“பசும்பொன்னில்  முக்கிய முடிவை  எடுக்கிறேன்” : ஜெ.நினைவிடத்தில் வேண்டிய சசிகலா

Published On:

| By Kavi

“நாளை சில முக்கிய முடிவுகளை எடுக்கவுள்ளோம்” என்று ஜெயலலிதா தோழியான சசிகலா கூறியுள்ளார். 

சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில் அதற்கான பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. அதிமுகவை பொறுத்தவரை பாஜக, அமமுக, பாமக உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்துள்ளது. அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஓபிஎஸ் இப்போது தனியாக இருக்கிறார். அவர் முதல்வர் ஸ்டாலினை சந்தித்திருப்பதால் திமுகவில் இணையப்போகிறார் என்றும் சொல்லப்படுகிறது. 

ADVERTISEMENT

ஆனால் தனது நிலைப்பாட்டை அதிகாரப்பூர்வமாக அவர் சொல்லவில்லை. 

இன்னொரு பக்கம் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழியான சசிகலா, கடந்த சில வாரங்களாகத் தனது ஆதரவாளர்கள் மற்றும் முன்னாள் அதிமுக நிர்வாகிகளுடன் தொடர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

ADVERTISEMENT

நாளை ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு  பசும்பொன்னில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் பொதுக்கூட்டத்தை சசிகலா  நடத்தவுள்ளார். 

இதையொட்டி இன்று (பிப்ரவரி 23) சென்னை மெரினா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர். ஜெயலலிதா நினைவிடங்களில் மரியாதை செலுத்தினார். 

ADVERTISEMENT

இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  “எங்களுடைய தலைவர்கள் அண்ணா அவர் வழியையே பின்தொடர்ந்து புரட்சித் தலைவர் மற்றும் அம்மா வழியில் நானும் பயணிக்கிறேன். நாளைக்கு பசும்பொன்னில் அம்மா பிறந்தநாள் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறேன். அப்போது  சில முடிவுகளை எடுக்கிறோம். அதற்கு முன் எங்கள் தலைவர்களிடம் ஆசிர்வாதம் வாங்க வேண்டும் என்று இன்று வந்து அவர்களிடம் சொல்லி வேண்டிவிட்டுப் புறப்படுகிறேன். 

நாளைக்கு நீங்கள்  பசும்பொன் நிகழ்ச்சியில் கட்டாயம் கலந்துகொள்ள வேண்டும். நாளைக்கு ஒரு நல்ல தகவலை சொல்கிறேன். அங்கே பார்க்கலாம்” என்றார். 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share