தேங்கியிருந்த மழைநீரில் கால் வைத்த போது மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த தூய்மை பணியாளர் வரலட்சுமி குடும்பத்திற்கு இழப்பீடாக ரூ.20 லட்சம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் நேற்று இரவு முதல் மழை பெய்து வருகிறது. இதனால் பெரும்பாலான சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
இந்த நிலையில் இன்று அதிகாலையில் வழக்கம்போல் பணிக்கு சென்ற கண்ணகி நகரைச் சேர்ந்த தூய்மைப் பணியாளர் வரலட்சுமி (வயது 30), அப்பகுதியில் மின்கம்பி அறுந்து விழுந்தது தெரியாமல் மழை நீரில் கால் வைத்த போது மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார்.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வரலட்சுமியின் கணவர் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 4 ஆண்டுகளாக வேலைக்கு செல்லவில்லை. அவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். வரலட்சுமியின் சம்பளத்தை மட்டுமே நம்பி குடும்பம் நடத்தி வந்தது அவரது இழப்பு அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது வரலட்சுமியை இழந்து நிர்க்கதியாக நிற்கும் அவரது குடும்பத்திற்கு உடனடியாக இழப்பீடு வழங்கக் கூறி அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து போலீசாரை முற்றுகையிட்டனர்.
இந்த நிலையில் உயிரிழந்த வரலட்சுமியின் குடும்பத்துக்கு தமிழக அரசின் மின்சார வாரியம் சார்பில் ரூ.10 லட்சம், தனியார் நிறுவனம் சார்பில் ரூ.10 லட்சம் என மொத்தம் ரூ.20 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.