆதாரத்தை உச்சநீதிமன்றம் வெளியிட்டுள்ளது.

டெல்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தேவேந்திர குமார் உபாத்யாயா அளித்த 25 பக்கங்கள் கொண்ட உள் விசாரணை அறிக்கையை உச்சநீதிமன்றம் நேற்று வெளியிட்டது.

அந்த அறிக்கைக்கு மறுப்பு தெரிவித்த நீதிபதி வர்மா, ’எனது அதிகாரப்பூர்வ பங்களாவில் அமைந்துள்ள அறையில் பணம் இருப்பதற்கான ஆதாரம் காட்ட வேண்டும்’ என்று கோரினார்.

இந்த நிலையில் டெல்லி போலீஸ் கமிஷனர் சஞ்சய் அரோரா, உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி உபாத்யாயாவுடன் பகிர்ந்து கொண்டதாக கூறப்படும் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை உச்ச நீதிமன்றம் வெளியிட்டுள்ளது.

3 பேர் கொண்ட விசாரணை குழு! sc releases video evidence of Yashwant Varma

இதனையடுத்து நீதிபதி யஷ்வந்த் மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்க மூன்று பேர் கொண்ட குழுவை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா அமைத்துள்ளார்.

இது தொடர்பாக உச்ச நீதிமன்றம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “நீதிபதி வர்மாவுக்கு நீதித்துறை பணிகளை வழங்க வேண்டாம் என்று டெல்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தற்போதைக்கு கேட்டுக் கொள்ளப்படுகிறார்.

நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்த பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஷீல் நாகு, இமாச்சல பிரதேச உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஜி.எஸ்.சந்தவாலியா, கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி அனு சிவராமன் ஆகியோர் அடங்கிய மூன்று பேர் கொண்ட குழுவை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமைத்துள்ளார்” என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share