கூடைப்பந்து விளையாட்டு களத்தை அடிப்படையாகக் கொண்ட ‘நடு சென்டர்’ சீரிஸ் ஜியோ ஹாட்ஸ்டாரில் வரவிருக்கிறது.
தேசிய அளவிலான கூடைப்பந்து வீரரான 17 வயது பிகே, தவறான நடத்தைக்காக உயர்நிலைப் பள்ளியில் இருந்து வெளியேற்றப்படுகிறான். வன்முறை மற்றும் ஒழுக்கமின்மையால் பாதிக்கப்பட்ட ஒரு மோசமான பள்ளிக்கு பிகே மாற்றப்பட்டு அங்கு பொருந்த போராடுகிறான். அப்போது அவனுக்குள் இருக்கும் திறமையைக் கண்டறிந்து வைஸ் பிரின்சிபிள் ஊக்குவிக்க அவனது வாழ்வு மாறத் தொடங்குகிறது.
எனர்ஜி மற்றும் உணர்வுப்பூர்வமான பல தருணங்களைக் கொண்ட இளைஞர்களுக்கான கதையான ‘நடு சென்டர்’ தொடரில் சூர்யா எஸ் கே, சூர்யா விஜய் சேதுபதி, சாரா பிளாக், டெரன்ஸ், முகேஷ், டோம், யஷ்வந்த், சஹானா, மது வசந்த், ஆர்த்தி, கிஷோர், ஜீவா, நந்தகோபால், தாரா ஆகியோர் நடித்துள்ளனர். இவர்களுடன் சசிகுமார், ஆஷா ஷரத், கலையரசன் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து ள்ளனர்.
இயக்குநர் நாராயணன் ” உயர்நிலைப்பள்ளியின் கூடைப்பந்து அணி சுற்றி மட்டுமே நகரும் கதை கிடையாது. அதையும் தாண்டி அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் வாழ்க்கை முறையையும் பேசுகிறது. நான் என் உயர்நிலைப்பள்ளியில் வழக்கமாக பேஸ்கட்பால் விளையாடுவேன். பின்பு, பேஸ்கட்பால் கோர்ட்டோ கோச்சோ இல்லாத ஒரு பள்ளியில் சேர்ந்தேன். அங்கு நண்பர்களை உருவாக்கி, அணியாக சேர்ந்து பல மேட்ச் சென்றிருக்கிறோம். நல்ல நட்பு எனக்கு அங்கு கிடைத்தது. அப்படியான பிணைப்பையும் ஒற்றுமையையும் இந்தக் கதையில் பேசியிருக்கிறோம்.
இந்தத் தொடரில் பயிற்சியாளராக சசிகுமார் நடித்திருக்கிறார். வாழ்வில் எதாவது ஒரு வடிவத்தில் ஒரு நாள் நிச்சயம் பேஸ்கட்பால் உனக்கு உதவும் என பிகே-விடம் சசிகுமார் சொல்வார். இதை எனக்கு என்னுடைய பயிற்சியாளர் சொன்னார். பல வருடங்கள் முன்னால் அவர் சொன்னது எனக்கும் எஸ் கே சூர்யாவுக்கும் இன்று நனவாகி இருக்கிறது. கூடைப்பந்தால் தான் எங்கள் இருவருக்கும் முதல் வாய்ப்பு கிடைத்தது. இந்தத் தொடரை ஆத்மார்த்தமாகவும் மகிழ்ச்சியுடனும் உருவாக்கியுள்ளோம்” என்றார்.
ரசிகர் மனதில் கோல் போடுங்கள்
— ராஜ திருமகன்
