நான் சனிக்கிழமைகளில் மட்டும் வெளியில் வரும் ஆள் இல்லை என்று உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில் வேப்பேரியில் ஏற்பாடு செய்யப்பட்ட ‘முன்னேற்றப்பாதையில் முப்பெரும் விழா’ நலத்திட்ட நிகழ்ச்சியில் துணை முதல்வரும் திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டார்.
சுமார் 1000 பேருக்கு நிதி உதவி உட்பட பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
அப்போது “2026-இல் மீண்டும் தமிழ்நாட்டின் வளர்ச்சிப்பயணம், சென்னை கிழக்கிலிருந்து தொடரட்டும்” என்று கூறிய உதயநிதி ஸ்டாலின்,
“2023 செப்டம்பர் முதல் மகளிர் உரிமைத் திட்டம் மூலம் 1.20 கோடி பெண்களுக்கு இதுவரை தலா 24 ஆயிரம் ரூபாய் முதல்வர் வழங்கியிருக்கிறார். நான் பல மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் செல்வேன். வாரத்தில் 4,5 நாட்கள் வெளியூரில் தான் இருப்பேன்.
நான் வெறும் சனிக்கிழமை மட்டும் வெளியே வரமாட்டேன். ஞாயிற்றுக்கிழமை கூட வெளியில் சுற்றிக்கொண்டுதான் இருப்பேன். இன்னைக்கு என்ன கிழமை என்று கூட எனக்கு தெரியாது.
நான் பல மாவட்டங்களுக்கு போகும்போது அங்கு மக்கள் கூட்டமாக நிற்பார்கள். மனுக்களுடன் நிற்பார்கள். தாய்மார்கள் நிற்பார்கள். நான் வண்டியை நிற்கச் சொல்லுவேன். நிறைய பேர் மனுக்குள் கொடுப்பார்கள். பல பேர் பாராட்டுவார்கள். வாழ்த்துவார்கள். தம்பி… அப்பாட்ட சொல்லிடு, 1000 ரூபாய் வந்திருச்சி. தேங்க்ஸ் என்று வாழ்த்தி பேசுவார்கள்.
இந்த ஆயிரம் ரூபாய் எதற்கு பயன்படுத்துகிறீர்கள் என்று கேட்பேன். 90 சதவீதம் பேர் மருத்துவ செலவிற்கு பயன்படுத்துகிறேன் என்றார்கள். உறுதியாக சொல்கிறேன், இன்னும் இரண்டு மாதங்களில் கூடுதலான மகளிருக்கு உரிமை தொகையை முதல்வர் நிச்சயம் வழங்குவார்’ என கூறினார்.
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வரும் டிசம்பர் 20ஆம் தேதி வரை சனிக்கிழமை தோறும் பிரச்சாரத்தில் ஈடுபடவுள்ளார். இந்நிலையில் அவரது தமிழக வெற்றிக் கழகத்தை வீக் எண்ட் பார்ட்டி என்று அரசியல் கட்சிகள் விமர்சித்து வருகின்றனர். இந்தநிலையில் உதயநிதி ஸ்டாலினும் விஜய்யை மறைமுகமாக விமர்சித்திருக்கிறார்.