செங்கோட்டையனை அதிமுகவில் இருந்து நீக்குவதா? எடப்பாடிக்கு சசிகலா கண்டனம்

Published On:

| By Mathi

AIADMK Sengottaiyan Sasikala

அதிமுகவில் இருந்து அக்கட்சியின் மூத்த தலைவர் கே.ஏ. செங்கோட்டையன் நீக்கப்பட்டுள்ளதற்கு சசிகலா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சசிகலா வெளியிட்ட அறிக்கையில், ” மூத்த முன்னோடியும், கழக முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற உறுப்பினருமான அன்பு சகோதரர் செங்கோட்டையன் அவர்களை கழகத்திலிருந்து நீக்கியிருப்பதாக வரும் செய்திகள் மிகவும் வேதனையளிக்கிறது. இது ஒரு சிறுபிள்ளைத்தனமான செயலாகத்தான் பார்க்கமுடிகிறது. இன்றைக்கு யாராக இருந்தாலும் கட்சியை வளர்ப்பதை விட்டுவிட்டு, அழிக்கின்ற செயல்களில் ஈடுபடுவது மன்னிக்கமுடியாத செயலாகும். இது மிகவும் கண்டனத்திற்குரியது. அன்பு சகோதரர் செங்கோட்டையன் போன்றோர் புரட்சித்தலைவர் காலத்திலிருந்து தொடர்ந்து இந்த கட்சியின் வளர்ச்சிக்காக அரும்பாடுபட்டவர். இது போன்ற கட்சிக்கு பாதகமான நடவடிக்கைகள் மூலம் திமுகவினரின் ஆசைதான் நிறைவேறியிருப்பதாக தெரிகிறது. இதைத்தான் திமுகவினர் அனுதினமும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்கள். கழகத்தை அழிக்க துடிக்கும் திமுகவினரின் எண்ணத்திற்கு வலு சேர்த்திடும் வகையில் நம் கழகத்தினரே செயல்படுவது மிகவும் வேதனையாக இருக்கிறது. இது போன்ற செயல்கள் “நுனிக்கிளையில் அமர்ந்துகொண்டு அடிமரத்தை வெட்டுவது” போன்றது. இது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற ஆலமரத்திற்கே கேடாக அமைந்து விடும். இது போன்ற மனப்பாங்கினை திருத்திக்கொள்ள வேண்டும், இல்லையென்றால் கழகத்தொண்டர்களால் திருத்தப்படுவது நிச்சயம் என்பதை இந்நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.

ADVERTISEMENT

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் புரட்சித்தலைவர் மற்றும் புரட்சித்தலைவி அம்மா ஆகிய மாபெரும் தலைவர்களால் உருவாக்கப்பட்டு, வளர்த்தெடுக்கப்பட்ட ஒரு பேரியக்கம். கழகத்தொண்டர்கள் பலபேர் இரத்தம் சிந்தி தங்கள் இன்னுயிரை தியாகம் செய்து காப்பாற்றிய இந்த இயக்கத்தை, இன்றைக்கும் கோடானு கோடி கழகத் தொண்டர்கள்தான் தாங்கி பிடித்துக்கொண்டிருக்கிறார்கள். இந்த உண்மையை உணர்ந்து, கழகத்தொண்டர்களின் எண்ணத்தை ஈடேற்றிடும் வகையில் அனைத்து சக்திகளும் ஒன்றிணைவது காலத்தின் கட்டாயம். இன்றைக்கு இதுதான் தமிழ் மண்ணிற்கும், தமிழக மக்களுக்கும் நாம் செய்கின்ற பேருதவியாக அமையும்.

கழகம் ஒன்றிணையவேண்டும், மீண்டும் கழக ஆட்சி அமையவேண்டும் என்பதுதான் ஒவ்வொரு அடிமட்ட தொண்டர்களின் எண்ணமாக இருக்கிறது. தமிழக மக்களின் விருப்பமும் இதுதான். நானும் இதைத்தான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். ஆனால், கழகம் ஒன்றிணைவதற்கு யார் இடையூறாக இருந்தாலும் அவர்கள் திமுக என்ற தீயசக்திக்கு மறைமுகமாக உதவி செய்பவர்களாகத்தான் கருதமுடியும். எனவே, திமுகவின் கோரப்பிடியிலிருந்து தமிழகத்தை மீட்டெடுக்க ஒன்றுபட்ட வலிமைமிக்க அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமாக அனைவரும் ஓரணியில் திரள்வோம். திமுக தலைமையிலான மக்கள் விரோத ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப அனைவரும் ஒன்றுபடுவோம் வென்று காட்டுவோம் என்பதை இந்நேரத்தில் மீண்டும் வலியுறுத்துகிறேன்” என தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share