டாம்க்ரூஸ்
தமிழ் திரையுலகில் தற்போது ‘ஹாட்’டான செலிப்ரெட்டி ஆக இருந்து வருகிறார் இசையமைப்பாளர் சாய் அப்யங்கர். சூர்யா, அல்லு அர்ஜுன், ராகவா லாரன்ஸ் எனப் பல நட்சத்திரங்களின் படங்களுக்கு அவர் இசையமைத்து வருகிறார். சில ஆண்டுகளுக்கு முன்னர் அனிருத்துக்கு எத்தகைய வரவேற்பு கிடைத்ததோ, தற்போது அதைவிட ஒரு படி மேலான முக்கியத்துவம் ஊடகங்களில் சாய்க்கு கிடைத்து வருகிறது.
அவர் இசையமைப்பில் முதல் படமாக வெளியாகவிருக்கிறது ‘பல்டி’. உன்னி சிவலிங்கம் இயக்கியுள்ள இப்படம் மலையாளத்தில் மட்டுமல்லாமல் தமிழிலும் வெளியாகிறது.
பாலக்காடு அருகேயுள்ள கிராமங்களில் நிகழ்வதாக இப்படத்தின் கதை வடிவமைக்கப்பட்டுள்ளதாகச் சமீபத்தில் நடந்த ‘பல்டி’ பத்திரிகையாளர் சந்திப்பில் கூறியிருந்தார் இயக்குனர் உன்னி சிவலிங்கம்.
அது மட்டுமல்லாமல், சாய் அப்யங்கர் வேறு படங்களுக்கு இசையமைக்க ஒப்புக்கொள்வதற்கு முன்னதாகவே அவரைத் தனது படத்திற்கு இசையமைக்கக் கேட்டு சந்தித்ததாகத் தெரிவித்தார். ‘ஆச கூட’ என்ற ஆல்பம் பாடலே அவரைத் தேடிச் செல்லக் காரணம் என்று குறிப்பிட்டார்.
பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய சாய் அப்யங்கர், ’பல்டி’ சூப்பராக உருவாகியிருப்பதாகக் கூறினார். மிகவும் ஆர்வத்தோடு அதன் பின்னணி இசை பணிகளில் ஈடுபட்டதாகக் குறிப்பிட்டார்.
பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தபோது, ‘நான் இசையமைப்பாளர் அனிருத்துக்கு போட்டி இல்லை’ என்றார். அவர் பல சாதனைகளை படைத்திருப்பதாகவும், இப்போதுதான் தனது இசைப்பயணத்தைத் தொடங்கி இருப்பதாகவும் கூறினார்.
இப்போதிருக்கும் இசையமைப்பாளர்கள் ‘ட்ரெண்டிங்’ அழுத்தத்திற்கு உள்ளாக வேண்டியிருக்கிறதே என்ற கேள்விக்கு, ”நான் இன்ஸ்டாவிலோ, ட்விட்டரிலோ இல்லை என்பதால் ‘பிரஷர்’ பஞ்சாயத்து இருக்காதுன்னு நினைக்கறேன்” என்று சொல்லிச் சிரித்தார்.
“இந்த ரெண்டு விஷயங்களும் டைமை சாப்பிடுதுன்னு நினைக்கறேன். அதனால இப்போ என்கிட்ட டைப் பேடு மொபைல்தான் இருக்கு. அதைத்தான் கம்யூனிகேஷனுக்கு யூஸ் பண்றேன். மற்றபடி விமர்சனங்கள், ஆலோசனைகளைக் கேட்கத் தயாராக இருக்கிறேன்” என்று தெரிவித்தார் சாய் அப்யங்கர்.
’ட்ரெண்டிங்’ பாடல்களை தந்து நம்மை இன்ஸ்டாவிலும் ட்விட்டரிலும் மூழ்கடிக்கிற ஒரு பிரபலத்திற்கு அவற்றில் ‘அக்கவுண்டே’ இல்லையா? இது நிச்சயம் ரசிகர்களுக்கு அதிர்ச்சி தர்ற விஷயம் தான்.