சேலத்தில் ரவுடி கொலை… டிஐஜி சொன்ன ஷாக் தகவல்!

Published On:

| By Selvam

சேலத்தைச் சேர்ந்த ரவுடி ஜான் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் மூன்று பேரை போலீசார் இன்று (மார்ச் 19) சுட்டுப்பிடித்தனர். Salem murder three person

சேலம் கிச்சிப்பாளையம் எஸ்எம்சி காலனியை சேர்ந்தவர் ஜான் (எ) சாணக்யா. இவருக்கு சரண்யா என்ற மனைவி மற்றும் ஒரு மகன் உள்ளனர். இவர் மீது சேலம் கிச்சிளிபாளையம், அன்னதானப்பட்டி, செவ்வாய்ப்பேட்டை உள்ளிட்ட காவல் நிலையங்களில் கொலை, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளது.

தற்போது திருப்பூர் மாவட்டம் பெரியபாளையத்தில் தனது குடும்பத்தினருடன் ஜான் வசித்து வருகிறார். இந்தநிலையில், வழக்கு ஒன்றுக்காக சேலம் அன்னதானப்பட்டி காவல் நிலையத்தில் கையெழுத்து இடுவதற்காக மனைவி சரண்யாவுடன் ஜான் சென்றுள்ளார்.

காவல்நிலையத்தில் கையெழுத்து போட்டுவிட்டு காரில் இருவரும் திருப்பூர் சென்றபோது, ஈரோடு நசியனூர் பகுதியில் பின்னால் வந்த கார் மோதியுள்ளது. காரில் இருந்து இறங்கிய மர்மநபர்கள் ஜானை வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றனர்.

இதனை தடுக்க முயன்ற ஜானின் மனைவி சரண்யாவுக்கு வெட்டுக்காயம் ஏற்பட்டது. உடனடியாக அவர் அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்த கொலை சம்பவம் தொடர்பாக ஈரோடு மாவட்டம் சித்தோடு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்தநிலையில், ஜானை கொலை செய்துவிட்டு தப்பியோடிய கும்பல் ஈரோடு மாவட்டம் பவானி அருகே பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்ற டிஎஸ்பி ரத்தினக்குமார் தலைமையிலான போலீசார், கொலை சம்பவத்தில் ஈடுபட்ட சதீஷ், சரவணன் மற்றும் பூபாலன் ஆகிய மூன்று பேரையும் துப்பாக்கியால் சுட்டுப்பிடித்தனர். துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்தவர்கள் பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

அவர்களை கோவை சரக டிஐஜி சசிமோகன் சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சசிமோகன்,

“இன்று சித்தோடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சேலத்தைச் சேர்ந்த ஜான் என்பவர் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் தொடர்புடைய கைதிகள் தப்பித்து சென்றனர். அவர்களை கைது செய்ய போலீசார் சென்றபோது தாக்க முற்பட்டனர். இதனால் தற்காப்புக்காக துப்பாக்கியால் சுடவேண்டிய சூழல் ஏற்பட்டது. அவர்கள் மருத்துவனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மற்ற எதிரிகள் மீது வழக்கு விசாரணையின் படி கைது செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்தார். Salem murder three person

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share