அண்ணா அறிவாலயம், கலைஞர் நினைவிடம் முன்பு இன்று (டிசம்பர் 30) தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தூய்மைப் பணிகளை தனியாருக்கு ஒப்படைக்கும் தமிழக அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், தங்களின் பணிகளை நிரந்தரம் செய்யக் கோரியும், ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் தூய்மை பணியாளர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த 27ஆம் தேதி, தலைமைச் செயலகத்தை நோக்கி பேரணியாகச் செல்ல முயன்ற நூற்றுக்கணக்கான தூய்மை பணியாளர்களை போலீசார் பிராட்வே பேருந்து நிலையத்தில் வைத்து கைது செய்தனர்.
இந்நிலையில் இன்று அண்ணா அறிவாலயம் முன்பு சாலையில் அமர்ந்து சென்னை மாநகராட்சியில் உள்ள 5 மற்றும் 6ஆவது மண்டலங்களில் பணியாற்றி வரும் தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் நடத்தினர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
எனவே அவர்களை குண்டுகட்டாக கைது செய்து போலீசார் அப்புறப்படுத்தினர். அப்போது போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இந்தசூழலில் கலைஞர் நினைவிடத்தில் மற்றொரு தரப்பு தூய்மை பணியாளார்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள், ‘கலைஞர் சமாதியை நோக்கி அமர்ந்து, நீங்கள் இருந்திருந்தால் எங்களுக்கு இந்த நிலை வந்திருக்காது… சரியான வேலை கொடுத்திருப்பீர்கள்” என அழுதபடி தலைவரிடம் கோரிக்கை வைப்பது போல் கோஷம் எழுப்பினர்.
அதேபோன்று தங்களது கையில், “முதல்வரே 2026 புத்தாண்டில் நாங்கள் வாழ்வதா? வீழ்வதா? என கேள்வி எழுப்பும் பதாகைகளையும் கையில் வைத்திருந்தனர்.
இவர்கள் சுற்றுலா பயணிகள் போல் உள்ளே நுழைந்து, கலைஞர் நினைவிடத்தில் சுற்றி அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த தகவல் அறிந்து அங்கு வந்த நூற்றுக்கணக்கான போலீசார், அவர்களை கைதுசெய்து அழைத்துச் சென்றனர்.
தூய்மை பணியாளர்களை போன்று சென்னையில் இடைநிலை ஆசிரியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
முன்னதாக பணி நிரந்தரம் கோரி செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். வரும் 6ஆம் தேதி முதல் அரசு ஊழியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது,
