எடப்பாடி பழனிசாமி மட்டும் அதிமுக கிடையாது… அதிமுக சசிகலா வசமாகும் என்று திவாகரன் கூறியுள்ளார்.
சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும், நிலையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழியான சசிகலா என்ன செய்ய போகிறார் என்ற எதிர்பார்ப்பு தமிழக அரசியலில் எழுந்தது.
இந்தநிலையில் கடந்த சில நாட்களாக தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை மேற்கொண்ட சசிகலா, நேற்று மாலை முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா நினைவிடங்களில் மரியாதை செலுத்தினார். தொடர்ந்து நாளை (இன்று பிப்ரவரி 24) முக்கிய முடிவை அறிவிக்கப்போகிறேன் என்று கூறியிருந்தார்.
இந்தசூழலில் அவரது ஆதரவாளர்கள் பசும்பொன் கோட்டைமேடு பகுதியில் பொதுக்கூட்டத்திற்கான ஏற்பாடுகளை செய்தனர். இந்த கூட்டம் நடைபெறும் சுற்றுவட்டார பகுதிகளில் கருப்பு – வெள்ளை – சிவப்பு என மூன்று வண்ணத்தில் புதிய கொடிகள் நடப்பட்டுள்ளன. அண்ணா ஜெயலலிதா உருவம் கொடியில் இடம்பெறவில்லை.
“களம் காண்போம்.. அம்மாவின் ஆட்சி அமைப்போம்” என்று அங்கு அமைக்கப்பட்டுள்ள மேடையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தசூழலில் இன்று மாலை மாநாட்டுக்கு வந்த சசிகலாவின் சகோதரர் திவாகரன் நியூஸ் 18 தமிழுக்கு அளித்த பேட்டியில், “வி.கே.சசிகலா புதிய கட்சியை ஆரம்பித்து வேட்பாளர்களை களமிறக்குகிறார். தேர்தலுக்கு பின்னர் அதிமுக சசிகலா வசமாகும் . எடப்பாடி பழனிசாமி மட்டும் அதிமுக கிடையாது” என்று கூறியுள்ளார்.
முன்னதாக நமது மின்னம்பலத்தில், சசிகலா புதிய கட்சி தொடங்கவுள்ளார் என்றும் இந்த தேர்தலில் சுமார் 30 தொகுதிகளில் களம் காண முடிவு செய்திருக்கார் எனவும் பிப்ரவரி 20ஆம் தேதி வெளியான மின்னம்பலம் டிஜிட்டல் திண்ணையில் விரிவாக கூறியிருந்தோம் என்பது குறிப்பிடத்தக்கது.
