பெங்களூர் சிறை முதல் விடுதலை வரை..எடப்பாடியின் சதிகள்.. சசிகலா ’பகீர்’

Published On:

| By Kavi

பெங்களூரு சிறையில் இருந்து என்னை சென்னைக்கு மாற்ற முயற்சி செய்தார்கள். அப்படி மாறியிருந்தால் நான் இங்கு நின்று பேசியிருப்பேனா என்று கூட எனக்குத் தெரியவில்லை என்று சசிகலா கூறியுள்ளார்.

கமுதியில் இன்று பிப்ரவரி 24-ந் தேதி நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழியான சசிகலா பல்வேறு விவகாரங்கள் குறித்து பேசினார்.

ADVERTISEMENT

அவர் கூறுகையில், “அம்மா மறைவுக்கு பிறகு நம்ம கட்சியில் எவ்வளவோ பிரச்சினைகள். என்னென்னவோ நடந்தது. எம்.ஜி.ஆர். சினிமாவில் நடித்துக்கொண்டிருந்த போது அண்ணாவின் மேல் கொண்ட பற்றால் தன்னை திமுகவில் இணைத்துக்கொண்டார்.

திமுக வளர்ந்ததற்கு எம்.ஜி.ஆர்.தான் காரணம் என்று அண்ணாவுக்கே நன்றாக தெரியும். அண்ணாவுக்கு உடல்நிலை சரியில்லாமல் அவர் மறைந்த பிறகு, திமுகவுக்கு யார் தலைமை ஏற்பது.. யார் முதல்வராவது என்ற நிலை வந்தது. அந்த சமயம் எம்.ஜி.ஆரும் எம்.எல்.ஏ.வாக இருந்தார்.

ADVERTISEMENT

அவர்தான் எல்லோரிடமும் போய் பேசி கலைஞரை முதல்வராக்கினார். ஆனால் என்ன ஆச்சு… புரட்சித் தலைவரை இந்த கட்சியில் இருந்து வெளியேற்றிவிட வேண்டும் என்று முடிவு செய்து கட்சியை விட்டு நீக்கிவிட்டார்” என்று குறிப்பிட்டார்.

தொடர்ந்து எம்.ஜி.ஆர் கட்சி ஆரம்பித்தது, அமெரிக்காவில் சிகிச்சை பெற்றது, அவரது மறைவுக்கு பிறகு என்ன நடந்தது என அதிமுக வரலாற்றை பேசிய சசிகலா, பெங்களூரு சிறையில் இருந்தது பற்றி பேசினார்.

ADVERTISEMENT

“நான் பெங்களூரு சிறைக்கு சென்ற பின் 2 மாதத்துக்குள் அமைச்சர்கள் அங்கு வந்தார்கள். சென்னை ஜெயிலுக்கே உங்களை மாற்றிவிடலாம். நீங்கள் ஏன் பெங்களூருவில் இருக்க வேண்டும் என்று பேசினார்கள். செங்கோட்டையனும் அதைச் சொன்னார்.

நம்ம செகரட்டரி ஹோம் செகரட்டரிக்கு லெட்டர் கொடுத்து அவர் பெங்களூரு ஹோம் செகரட்டரிக்கு கொடுத்தால் போதும், நமக்கு டிரான்ஸ்பர் கொடுத்திருவாங்க என்று சொன்னார்கள். இல்லை நான் வரவில்லை என்று சொல்லிவிட்டேன். நல்லவேளை, மாறவில்லை. இல்லையென்றால் இங்கு பேசிக்கொண்டிருப்பேனா என்பதே கஷ்டம்.

பின்னாளில் நான் வேண்டாமென சொன்னதுதான் நல்லது என நினைக்குமளவுக்கு செய்துவிட்டார். திடீரென ஒரு பொதுக்குழுவை கூட்டி என்னை நீக்கிவிட்டார். நான் அவரை முதலமைச்சராக உட்கார வைத்துவிட்டு போயிருக்கேன். அப்படிப்பட்ட என்னை ஒரு பேப்பரை தூக்கி போடுவது போல் போட்டால் எப்படி இருக்கும்.

நான் எப்போதும் கோபத்தை காட்டுவதே இல்லை. இது தலைவரின் பழக்கம்.

சிறையில் என்ன நடந்தது என பார்தீர்கள் என்றால்… டெய்லி எனக்கு பிரச்சனை. இதை, இதுவரை என் குடும்பத்தினர் உட்பட யாரிடமும் நான் சொல்லவில்லை. இவர் இங்கே இருந்துகொண்டு அங்கே உள்ள ஆபீசர்களோடு பேசிக்கொண்டு, அவர்களை கையில் போட்டுக்கொண்டு… நான் உட்கார்ந்தால் தப்பு, நின்றால் தப்பு. இப்படித்தான் அந்த ஜெயிலில் நான் இருந்துவிட்டு வந்துருக்கேன்.

இடையில என்னுடைய கணவருக்கு உடம்பு சரியில்லை. பார்க்க வேண்டும் என்று கேட்டார். அதனால் பரோல் கொடுங்கள் என்று சொன்னார்கள். அப்போது அந்த ஆபீசரிடம் நம்ம வக்கீல் லெட்டர் கொடுத்தார். சாதாரணமாக எல்லாருக்கும் 15 நாள் பரோல் கொடுப்பாங்களாம். அதேபோல எனக்கும் 15 நாள் கொடுத்தார்கள். அந்த அம்மாவை ரெடியாகி வரச் சொல்லுங்கள், நீங்கள் அழைத்துக்கொண்டு செல்லுங்கள் என்றார்கள்.

நான் வந்து எஸ்பி ஆபீஸில் உட்கார்ந்திருக்கேன். அந்த எஸ்பி மெட்ராஸில் இருந்து எங்களுக்கு பதில் வரவில்லை என்கிறார். எனக்கு அந்த ஊர் சிறைதான் பரோல் கொடுக்க வேண்டும். அவர்கள் கொடுத்துவிட்டார்கள். ஆனால் இங்கிருந்து பதில் வரவில்லை.

நாம் உட்கார வைத்துவிட்ட போன அரசாங்கத்தில் இருந்து பதில் வரவில்லை. அந்த எஸ்.பி.ஆபிஸில் உட்கார்ந்திருக்கும் போது கமிஷனர் பேசுகிறார். எனக்கு காதில் விழ வேண்டுமென அந்த போனை லவுடு ஸ்பீக்கரில் போட்டர்கள். ஏனென்றால் அந்த மனிதனுக்கு தர்ம சங்கடமாகிறது.

என்னை நீங்களும் கேளுங்கள் என்று சொல்கிறார்கள். மெட்ராஸில் இருந்து அந்த கமிஷனர் என்ன சொன்னார் தெரியுமா, 15 நாட்கள் எல்லாம் கொடுக்க முடியாது. போலீஸ் பர்மிஷன் எல்லாம் கொடுக்க வேண்டும் என்பதால் 5 நாட்கள் தான் கொடுக்க முடியும் என்கிறார்.

இதை கேட்ட ஜெயில் சூப்பிரண்டு, ஜெயிலில் இருந்து நாங்களே 15 நாட்கள் கொடுக்கிறோம். நீங்கள் எப்படி கொடுக்க முடியாது என்று சொல்கிறீர்கள் என்று கேட்டார். அதற்கு கமிஷனர், ‘இல்லை சார்… 5 நாட்களுக்கு மேல் கொடுக்க வேண்டாம் என்று சிஎம்-ஏ சொல்லிவிட்டார். நீங்கள் சின்னம்மாகிட்ட ஒரு வார்த்தை சொல்லுங்கள். அவர் ஒத்துக்கொள்வார்” என்கிறார்.

மேலே இருக்கிறவர் சொன்ன பிறகு அதிகாரிகள் எதுவும் செய்யமுடியாது. அதனால் 5 நாட்கள் தான் பரோல் கொடுத்தார்கள். அதன்பிறகு நான் எங்கே தங்குகிறேன் என்று தகவல் கொடுக்க வேண்டும்.

நான் போயஸ் கார்டனில் இருந்துதானே ஜெயிலுக்கு போனேன். அதனால் அந்த முகவரியே கொடுத்தேன். உடனே இங்கிருந்து 14 கண்டிஷன் வருது. இதுபோல வேற யாருக்கும் கண்டிஷன் வந்ததில்லை என்கிறார்கள் அந்த சிறை அதிகாரிகள்.

மருத்துவமனைக்கும், வீட்டுக்கும் தவிர வேறு எங்கும் போகக்கூடாது என்று நிபந்தனை போட்டர்கள். போயஸ் கார்டன் வீட்டில் தங்கக் கூடாது என்பது முக்கிய நிபந்தனை. இல்லையென்றால் அந்த 5 நாள் பரோலையும் கேன்சல் செய்துவிடுவோம் என்றார்கள். சரி என் கணவர் உயிருக்கு போராடுகிறார் என்பதால் எல்லா நிபந்தனைகளுக்கும் ஒத்துக்கொண்டு போனேன். தி.நகரில் உள்ள என் உறவினர் வீட்டில் தங்கினேன்.

மீண்டும் சிறை சென்ற பிறகு, கணவர் இறந்துவிட்டதாக தகவல் வந்தது. அதற்கும் 15 நாட்கள் பரோல் கொடுக்க முடியாது 10 நாட்கள்தான் என்றார்கள். எங்கள் பக்கமெல்லாம் 15ஆவது நாளில் தான் காரியம் செய்வார்கள்.

ஆனால் வேறு வழியில்லை என்பதால் 10ஆவது நாள் காரியம் செய்துவிட்டு பெங்களூரு போனேன். இப்படி பதவியில் உட்காரவைத்துவிட்டு போனவரை, எப்படியெல்லம் ஈட்டியால் குத்துவார்களோ, அப்படியெல்லாம் குத்திவிட்டார்கள்.

நான் சிறையில் இருந்து வந்தபோது அதிமுக கொடி கட்டக்கூடாது. அம்மா சமாதிக்கு போகக் கூடாது என்றார்கள்.

 ‘நீ என்ன சொல்றது நான் என்ன கட்சி கொடியை கழட்டுறது’ என்பதால் தான்நான் வேற வண்டி மாறி வந்தேன். தமிழ்நாடு பார்டரில் ஓசூர் வந்ததுமே என்னை அரெஸ்ட் செய்ய வேண்டுமென முடிவு செய்துவிட்டார்கள். அந்த செய்தியும் எனக்கு வந்துவிட்டது. ஆனாலும் நான் கொடியை கழட்ட மாட்டேன் என கூறி வேறு வண்டி மாறி வந்துவிட்டேன்.

இந்த அளவுக்கு கட்சியில் யாரும் இருக்கக் கூடாது… மூத்தவர்களை வெளியில் தள்ள வேண்டும். இதெல்லாம் என்ன போக்கு.. இப்போது கட்சி சரிந்துகொண்டே போகிறது.

அதுதான் உண்மை. இந்த உண்மையை எவ்வளவு நாளைக்கு மறைக்க முடியும்? மறைக்க முடியாது. இவர் செய்வது எந்த விதத்திலும் நியாயம் கிடையாது. இவரை எப்படி நல்ல மனிதர் என்று மக்கள் சொல்வார்கள்.

இவரை பொறுத்தவரை தொண்டர்களை பற்றி கவலையில்லை. தான்தான் இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்” என்று எடப்பாடி பழனிசாமி மீது பகீர் குற்றச்சாட்டை சுமத்தினார்.

தனது பேச்சில் எங்கேயும் எடப்பாடி பழனிசாமி என்று சசிகலா குறிப்பிடவில்லை. அவர் பெயரை சொல்ல விரும்பவில்லை என்று குறிப்பிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share